இடம்பெயர்ந்த மக்களை வலுக்கட்டாயமாக முகாம்களில் தடுத்து வைத்துள்ளமை அரசமைப்புக்கு முரணானது! தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூட்டறிக்கை!

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை வலுக்கட்டாயமாக முகாம்களில் தடுத்து வைத்துள்ளமை இலங்கையின் அரசமைப்புக்கு முரணானது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறும் செயல் என ஐந்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூட்டாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இந்த மக்களை உடனடியாக விடுவிக்குமாறும் அக்கட்சிகள் கோரியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஆர். சம்பந்தன், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வீ. ஆனந்தசங்கரி, அகில இலங்கை ஐக்கிய முன்னணி சார்பில் கே.விக்னேஸ்வரன் ஆகியோர் ஒப்பமிட்டு கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் தமது பகுதிகளுக்குச் செல்வதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும்இ இராணுவ நிர்வாகமும் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டு முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் வலுக்கட்டாயமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது; அரசமைப்பிற்கு முரணானது; சர்வதேச மனித உரிமை வழக்காறுகளுக்கு எதிரானது. இந்த மக்கள் உடனடியாக தமது வீடுகளுக்குத் திரும்புவதற்காக விடுவிக்கப்படவேண்டும்.
தமது வாழ்வாதாரத்தை எவ்வித இடையூறுமின்றி ஆரம்பிப்பதற்கும் அல்லது தமது உறவினர்கள், நண்பர்களுடன் தங்குவதற்கும், தமது விருப்பத்தின்படி வேறு எங்காவது தங்குவதற்கு உள்ள உரிமையை பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கப்படவேண்டும். குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவுள்ளவர்களை மேலும் தாமதமின்றி நீதிமன்றில் ஆஜராக்கவேண்டும். முகாம்கள் திறந்திருக்க வேண்டும் முகாம்கள் நீடித்திருக்கும் காலம்வரை உறவினர்கள், மதகுருமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஐ.நா. அமைப்புகள், ஊடகவியலாளர்கள், உள்நாட்டு சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் செல்வதற்கு ஏற்றவகையில் அவை திறந்திருக்கவேண்டும்.
வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மிக மோசமான துயரங்களை இரண்டு தசாப்பதங்களாக அனுபவித்துள்ள முஸ்லிம் மக்கள் தமது பகுதிகளுக்குத் திரும்பி தமது வாழ்வாதாரத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதேபோன்று கிழக்கில் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த நிலையிலுள்ள அனைவரையும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றவேண்டும்.
வடமாகாணம் மற்றும் கிழக்கில் சில பகுதிகளுக்குச் செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்படவேண்டும். இதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் முறையும் அடிப்படை உரிமையை மீறுவதாகும். இதுவும் நீக்கப்படவேண்டும். வடபகுதியில் காணப்படும் ஊரடங்குச் சட்டம் மற்றும் இயல்பு நிலை மீதான கட்டுப்பாடுகள் நியாயப்படுத்த முடியாதவை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "இடம்பெயர்ந்த மக்களை வலுக்கட்டாயமாக முகாம்களில் தடுத்து வைத்துள்ளமை அரசமைப்புக்கு முரணானது! தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூட்டறிக்கை!"
แสดงความคิดเห็น