
இலங்கையில் நடைபெற்ற தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வெற்றியை நாட்டை நேசிக்கும் மக்களின் வெற்றியாகவே கருதுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமது வெற்றிக்கு தென் மாகாண மக்கள் பெரும் பங்களிப்பு வழங்கியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இம்முறை தென் மாகாண சபைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்கியதன் மூலம் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார்.
மேலும் இந்த தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மக்கள் மஹிந்த சிந்தனைக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தொடர்பான தவறான கருத்துக்களை ஏற்படுத்துவதற்காக செயற்படும் குழுக்களுக்கு மாத்திரமின்றி சர்வதேச சமூகத்திற்கும் இந்த வெற்றியின் மூலம் தீர்மானமிக்க செய்தியொனறு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
தாய் நாட்டைக் காப்பாற்றிக்கொண்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்களின் ஆணை பெரும் திடகாத்திரமாக அமையுமென ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்காக ஒன்றிணையுமாறு அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுப்பதற்கு இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அரசியல், இன, மத, பேதங்களுக்கு கட்டுப்படாது நாட்டின் முன்னேற்றத்திற்கான ஒன்றிணைந்த தென் மாகாண மக்களை நன்றியுடன் நினைவகூர்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமைதியான தேர்தலொன்றை நடத்துவதற்கு காரணமாக அமைந்த தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் பொறுப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இலங்கை ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.