குற்றப்புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த வழக்கிலிருந்து தமிழ் கூட்டமைப்பு -எம்.பி.க்கள் நால்வரும் விடுதலை

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கெதிராக குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நிசாந்த ஹப்பு ஆராச்சி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்போது குறித்த நான்கு தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்வதாக அறிவித்தார்.
பிரதிவாதிகளின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா நேற்று மன்றில் கூறுகையில், 08.10.2002 ஆம் ஆண்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான கனகலிங்கம் சிவாஜலிங்கம், சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் பாக்கியசெல்வம், செல்வராஜா கஜேந்திரன் ஆகிய நான்கு எம்.பி.க்களும் அரசியல் அமைப்பு பிரிவு 157 (அ) பிரிவை மீறியதன்மூலம் நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவளித்து வெளிநாடுகளில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளில் உரையாற்றியதன் காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தவறு புரிந்திருப்பதாகவும், அதனை விசாரணை செய்ய வேண்டுமெனவும் குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எனது கட்சிக்காரர்கள் 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை அரசின் இறமைக்கு எதிராக தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து வெளிநாடுகளில் உரையாற்றிமைக்காக இரண்டரை வருடங்கள் கழித்தபின்னரே முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன குற்றத்தடுப்புத் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்திருந்தார்.
இலங்கையில் பலபாகங்களிலும் இடம்பெற்ற பொங்குத் தமிழ் நிகழ்வுகளில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் இருப்பவர்கள் உரையாற்றியிருந்தபோதிலும் குறிப்பிட்ட நான்கு கட்சிக்காரர்கள் மாத்திரமே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை நீதிக்கு புறம்பான விடயமாகும். குறித்த இந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரமானது இந்த நீதிவான் நீதிமன்றத்துக்கு இல்லையென்பதுடன் மேன் முறையீட்டு நீதிமன்றத்துக்கே உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் தனது கட்சிக்காரருக்கெதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு வலிதான எந்தவொரு நேரடிச் சான்றோ, சூழ்நிலைச் சான்றோ இல்லாது தனியாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் ஒலிநாடாவில் மாத்திரம் தங்கி நின்று குற்றச்சாட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் இதுவரை எந்தவிதமான வலிதான சான்றும் முன்வைக்கப்படவில்லை. எனவே, குறித்த இவ்வழக்கை தள்ளுப்படி செய்து விடுதலை செய்ய வேண்டுமென்றும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா கேட்டுக்கொண்டார்.
சிரேஷ்ட சட்டத்தரணியின் வேண்டுதலையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தரப்பில் ஆஜராகிய பொலிஸ் அதிகாரி அவர்களால் நடாத்தப்பட்ட புலன் விசாரணையின் மேலதிக அறிக்கையை நேற்று சமர்ப்பித்ததுடன் குறித்த விசாரணைக்காக சட்டமா அதிபரின் ஆலோசனையை தான் பெற்றுக் கொண்டதாகவும், நான்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் குற்றங்களை நிரூபிப்பதற்கு அவசியமான எந்தவொரு வலிதான நேரடிச் சான்றோ சூழ்நிலைச் சான்றோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லையென்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், இருதரப்பு சமர்ப்பணங்களையும் நன்கு அவதானித்த கொழும்பு பிரதம நீதிவான் நிசாந்த ஹப்பு ஆராச்சி சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜாவின் வாதத்தை ஏற்று குறித்த நான்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களுக்கெதிரான குற்றச்சாட்டிலிருந்து விடுதலையளித்து தீர்ப்பு வழங்கினார்.
0 Response to "குற்றப்புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த வழக்கிலிருந்து தமிழ் கூட்டமைப்பு -எம்.பி.க்கள் நால்வரும் விடுதலை"
แสดงความคิดเห็น