நியாமற்ற விமர்சனத்தை விடுத்து நாட்டை கட்டியெழுப்ப உதவுங்கள் மேற்குலக நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னர் நாட்டைக் கட்டியெழுப்பும் இலங்கையின் முயற்சிகளுக்கு மேற்குநாடுகள் உதவியளிக்க வேண்டுமே தவிர, நியாயமற்ற வகையில், மனித உரிமைகள் மீறல் குறித்தும் அகதிகளின் பராமரிப்பு தொடர்பாகவும் எம்மை விமர்சிக்கக்கூடாது. அத்துடன் விடுதலைப் புலிகளின் பிரசாரத்தை நம்பக்கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படும் முன்னர் அப்பகுதிகளிலுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, அவர்களை முகாமுக்கு வெளியே செல்ல அனுமதித்து கண்ணிவெடிகளில் சிக்கவைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். "லே பிகாரோ' என்ற இத்தாலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழர், சிங்களவர், முஸ்லிம்களிடையே பாரபட்சம் காண்பிக்க அரசாங்கம் விரும்பவில்லை. மேற்கு நாடுகள் எமக்கு உதவவேண்டும் எங்களை நம்பவேண்டும் புலிகளின் பிரசாரங்களை நம்பக்கூடாது.இடம்பெயர்ந்த மக்கள் சாத்தியமான அளவு விரைவாகக் குடியமர்த்தப்படுவார்கள். அவர்களுடன் தொடர்புகளை வைத்திருக்கும் முகாம் வாசிகளை நாம் இனங்காண வேண்டும். நாங்கள் மக்களை முகாம்களில் வைக்கவில்லை. விடுதலைப் புலிகள் அவர்களை பணயமாக தடுத்து வைத்திருந்தமையே இதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். லே பிகாரோ பத்திரிகைக்கு ஜனாதிபதி வழங்கிய பேட்டியின் விபரம் வருமாறு: கேள்வி : புலிகளுடன் மூன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தத்துக்கு முடிவுகண்டு கடந்த மே மாதம் வெற்றிவாகை சூடினீர்கள். இந்நிலையில் எவ்வாறு அமைதியை கொண்டுவந்து உங்கள் நாட்டை மீளக் கட்டியெழுப்பப்போகின்றீர்கள்? பதில் : முதலாவதாக வட பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். இதற்கு வசதியாக முதலில் அவர்களின் நிலங்களில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றி அவர்கள் பயிர்ச் செய்கையில் ஈடுபடக்கூடிய நிலையை உருவாக்கவேண்டும். இதற்கே முன்னுரிமை வழங்கப்படும். அதனை தொடர்ந்து நாம் நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும்.இதற்கென வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாம் அழைக்கின்றோம். கேள்வி: மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஏன் மந்தகதியில் உள்ளன? இவ்வருட இறுதிக்குள் அவர்களில் 80 வீதமானோரை மீள்குடியேற்றும் சாத்தியம் உள்ளதா? பதில்: எமக்குள்ள முட்டுக்கட்டை கண்ணிவெடிகளாகும். நாம் எதிர்பார்த்ததைவிட அதுவே பாரிய பிரச்சினையாகவுள்ளது. படையினர் இரவு பகலாக சளைக்காது இவற்றை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதேவேளை ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த வயோதிபர்களை விடுவித்துள்ளோம். தற்போது இரண்டு இலட்சத்து 20 ஆயிரம் அகதிகளே உள்ளனர். செப்டெம்பர் நடுப்பகுதியில் 50 ஆயிரம் பேர் வரையில் தமது இடங்களுக்கு திரும்பக்கூடியதாக இருக்கும். கேள்வி : இடம்பெயர்ந்த மக்கள் ஏன் முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்? பதில்: நிலக்கண்ணிவெடிகளில் சிக்கிவிடுவார்கள் என்ற காரணத்தினாலேயே நாம் அவர்களை விடுதலை செய்ய முடியாத நிலையில் உள்ளோம். மேலும் புலிகளுடன் தொடர்பு பட்டவர்கள் மற்றும் அல்லாதவர்கள் யார் என்பதனை தரம் பிரிக்கவேண்டியுள்ளது. எமது செயற்பாட்டினால் அவர்கள் முகாம்களில் அடைக்கப்படவில்லை. புலிகளே அவர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தனர். கேள்வி : யுத்த முடிவில் உங்களது படையினர், சிவிலியன்கள் பலரை கொன்றுவிட்டதாக மேற்கு நாடுகள் விமர்சிக்கின்றன. உங்கள் பதில் என்ன? பதில்: இந்தவகையான விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இதர நாடுகள் எவ்வாறு ஈடுகொடுக்கின்றன என்று எனக்கு தெரியாது. பயங்கரவாதிகளுடன் சண்டையில் ஈடுபடும் அரச படையினருக்கு நாம் கொடுப்பனவுகளை வழங்குகின்றோம். நாம் கிழக்கு மாகாணத்தை விடுவித்தபோது அங்கு சிவிலியன்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. வட மாகாணத்தை பொறுத்தவரை நாம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியிருந்தால் இராணுவத்தினர் பலரை இழந்திருக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. கேள்வி: யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் நீங்கள் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகின்றீர்கள்? அண்மையில் ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்தக்கு 20 வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது பரந்தளவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பதில்: பூரண சுதந்திரத்துடன் நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியுள்ளார். நீதிமன்ற தீர்ப்புக்களில் என்னால் தலையிட முடியாது. மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். எனினும் தீர்ப்புவழங்க முன்னர் நீதிமன்றத்தின் முன்பாக ஊடகவியலாளர் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. கேள்வி : இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதா? அதனை தடுக்க உங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவீர்களா? பதில்: அனைத்து நடைமுறைகளும் இடம்பெறும்வரை நாம் காத்திருக்கவேண்டும். தருணம் வந்ததும் நான் எனது தீர்மானத்தை எடுப்பேன். எனினும் ஊடகவியலாளர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நாம் கருதக்கூடாது. கேள்வி: இந்த கேள்வி உங்கள் நாட்டை பொறுத்தமட்டில் சர்வதேச விவகாரமாக உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? பதில் : இது புலிகளின் பிரசாரத்தினாலாகும். மேற்கை பொறுத்தவரையில் புலிகள் எதனை நினைத்தாலும் செய்ய முடியும். யாரை வேண்டுமானாலும் கொலை செய்ய முடியும். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது மிகவும் வெட்கக்கேடானது. கேள்வி: யுத்தம் முடிந்துவிட்டது. எப்போது அவசரகால சட்டம் நீக்கப்படும்? பதில் : சாத்தியமான அளவு விரைவாக நீக்கப்படும். எவ்வளவு பேர் புலிகளின் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதனை நாம் முதலில் பார்க்கவேண்டும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கேள்வி: இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? கிழமைகள் மாதங்கள் வருடங்கள் ? பதில் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் நீடிக்கலாம். என்னால் உறுதியாக கூற முடியாது. நியாயமற்ற வகையில் மேற்கு நாடுகள் எம்மை விமர்சிப்பதை நிறுத்தி உதவவேண்டும்.கேள்வி: எதிர்வரும் நவம்பரிலிருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்க உங்களால் முடியும். எப்போது அத்தேர்தல்கள் நடைபெறும்?பதில்: எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில்.கேள்வி: எதிர்வரும் வருட ஆரம்பத்தில் நடைபெறுமா?பதில்: ஆம்கேள்வி: தமிழர் பிரச்சினைக்கான தீர்வு நிகழ்ச்சித்திட்ட மொன்றுடன் நீங்கள் பிரசாரம் செய்வீர்களா?பதில்: ஆம். அதிகாரப் பகிர்வு மற்றும் உள்ளூராட்சி (மாகாண) சபைகளின் ஸ்தாபிப்பு என்பவற்றுக்கு வழிவகை செய்யும் 13 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த நாம் தயாராக இருக்கிறோம். போரின் காரணமாக மேற்படி ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தன. நாங்கள் இது தொடர்பில் சிறிது முன்னோக்கி செல்லவும் தயாராக உள்ளோம்.கேள்வி: இது தமிழ்த் தலைவர்களை திருப்திப்படுத்துமா?பதில்: எப்போதும் மக்கள் மேலதிகமாகவே கேட்பார்கள். ஆனால், மக்களுக்கு வேண்டியது அமைதியும் பாதுகாப்புமே. அவர்களுக்கு பாடசாலைகள் தேவையாகவுள்ளது. அவர்கள் போரை போதுமென்ற அளவுக்கு எதிர்கொண்டுள்ளார்கள். கேள்வி: நீங்கள் மேற்குலக நாடுகளால் கொண்டு வரப்படும் உதவிகளில் திருப்தியடைந்துள்ளீர்களா?பதில்: அகதிகளுக்கான உதவிகள் அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக செல்கின்றன. அந்நிறுவனங்கள் அவற்றில் சுமார் 40 தொடக்கம் 60 சதவீதமானவற்றை நிர்வாக விடயங்களுக்காக செலவிடுகின்றன. நாங்கள் இதை சுனாமியின்போது பார்த்தோம். கேள்வி: உங்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களை பிடிக்கவில்லை?பதில்: சில அரசசார்பற்ற நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவின. ஏனையவை தமது வேலைகளை செய்தன. ஆனால் ஐக்கிய நாடு முகவர் நிலையங்கள் கூட இயல்பு நிலைக்கு கொண்டுவரும் செயற்கிரமங்களை தாமதமாக்கின.கேள்வி: இராணுவத்தினரால் சடுதியாக நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளை போன்று தோற்றமளிக்கும் வீடியோ காட்சியொன்று பிரித்தானியாவில் ஒளிபரப்பப்பட்டது. இதன் காரணமாக எழுந்துள்ள கூர்மையான குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கப் போகிறீர்கள்?பதில்: அந்த வீடியோ காட்சி உருவாக்கப்பட்ட ஒன்று என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. விடுதலைப் புலி உறுப்பினர்கள் பிரசார நோக்கங்களுடன் இராணுவ சீருடையில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவது இது முதல் தடவையல்ல.கேள்வி: நீங்கள் திரிபோலியில் கேணல் கடாபியையும் ஹுகோ சாவேஸையும் சந்தித்தீர்கள். நீங்கள் பர்மா (மியன்மார்) சென்றீர்கள். மேற்குலக நாடுகளின் சிறந்த நண்பர்கள் அல்லாத தலைவர்களுடன் ஏன் நீங்கள் பகிரங்கமாக தொடர்ந்து காணப்பட்டீர்கள்?பதில்: மேற்குலக நாடுகள் எதுவும் என்னை வரவேற்கவில்லை. ஆனால், நட்புறவான நாடொன்றால் வரவேற்கப்பட்டபோது நான் சென்றேன். நாங்கள் அணிசேரா இயக்கத்தின் ஸ்தாபக நாடுகளில் ஒன்றாக உள்ளோம். எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது நான் இந்தியாவுக்கும் செல்கிறேன். கேள்வி: ஊடகவியலாளர்கள் காணாமல் போகிறார்கள். ஏனையோர் படுகொலை செய்யப்படுகின்றனர். இலங்கை மிகவும் கடுமையான ஜனநாயகமொன்றில் அங்கம் வகிக்கவில்லை?பதில்: இவை அனைத்தும் பிரசாரமாகும். ஊடக சுதந்திரம் உள்ளது. விமர்சன சுதந்திரம் உள்ளது. எதிர்க் கட்சியினர் ஜி.எஸ்.பி. முறைமை ஐரோப்பிய ஒன்றியத்தால் மீளப் புதுப்பிக்கப்படுவதற்கு ஆதரவைத் திரட்ட புரூஸல்ஸுக்கு சென்றார்கள். காணாமல்போன ஊடகவியலாளர்களில் பலர் மீளத்தோன்றி வெளிநாட்டுத் தூதரகங்களில் விசாக்களைக் கோரியுள்ளனர். நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்ய விரும்புகிறோம். சிங்களவர்கள், தமிழர்கள் அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவகையான பாரபட்சமும் காட்டப்படுவதை தவிர்க்க நாம் விரும்புகிறோம். மேற்குலக நாடுகள் விடுதலைப புலிகளின் பிரசாரத்தை செவிமடுப்பதை நிறுத்தி எம்மை நம்பி எமக்கு உதவவேண்டும் என நாம் விரும்புகிறோம். பிரான்ஸ் ஏனைய பல நாடுகளை விட நியாயமாக உள்ளது. அது பயங்கரவாதத்திற்கு எதிரான எமது போராட்டத்திற்கு ஆதரவளித்ததுடன் விடுதலைப் புலிகள் பக்கம் அந்நாடு ஒருபோதும் அணிசேரவில்லை.
0 Response to "நியாமற்ற விமர்சனத்தை விடுத்து நாட்டை கட்டியெழுப்ப உதவுங்கள் மேற்குலக நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்"
แสดงความคิดเห็น