
"நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இலக்கங்களில் கூறலாம். எனினும், நிலையான அரசியலும் சமாதானமுமே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் மக்களின் ஆணையை நாசமாக்கும் பிரிவினர் நாம் இல்லை.
எம்மிடம் தூரநோக்கமும் இலக்கும் இருக்கின்றன. அதனை வைத்தே நாம் எமது செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றோம்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் பின்னடைவைக் கொண்டமையினால் தங்கத்தை விற்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சிலர் கூறினர். அவர்கள் கூறியது போல தங்கம் எமது கையிருப்பில் இருந்திருந்தால் அதனை நாம் விற்பதற்கு தயங்கியிருக்க மாட்டோம் என்றும் அவர் சொன்னார்.
பட்டைய கணக்காளர் நிறுவனத்தின் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"நாட்டிற்கு தேவையான அறிவான சமூகத்தை உருவாக்கக் கூடிய இந்த சங்கத்திற்கு இன்றைய நாள் பெருமைக்குரிய நாளாகும். இச்சங்கத்தினால் கணக்காய்வாளர்கள் உள்ளிட்ட மத்திய வங்கி ஆளுநரும் உருவாக்கப்பட்டுள்ளார். 1952ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 4 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டு இயங்குவதுடன், வடக்கு, கிழக்கு, தெற்கு பிள்ளைகளின் கணக்காளர் கனவையும் நனவாக்கி வருகிறது.
கணக்காளர் சாதாரண சிறுவர்களின் உரிமையாக இருக்கின்றது. கிராமத்தின் சிறுவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. கீர்த்தி மிக்க வரலாற்றை கொண்டது போல இந்த நிறுவனத்திற்கு பொறுப்பு வாய்ந்த எதிர்காலம் இருக்கின்றது.
அச்சமான யுகத்தைக் கடந்தோம்
பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில் மேற்குலக நாடுகளின் வங்கிகள் பல சரிவுப் பாதையில் சென்றன. வேலைவாய்ப்பின்மை நாளுக்கு நாள் சரிந்து கொண்டே சென்றது. எரிபொருள், உணவு, பொருட்களின் விலைகள் அதிகரித்த வேளையில் நாம் நான்கு பக்கங்களிலுமான அச்சமான யுகத்தினை கடந்தோம்.
ஆனால், மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டதுடன் வேலைவாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
பொருட்களின் விலையேற்றத்தைக் காரணம் காட்டி வேலைவாய்ப்பற்றோரை அரசாங்க பிரிவுகளில் வேலை வழங்காது இருந்திருக்கலாம். அரசாங்கத்தின் செலவு அதிகரிக்கும் போது, நிறுவனங்களை நாம் தனியாருக்கு விற்பனை செய்திருக்கலாம்.
கொள்கையில் இருந்து விலகியிருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தன. எனினும், நாம் அதிலிருந்து விலகவில்லை. எமது திட்டத்தை தூரநோக்கத்துடன் முன்னெடுத்தோம். அந்த பயணம் மிகவும் ஆபத்தானது என்றாலும் நாம் பின்செல்லவில்லை. பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி கொடுத்தோம். இதன் மூலமாக எமக்கு சர்வதேச நாணயம் உட்பட பல்வேறு அமையங்களில் இருந்து உதவிகள் கிடைத்தன.
பொருளாதார தடையை தாண்டி முன்சென்று கொண்டிருக்கின்ற வேளையில் சிலர் அரசியல் நோக்கத்திற்காக பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களினால் பொருளாதாரமும் சீர்குலைக்கப்பட்டது. அவ்வாறானவர்கள் பிழையான ரீதியில் பொருளாதார சித்திரத்தை வரைந்தனர்.
சிலருக்கு சங்கங்கள் மூலமாக ஆதரவு கிடைத்தது. நாம் ஆரம்பித்த அன்றிலிருந்து பொருளாதாரம் சீர்குலையும் சீர்குலையும் என நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை கூறி வந்தனர்.
மனிதாபிமான நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அதன் மூலமாகவே அந்நிய செலாவணியை அதிகரித்துக் கொள்ள முடியும் எனவும் டொலரின் பெறுமதியை மட்டுப்படுத்த முடியும் எனவும் கூறினர். அத்துடன், நிலைமை தொடர்ந்தால் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என கடந்த நான்கு வருடங்களாக கூறியமை இன்னும் எமது காதுகளில் ஒலிக்கின்றன.
சர்வதேசத்துக்கு அச்சுறுத்தல்
பொருளாதாரம் தொடர்பில் தமது மனதில் உள்ள சித்திரத்தை பலரும் வரைந்து காட்டினர். கடனை கொடுக்க வேண்டாம் என கோரினர். கடன் கிடைத்ததன் பின்னர் அதிகமான வட்டி வீதம் என ஆர்ப்பரித்தனர். அரசாங்கம் மாறினால் கடனை கொடுக்க மாட்டோம் என சர்வதேசத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தனர்.
இவ்வாறான அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடனை பெற்றுக்கொண்ட நாம் புதிய நாணயத்தை அச்சிடும் போது அது தொடர்பில் பல்வேறு கதைகளை கட்டினர். பொருளாதார கணக்காய்வு தொடர்பில் பிழையான சித்திரத்தை காண்பித்தனர்.
அரச மற்றும் தனியார் துறையில் ஊழல் மோசடியை விரட்டியடிப்பதற்கு நாம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஊழலை ஒழிப்பதற்கான சட்டம் போதுமானது. எனினும், அதனை உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும். ஊழலுக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துவதே எமது நோக்கமாகும். ஊழலுக்கு ஆதரவான போராட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் என்பதுடன், இந்த நிறுவனத்திலிருந்து கல்வி கற்று வெளிநாடுகளுக்கு வெளியேறுகின்ற சுமார் 40 வீதமானோரை உள்நாட்டு அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவது தொடர்பில் நாம் எதிர்காலத்தில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்"என்றார்.