மீசாலை பொதுநூலகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார்!
.jpg)
உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
இவ்விழாவிற்குத் தலைமை தாங்கி திருமதி மதுமதி வசந்தகுமார் உரை நிகழ்த்தும் போது யாழ்.குடா நாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தற்போது முன்னெடுத்து வரும் அபிவிருத்திப் பணிகளைப் போன்று முன்பு இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் அவர்கள் ஓய்வொழிச்சல் இன்றி யாழ். குடா நாட்டு மக்களின் அபிவிருத்திப் பணிகளில் கூடிய கரிசனைகள் காட்டி வருவதனைச் சுட்டிக்காட்டியதுடன் அவரது பணிகளுக்குத் தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மலரும் மொட்டுக்கள் என்னும் தலைப்பில் முன்பள்ளி மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பரிசில்களை வழங்கிக் கௌரவித்ததுடன் உள்ளுராட்சி வாசிப்பு வாரத்தையொட்டி வர்த்தகர்கள் சனசமூக நிலையங்கள் சிறந்த உணவகங்கள் என்பன தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மீசாலைப் பொது நூலகக் கட்டிடத்திற்கு காணியை வழங்கியமைக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் கடந்த காலத்து ஜனநாயக வழி வந்ததாகக் கூறும் தமிழ் தலைமைகளும் ஆயுதப் போராட்ட வழிமுறையில் வந்த தமிழ் தலைமைகளும் முன்னெடுத்த தவறான போராட்ட வழிமுறைகளினால் தமிழ் பேசும் மக்கள் இரத்தம் சிந்தியது மட்டுமல்லாமல் பெரும் உயிரிழப்புகளையும் சந்திக்க நேர்ந்ததாகத் தெரிவித்தார்.
மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாது அவர்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து எத்தகைய கவனமும் செலுத்தாது தங்களது சொந்த வாழ்வை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழ் தலைமைகள் ஈடுபட்டு மக்கள் விரோத சக்திகளுக்குத் துணை போனதன் பயனாகத் தமிழ் மக்கள் பாரிய இடப்பெயர்வுகளுக்கும் சொத்தழிவுகளுக்கும் தமிழ் பேசும் மக்களின் இளம் தலைமுறையை வன்முறைக் கலாசாரத்திற்குப் பறிகொடுக்கும் நிலையும் ஏற்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தற்போதைய ஜனநாயகச் சூழலில் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தமது எதிர்கால நலன்களைக் கருத்திற் கொண்டு சரியான தலைமையின் கீழ் அணி திரள்வதன் மூலமே கடந்த 20 வருடங்களில் இழந்தவற்றை இரண்டு வருட காலத்தில் மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தென்மராட்சிப் பிரதேச செயலாளர் எஸ்.ஸ்ரீனிவாசன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச அமைப்பாளர் சூசைமுத்து அலெக்சாண்டர் சார்ள்ஸ் உட்பட சாவகச்சேரி வங்கி முகாமையாளர்கள் கைத்தொழில் வணிகர் மன்றத்தினர் தென்மராட்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
.jpg)







0 Response to "மீசாலை பொதுநூலகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார்!"
แสดงความคิดเห็น