செய்தியரங்கம்
![]() | ![]() |
அதிபர் கர்சாய் |
ஆப்கான் அதிபருக்கு முழு வெற்றிகிடைக்கவில்லை
ஆப்கானிய அதிபர் தேர்தல் முறைகேடுகள் பற்றி விசாரித்து வந்த அதிகாரிகள், அதிபரைத் தேர்வுசெய்வதற்கு இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு தேவைப்படும் என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் நடந்த வாக்கெடுப்பில், முழுவெற்றி பெறுவதற்கு தேவையான வாக்குகளை பெற ஹமீத் கர்சாய் தவறிவிட்டார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விசாரணை முடிவு சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், ஆனால் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் ஆணையமோ முடிவை ஏற்க மறுத்துள்ளது.
தன்னுடைய வெற்றியை அபகரிக்கின்ற ஒரு செயல் இது என கர்சாய் நம்புவதாக காபூலில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நடப்பதைத் தடுக்கும் முயற்சிகளில் இறங்கப்போவதாக கர்சாய் எச்சரித்துள்ளார்.
தெற்கு வசிரிஸ்தானில் பாகிஸ்தானிய இராணுவ நடவடிக்கை தொடர்கிறது
![]() | ![]() |
பாகிஸ்தானிய பீரங்கி |
அல்கயீதா மற்றும் தாலிபன்களுக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, ராணுவ படையினர் தெற்கு வசிரிஸ்தான் பிராந்தியத்தில் ஆழ ஊடுறுவி தாக்குதல்கள் நடத்தி வருவதாக பாகிஸ்தான் ராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஜெனரல் அத்தர் அப்பாஸ் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின்போது கிளர்ச்சிக்காரர்கள் பலரை ராணுவத்தினர் கொன்றதாக ஜெனரல் அப்பாஸ் தெரிவித்தார்.
ராணுவ தாக்குதல் நடவடிக்கையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மேடான பகுதிகள் பலவற்றை ராணுவத்தினர் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார். ஆனால் அவரது இந்த கூற்றுக்களை பக்கசார்பற்ற முறையில் உறுதிசெய்ய இயலவில்லை.
அதேசமயம், ராணுவத்தினருக்கு தாங்களும் கடும் சேதத்தை ஏற்படுத்தியதாக தாலிபன்கள் கூறியுள்ளனர். ராணுவம் ஒப்புக்கொண்டதைவிட மேலும் பல ராணுவத்தவர்கள் கொல்லப்பட்டதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமைகளை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது. இந்த படை நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் ராணுவம், அரசாங்கத்தைச்சேர்ந்த உயரதிகாரிகளுடன் கலந்து பேசுவதற்காக அந்த பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உயர் கட்டளை அதிகாரி இஸ்லாமாபாத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அணுதிட்டம் தொடர்பான சமரச திட்டத்தில் இருந்து விலகுகிறது இரான்
![]() | ![]() |
யுரேனியத்தை செரிவூட்டக்கூடிய இரானிய மையம் |
இரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான நெருக்கடியைத் தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்டிருந்த ஒரு சமரச ஏற்பாட்டில் இருந்து இரானிய அரசாங்கம் பின்வாங்குகிறது என்று செய்திகள் வெளியான நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் வியன்னாவில் சர்வதேச பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன.
இரான் ஏற்கனவே செறிவாக்கம் செய்யப்பட்ட தன்னுடைய யுரேனியத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும், அந்த யுரேனியம் ஆராய்ச்சி அணுவுலையில் பயன்படுத்தப்படக்கூடியதாக மாற்றும் வழிமுறை வெளிநாட்டில் மேற்கொள்ளப்படும் என்பதாக உலக வல்லரசு நாடுகள் முன்மொழிந்திருந்த சமரச ஏற்பாடு அமைந்திருக்கிறது.
ஆனால், இரான் தன்னுடைய செறிவாக்கல் நடவடிக்கைகளை இடைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது இந்த சமரச ஏற்பாட்டின் பொருள் அல்ல என்று இரான் அணுசக்தி அமைப்பின் சார்பாகப் பேசவல்லவர் வியன்னா கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக கருத்து வெளியிட்டிருந்தார்.
வியன்னாவில் நடக்கும் பேச்சுக்கள் தோல்வியுற்றால், இரான் தற்போதைய அளவுகளை விட அதிகமாக யுரேனியம் செறிவாக்கலில் ஈடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாயுக்கள் வெளியீடு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் பேரழிவு -பிரவுன் எச்சரிக்கை
![]() | ![]() |
ஒரு ஜப்பானிய ஆலை |
புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது தொடர்பில் வரும் டிசம்பர் மாதம் கோபன்ஹேகனில் நடக்கும் மாநாட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், பேரழிவுமிக்க பின்விளைவுகள் ஏற்படும் என பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் எச்சரித்துள்ளார்.
அடுத்த ஐம்பது ஆண்டு காலத்துக்கான புவியின் காலநிலை வழித்தடத்தை திசைத்திருப்ப பேச்சுவார்த்தையாளர்களுக்கு ஐம்பது நாட்களுக்கும் குறைவான காலமே எஞ்சியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
வெப்பவாயுக்களை அதிகம் வெளியிடும் நாடுகளுடைய பிரதிநிதிகள் கலந்துகொண்ட லண்டன் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் பிரவுன், போதிய அளவுக்கு விரைவாக முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும், இந்த முட்டுக்கட்டையைத் தகர்க்க உலகத் தலைவர்கள் ஒருவரோடு ஒருவர் நேரடியாக கலந்து பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
![]() | ![]() |
ஐரோப்பிய ஒன்றியம் |
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சலுகை நீட்டிப்பில் சிக்கல்
ஐரோப்பிய ஆணையம், இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகம் செய்ய ஏற்றுமதித் தீர்வையிலிருந்து விலக்கு அளிப்பது போன்ற சலுகைகளைத் தரும் ஜி.எஸ்.பி ப்ளஸ் என்ற திட்டத்தின் கீழ் தொடர்ந்து சலுகைகளைப் பெற தகுதி பெற்றிருக்கிறதா என்பதை ஆராய நியமித்த விசாரணைக்குழு, அதன் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறது.
இந்த அறிக்கையில், இலங்கை இந்த ஜி.எஸ்.பி. ப்ளஸ் திட்டத்தின் கீழ் அளித்த உறுதிப்பாடுகளை மீறியிருப்பதாகவும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்பாடு, சித்ரவதைக்கெதிரான உடன்பாடு, குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்பாடு ஆகிய மூன்று ஐ.நா. மன்ற மனித உரிமைகள் உடன்பாடுகள் விஷயத்தில் இலங்கையின் செயற்பாடுகளில் குறைகள் காணப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கையை அடுத்து இலங்கைக்கு ஜி.எஸ்.பி. ப்ளஸ் திட்டத்தின் கீழ் தொடர்ந்து வர்த்தக சலுகைகளை வழங்குவதா அல்லது இந்த திட்டத்திலிருந்து இலங்கை பயன் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் ஆணையம் ஆராயும் என்று ஆணையத்தின் வர்த்தகத்துக்காக பேசவல்ல லூட்ஸ் கூல்னர் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய கூல்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து சரியாக சொல்ல முடியாது என்றார்.
"ஆனால் இந்த கணிப்பு அறிக்கையின் விளைவாக வந்த ஆதாரம் மிகவும் தெளிவாக இருக்கிறது. அதாவது இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் அது. எனவே வர்த்தக சலுகைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க ஒரு பிரேரணையை, ஆலோசனையை நாங்கள் தயாரித்து சமர்பிப்போம்" என்றார் லூட்ஸ்
இலங்கை இந்த திட்டத்தின் கீழ், ஐரோப்பாவுக்கு ஆயத்த ஆடைகள், மீன் போன்றவற்றை சலுகை அடிப்படையில் ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு மட்டும், சுமார் 1.24 பில்லியன் யூரோக்கள் பெறுமான பொருட்கள் இலங்கையிலிருந்து ஐராப்பிய ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் மீது இறக்குமதி தீர்வை விதித்திருந்தால் அதன் மூலமாக 78 மில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிடைத்திருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த திட்டம் வளர்முக நாடுகளில் நீடிக்கத்தக்க வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று.
இந்தோனிஷியாவில் தடுத்து வைக்கப்பட்ட கப்பலில் நன்கு அறியப்பட்ட மனித கடத்தல்காரர் உள்ளதாக கூறுகிறது ஆஸ்திரேலியா
![]() | ![]() |
தடுத்து வைக்கப்பட்ட கப்பலில் உள்ளவர்கள் |
ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று, இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்ட சுமார் இருநூற்றி ஐம்பதுக்கும் அதிகமான இலங்கையைச்
சேர்ந்த தஞ்சம் கோருவோர் இருக்கும் படகில் மிகவும் நன்கு அறியப்பட்ட மனித கடத்தல்காரர் ஒருவர் இருந்ததாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கேப்டன் பிராம் என்று அறியப்படும் அந்த நபர், மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றங்கள் தொடர்பில் இந்தோனேஷியாவில் தண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த தஞ்சம் கோருவோரின் கப்பல் தற்போது இந்தோனேஷியாவின் துறைமுகம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அதில் இருப்பவர்கள் அந்த படகை விட்டு இறங்க மறுத்து வருகிறார்கள். ஆஸ்திரேலிய கடற்பரப்பிற்கு வரும் அகதி தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு மிகப்பெரிய அளவு உயர்ந்திருக்கிறது.
காலநிலை மாற்றம் தொடர்பான இந்தியக் கொள்கை மாற்றம் பெறுமா?
![]() | ![]() |
கரியமில வாயுவை வெளியிடும் அனல் மின் நிலையம் |
புவியின் காலநிலை மாற்றம் தொடர்பில் இந்தியா இதுவரை கடைபிடித்து வரும் கொள்கையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியதாக டைம்ஸ் ஆப் இந்தியா என்கிற இந்திய தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது காலநிலை பாதிப்புக்கள் தொடர்பில், உலக அளவில் இதுவரை காலமும் வளர்ந்து வரும் நாடுகளின் பக்கம் இருக்கும் இந்தியா, இனிமேல் வளர்ந்துவிட்ட நாடுகள் பக்கம் மாறவேண்டும் என்றும், அது தான் இந்தியாவுக்கு நன்மை பயக்கும் என்றும் இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாக அந்த நாளிதழின் செய்தி கூறுகிறது.
காலநிலை மாற்றம் தொடர்பில் ஐ.நா.வால் கூட்டப்பட்டிருக்கும் சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் பின்னணியில் இவரது இந்த கடிதம் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. இந்த கடிதம் குறித்து காலநிலை மாற்றம் தொடர்பிலான செயற்பாட்டாளர் கருணாகரன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்சியில் கேட்கலாம்.
![]() | ![]() |
ஜென்சன் பட்டன் |
பார்முலா 1 அதிவேகக் கார் பந்தய விளையாட்டில் உலக சாம்பியனாக பிரிட்டனின் ஜென்சன் பட்டன் வந்திருக்கிறார். பிரசிலில் நடந்த கிராண்ட் பிரி பந்தயத்தில் பட்டன் இப்பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
கனடாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 7 ஆட்டங்கள் கொண்ட தொடரை விளையாடிவரும் இந்திய ஹாக்கி அணி, ஐந்தாவது ஆட்டத்தின் முடிவில் 4-0 என்ற முன்னிலைக்கு சென்றிருப்பதன் மூலம் தொடரை வென்றுள்ளது.
சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் கொழும்பில் நடத்திய ஜூனியர் டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த தினேஷ்கந்தன் தங்கராஜா வெற்றிபெற்றுள்ளார்.
0 Response to "செய்தியரங்கம்"
แสดงความคิดเห็น