வவுனியாவில் புதிய சிறைச்சாலை கட்டிடத்தைப் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி திறந்து வைப்பு

வவுனியா நீதிமன்ற வளாகத்துடன் இணைந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கட்டிடத்தை பிரதி நீதியமைச்சர் வி.புத்திரசிகாமணி செவ்வாய்க்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.
வவுனியாவில் ஏற்கனவே அமைந்திருந்த விளக்கமறியல் சிறை அமைந்திருந்த இடத்தில் 9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாடிக்கட்டிடச் சிறையில் 300 பேர் வரையில் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைபவத்தில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் வீ.ஆர் டி சில்வா, சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் வவுனியா மாவட்ட நீதவான் எம்.அலெக்ஸ்ராஜா, மன்னார் மாவட்ட நீதவான் ஜ~ட்சன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம்.சிற்றம்பலம், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன் மற்றும் பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள், சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள், வர்த்தகர் சங்க உபதலைவர் ரீ.கே.இராஜலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனுராதபுரம் மற்றும் தென்பகுதி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டபோது அவர்களது உறவினர்கள் அங்கு சென்று அவர்களைப் பார்ப்பதில் அனுபவித்து வந்த பல சிரமங்கள் இந்த சிறைச்சாலை அமைக்கப்பட்டதன் மூலம் நீக்கப்படுவதாக இங்கு உரையாற்றிய பலரும் தெரிவித்தனர்.
வவுனியாவில் ஒரு சிறைச்சாலையை அமைக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கமும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோரும் பெரும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர் என்பதும், முன்னாள் வவுனியா அரச அதிபர் கே.கணேஸ் உட்பட பல முக்கியஸ்தர்கள் இதற்காகப் பாடுபட்டார்கள் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது,
0 Response to "வவுனியாவில் புதிய சிறைச்சாலை கட்டிடத்தைப் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி திறந்து வைப்பு"
แสดงความคิดเห็น