jkr

நடிப்பின் சிகரம் மனோகணேசன்.., புலிகளுக்கு பாவமன்னிப்பு வழங்கிய ரவூப் ஹக்கீம்.., இரட்டை வேடதாரிகளான தமிழ்க் கூட்டமைப்பு..; யாருடன் ஐக்கிய முன்னணி? எதற்காக ஐக்கிய முன்னணி?? -சாகரன் (கட்டுரை)


ஐக்கிய முன்னணி நல்ல விடயம்தான். பிரதானமாக இன்றைய கால கட்டத்தில் சிறுபான்மையான தேசிய இனங்களின் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளுக்கிடையேயான ஐக்கிய முன்னணிக்கான முயற்சிகள் மிகவும் நல்ல விடயமே. இன்று அவசியமும் கூட. ஆனால் யார் யாருடன் ஐக்கிய முன்னணி அமைப்பது!, என்ன இலக்குகளை - நோக்கத்தை அடைவதற்காக அந்த ஐக்கிய முன்னணி!, முன்னணிகான ஸ்தாபனரீதியான உறவுகளை என்ன அடிப்படைகளில் அமைப்பது. ஐக்கிய முன்னணிக்கான வேலைத்திட்டங்கள் என்னென்ன! போன்ற அடிப்படையான - முக்கியமான விடயங்கள் தொடர்பாக ஒரு கருத்தொற்றுமையை ஏற்படுத்திக் கொள்ளாமல் ஓர் ஐக்கிய முன்னணியை ஏற்படுத்த முடியுமா! அப்படித்தான் ஏற்படுத்திக் கொண்டதாக அறிவித்தாலும் அது எத்தனை நாளைக்கு நின்று பிடிக்கும்!

தமிழ்மக்களின் உரிமைகளை அரசுடன் பேச்சு வார்த்தை மூலம் வென்றெடுக்க நமக்கிடையே ஒருமித்த கருத்து நிலைப்பாட்டை உருவாக்குவதற்கான முன்னெடுப்புக்கள் இன்று பிரதானமே,
அதனை நோக்கமாகக் கொண்ட ஓர் ஐக்கிய முன்னணியும் அவசியமே! அதன் மூலமே இன்று பலவீனப்பட்டு நிற்கும் சிறபான்மைத் தேசிய இனங்களுக்கு ஓர் அரசியற் பலம் ஏற்படும் என்பது உண்மையே. தமிழ் பேசும் மக்களின் நலன்களில் உண்மையான அக்கறை உடையவர்களுக்கு இடையில் ஐக்கிய முன்னணியொன்றை அமைப்பது இன்றைய கால கட்டத்தில் அவசியமானதும் சரியானதும் கூட. இதற்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்கள் நலன்களின் மீது அக்கறையுடனும் இதய சுத்தியுடனும் அர்ப்பணிப்புடனும் ஏனையவர்களுடன் ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில், வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களின் அடிப்படையில், இணைந்து செயற்படத் தயாராக இருக்க வேண்டும்.

சிறபான்மைத் தேசிய இனங்களின் கட்சிகள் உண்மையில் மக்களின் நலன்கள்மீது அக்கறையுடையவர்களானால் இலங்கையில் இருக்கும் ஜனநாயக, இடதுசாரி மற்றும் முற்போக்கு கட்சிகளுடனும் அமைப்புகளுடனும்; இணைந்து செயற்படத்தயாராக வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தத்தமது இலக்குகள் இலட்சியங்கள் வேலை முறைகள் வேலை செய்யும் தளங்கள் ஆகியவற்றில் வேறுபட்டிருக்கலாம். ஆயினும் இலங்கைவாழ் அனைத்து மக்களினதும் வாழ்வில் சுபீட்சம் ஏற்பட வேண்டும், அனைத்து மக்களுக்கும் இடையில் சமாதானமும் சமரசமும் நிலவ வேண்டும், அனைத்து மக்களும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்ற அடிப்படைகளிலேயே ஒவ்வொரு கட்சியும் இருக்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பாருங்கள். அவர்களின் உருவாக்கத்தின் அடிப்படையே போலித்தனம், சுயநலம், தம்மை நம்பிய தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் துரோகம் இழைத்தமை. இதுவரை எந்த சந்தர்ப்பத்திலாவது உண்மையில் மக்களின் நலன்களில் அடிப்படையில் செயற்பட்டிருக்கிறார்களா? எப்போதும் இரட்டை வேடதாரிகள்தானே! புலிகள் இருந்தவரை புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்காகச் செயற்பட்டார்கள். இப்போது அடுத்த தேர்தலைக் கண்வைத்த தமிழ் மக்களின் மத்தியில் புலிப்பினாமிகளின் நிரல்களுக்காகச் செயற்படுகிறார்கள். அதேவேளை கொழும்பைக் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறார்கள்.

இதேபோலவே மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியும் உள்ளது. இது கொழும்புவாழ் தமிழர்களின் வாக்கு வங்கிகளை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் ஒரு ‘தனிநபர்’ கட்சியாகும். இவர் பாராளுமன்ற கதிரையை தாம் அலங்கரிப்பதற்காக தமிழ் மக்களின் ‘மனித உரிமை’ களைப்பற்றி பேசுபவர் போல் பாசாங்கு செய்பவர். இவர் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்ட குமார் பொன்னம்பலம் போலவே கொழும்பு மைய அரசியல் நடிகன்.

முஸ்லீம் மக்களின் தலைவர் அஷ்ரப் இற்கு பிறகு முஸ்லீம் காங்கிரசை தலைமை தாங்க வந்தவர் ரவூப் ஹக்கீம். பிழையான தலைமைத்துவ செயற்பாட்டினால் இன்று முஸ்லீம் மக்கள் மத்தியில் உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனது போல ஆகிக் கொண்டிருப்பவர். முக்கியமாக பிரபா – ரணில் ஒப்பந்த கால கட்டத்தில் புலிகளை சந்தித்து புலிகளின் முஸ்லீம் மக்கள் மீதான அனைத்து செயற்பாட்டிற்கும் பாவமன்னிப்பு வழங்கி முஸ்லிம் மக்கள் மீது புலிகள் கட்டவிழ்தது விட்ட கொலைகளையம் கொடூரங்களையும் சரியென ஏற்றுக் கொண்டவர். இதன் மூலம் முஸ்லீம் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்களையெல்லாம் கேவலப்படுத்தியவர். இவரின் கட்சி முஸ்லிம் மக்களின் உரிமைகள் பற்றி அவ்வப்போது ஒப்புக்கு கூக்குரல் போட்டாலும் எந்தவொரு உருப்படியான அரசியல் கோரிக்கையும் கிடையாது. கட்சித் தலைவர் பதவியையும் பாராளுமன்ற பதவியையும் தவிர இவருக்கு வேறெந்த அரசியல் இலக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் தொங்குவதைத் தவிர இவருக்கு வேறு அரசியல் மார்க்கம் இல்லை. அதனால் அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை எப்படியாவது ஆட்சிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற கனவில் இவர் அடாத பாடுபடுகிறார்.

மேற்குறிப்பிட்ட மூன்று கட்சியினரும் எந்த காலத்திலும் சிறுபான்மை மக்களின் நலன்களின் அடிப்படையில் அவர்களின் பிரதிநிதிகளாக செயற்பட்வர்கள் அல்ல. புலிகள் செய்த அதே தவறுகளை துப்பாக்கி ஏந்தாது செய்தவர்கள்தான் இவர்கள். இன்று புத்தளத்திலும், வவுனியாவிலும் அகதிகளாக உள்ள முஸ்லீம், தமிழ் மக்களின் அகதி வாழ்விற்கு புலிகளுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அவ்வளவு பங்கு இவர்களுக்கும் உண்டு. மனிதக் கேடயங்களாக மக்கள் புலிகளால் சிறைப்பிடிகப்பட்டிருப்பதை எந்த காலத்திலும் தவறு என்று கண்டிக்காதவர்கள். புலிகளால் சாய்த்துச் செல்லப்பட்டு புலிகளாலும் இலங்கை இராணுவத்தினாலும் இறுதி யுத்தத்தில் பலி வாங்கப்பட்ட பல ஆயிரம் மக்களின் மரணங்களுக்கு இவர்களும் ஒரு பிரதான பங்குதாரர்கள்.

இம் மூவரின் முன்னெடுப்புக்களால் தற்போது உருவாக்கப்பட்டு வரும் சிறுபான்மை இனங்களின் கட்சிகளுக்கிடையேயான ஐக்கிய முன்னணி தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அமைக்கப்படுகின்றது என்றால் அது நம்பக் கூடிய ஒன்றா? மேலும் இந்த மூன்று கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நல்ல உறவிலும் கள்ள உறவிலும் உள்ளவர்கள். சிறுபான்மை இனங்களின் கட்சிகளை தம்மோடு வளைத்து போட ஐக்கிய தேசியக் கட்சினால் அனுப்பப்பட்ட முகவர்கள் என்றே இவர்களைப் பார்க்க வேண்டும்.

மேற்கூறிய மூன்று கட்சிகளினதும் உற்ற நண்பனான ஐதேக இலங்கை வரலாற்றில் எப்போதும் தமிழ் மக்களினது மட்டுமில்லாது சாதாரணமான சிங்கள மக்களினதும்; விரோதமாக செயற்பட்டு வந்திருக்கிற கட்சியே. ஏகாதிபத்திய நலன்களின் நிலைப்பாட்டில் நாட்டை அடகு வைத்த கட்சிதானே ஐதேக!. தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு அத்தனை அடித்தளங்களையும் இட்டது ஐதேக என்றால் அது மிகையாகாது. தமிழ் மக்களின் ‘நண்பன்’ என்ற வேடம் போட்டு ‘போர் என்றால் போர்! சமாதானம் என்றால் சமாதானம்’ என்று போர்க்கொடி ஏற்றிய கட்சிதானே ஐதேக.

ஜீஜீ பொன்னம்பலத்தின் கோரிக்கையையும் ஏற்காமல் செல்வநாயகம் அவர்களின் கொள்கையையும் ஏற்காமல் இனமுரண்பாட்டை வளர்த்தவர்களே ஐதேக. பத்து லட்சம் மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமைகளைப்; பறித்து அரசியல் அனாதைகள் ஆக்கியது, தமிழர்களின் இடங்களில் சிங்களக் குடியேற்றங்களை நடத்தியது, பண்டா செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைத்த விடாமல் பண்ணியது எல்லாமே ஐதேக தானே. தமிழ்மக்களுக்கு அநியாயங்கள் செய்ததோடு நியாயம் கிடைக்க முடியாமல் செய்ததுதுவும் ஐதேகவே. இதனை இலங்கையின் வரலாற்றை புரட்டிப்பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

தனிச் சிங்களமே அரசமொழி என ஆக்கியது பண்டாரநாயக்காவே, எனினும் அதற்கான அரசியல் நிலைமைகளை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது ஐதேகவே. 1944 இலேயெ ஜேஆர் சிங்களம் மட்டுமே அரசமொழி என ஆக்க முனைந்ததை வரலாறு மறக்காது. 1956ல் அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது அதற்கு ஆதரவாக இதே ஐக்கிய தேசிய கட்சியும் வாக்களித்தது. பண்டா செல்வா ஒப்பந்தத்தை இல்லாமல் செய்ய கண்டியாத்திரை போன ஜேஆர். பல்கலைக்கழக அனுமதியில் உள்ள பாகுபாட்டை நீக்குகின்றேன் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியற் தீர்வை வழங்குவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு பின்னர் 1977, 1981, 1982, 1983 என தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கான கலவரங்களை நடாத்தியவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்களே.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத்திட்டத்தை கொண்டு வந்தது போல் காட்டிக்கொண்டு தமிழ் மக்களுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான நல்ல உறவை இந்தியப்படையுடன் மோத வைப்பதன் மூலம் இல்லாமல் செய்யும் தந்திர வேலையை நிறைவேற்றிய மேதாவிகளும் ஐதேககாரர்களே. ஜேஆர். இன் இச் சூழ்ச்சிக்கு தமிழர் தரப்பில் இருந்து செயல் வடிவம் கொடுத்தது புலிகளே என்பதுவும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதன் பின்பு வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையை இல்லாது ஒழித்தல் என்ற பிரேமதாசாவின் வேலைத்திட்டத்தை புலிகள் பிரேமதாசாவுடன் இணைந்து செய்து முடித்தனர்.

இலங்கை அரசுத் தலைவர்களிடையே இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒற்றையாட்சி முறையை நீக்கி கூட்டாட்சி அடிப்படையில் ஒரு நியாயமான தீர்வுத்திட்டத்தை வரைந்து அதனை பாராளுமன்றத்தின் ஊடாக அமுல்படுத்த முனைந்த சந்திரிகா அம்மையாரின் அரசியல் முயற்சிகளைத் தோற்கடிப்பதில் ரணில் விக்கரமசிங்காவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பவர்களும் கூட்டமைத்து செயற்பட்டவர்கள் தானே.

தற்போது அமைக்க முயலும் ஐக்கிய முன்னணி சாராம்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொண்டு செய்து சாமரம் வீசும் ஐக்கிய முன்னணிக்கான முஸ்தீபுக்களே. பலவீனப்பட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ‘தமிழ் மக்களின் நண்பன்’ என்ற பழைய குருடி கதவைத் திறவடி என்றவாறு வெளிக்கிட்டிருக்கும் செயல்பாட்டின் ஒரு வடிவமாகவே தெரிகின்றது. இது மறு புறத்தில் சிறுபான்மை மக்களின் கட்சிகளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிரானதாக திருப்பிவிடும் ஒரு குள்ள நரி வேலையே வெறொன்றுமல்ல. இந்தியாவும் மற்றும் மேலைத்தேய நாடுகளும் மகிந்த அரசின் மூலமாக ஒரு நியாயமான அரசியல் தீர்வைக் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சிகள் ஒரு பலாபலனையும் தராமல் இன்னுமொரு பத்தாண்டுகளுக்குத் தள்ளிவிடும் ஒன்றாகவே இந்த ஐக்கிய தேசியக் கட்சி சார்பான வேலைகளின் விளைவு அமையும்.

இச்சூழ்ச்சிகளில் சிக்கிவிடக் கூடாது என்ற ஆதங்கத்தை முன்கூட்டியே வெளிபடுத்தும் நோக்கமே இக்கட்டுரையை வரைந்ததன் முக்கிய காரணம். திம்பு பேச்சு வார்த்தை காலத்தில் ஐக்கிய முன்னணி அமைத்திருந்த விடுதலை அமைப்புக்கள், ஐக்கிய முன்னணிக்கு வெளியே இருந்த விடுதலை அமைப்பு(கள்), மிதவாத தமிழ் கட்சிகள் ஆகியவற்றிற்கிடையே ஏற்பட்ட எழுதப்படாத ஆனால் இறுக்கமான ஐக்கிய முன்னணி பற்றிய அனுபவங்கள் எமக்கு உண்டு. அதனை நாம் பாடங்களாகக் கொள்ளலாம் ஐக்கிய முன்னணிகளை அமைக்க முற்படும் போது. இவ் ஏழுதப்படாத ஐக்கிய முன்னணியின் பலமும் அதனால் அரசியல் தீர்வுத்திட்ட பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட் 4 அம்சக் கோரிக்ககைகளும் எமக்கு நல்தொரு அனுபவப்பாடங்கள்.

அப்போது தமிழ் மக்கள் மிகவும் அரசியற் பலமுடையவர்களாக இருந்த கால கட்டம். இவற்றை நல்லபாடமாக கொண்டு தமிழ்க் கட்சிகள் செயற்படுவார்கள் என நம்புகின்றோம். தவறின் கடந்த காலங்களில் தமிழ் காங்கிரஸில் இருந்து ஆரம்பித்து தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட அதே தவறை மீண்டும் விட்டதாகவே அமைந்து விடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மனோ கணேசன். ரவூப் ஹக்கீம் போன்றவர்களின் மாய வலையில் விழாமல் இருப்பதே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான முன் நிபந்தனையாகும்.

ஆயுத அச்சுறுத்தல் அற்ற நிலைமைகளை தமிழ் பகுதியில் மட்டும் அல்ல சிங்களப் பகுதியில் கூட ஏற்படக் காரணமானவர்கள் இன்றை அரச பீடத்தில் உள்ளவர்களே. பாதகாப்பு தொடர்பாக ஜனநாயகம் அம்சங்கள் தொடர்பாக இன்னமும் சில் பிரச்சினைகள் இருப்பினும் இன்று நாம் அனுபவிக்கும் குறைந்த பட்ச ‘ஜனநாயகத்தை’ ஏற்படுத்துவதில் இன்றைய அரசிற்கு பெரும் பங்குண்டு. மேலும் மேலைத் தேய நாடுகளின் மிரட்டல்களுக்கு அடிபணியாது, இந்தியா சீனா, ரஷ்யா, வியட்நாம், ஈரான் போன்ற நாடுகளுடன் ஒர் நல்லுறவை பேணும் நாடாகவும் தனது வெளிநாட்டுக் கொள்கைகளை ஏற்படுத்திவருகின்றது. இது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உறுத்துவதாக அமைவதே ‘மனித உரிமை’, ‘போர் குற்றம்’ என்ற விடயங்களை தூக்கிப்பிடித்து தமது ‘நியாயவாதி’ ‘நீதிபதி’ வேலைகளை செய்ய முனையும் செயற்பாடுகள் ஆகும். இதன் அர்த்தம் இலங்கை அரசின் பக்கம் தவறுகள் ஏதும் இல்லை என்பதல்ல. மாறாக ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் என அமெரிக்க புரிந்த வந்த, வருகின்ற ‘மனித நேய’ ஆகாயமார்க்க பிரச்சாரத்தை (யுசை ஊயஅpயபைn) செய்யும் அமெரிக்காவிற்கு எந்த அருகதையும் இல்லை மனித உரிமைகள் பற்றி பேசுவதற்கு. இன்றும், இன்னும் உலகத்தின் பொலிஸ்காரனாக செயற்பட விரும்பும் செயற்பாடுகளின் வெளிப்பாடுகளே இவைகளாகும்.

மஹிந்த சிந்தனையானது இலங்கையில் சிறுபான்மை தேசிய இனங்களுக்கென கட்சிகள் தேவையில்லை என்ற மறைமுக செயற்பாட்டை கொண்டிருக்கின்றது என்பதும் உண்மையே. சிறுபான்மை மக்களின் நலன்களை உறுதிப்படுத்தும் வரை சிறுபான்மை மக்களிடையே கட்சிகளின் பிரசன்னம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல தேவையானதும் கூட. இதனை மஹிந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அமைக்கும் ஐக்கிய முன்னணி அரசுக்கு எதிரான ஐக்கிய முன்னணி என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதில் எந்த பலனுமில்லை.

இவ்விடயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஐக்கிய முன்னணியானது சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பிரநிதித்துவப்படுத்தி; ஒருமித்த கருத்தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அமைக்கப்படுகின்றது என்ற விடயமே மேலோங்கி இருக்க வேண்டும். இச் செய்தியையே சர்வ தேசங்களுக்கும் சிறப்பாக இந்தியாவிற்கும் இவ் ஐக்கிய முன்னணியின் செய்திகளும் வேலைத்திட்டங்களும் தந்திதோபாயங்களும் எடுத்தியம்பி நிற்க வேண்டும்;. மாறாக அரசை வீழ்த்தும் ஐதேகவினால் உருவாக்கப்படும் ஒரு ஐக்கிய முன்னணி என்ற செயற்பாடு எல்லாவகையிலும் ஐக்கிய முன்னணிக்கான தேவையினை சிதைத்துவிடும் ஒன்றாகவெ அமையும். ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் லாபங்களுக்காக தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைப் பயன்படுத்தும் ஒரு நிகழ்வாக இது அமைந்து விடக்கூடாது.

தமிழ் மக்களின் இன்றைய நிலைமைக்கு சிறீ லங்கா சுதந்திரக்கட்சிக்கும் சமபங்குண்டு. வடக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீம் மக்களை பாதுகாக்க முடியாமல் போனதற்கு இலங்கை அரசும் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். இலங்கையில் வாழ்ந்து வருகின்ற சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களைவிட உரிமைகளில் இரண்டாம் பட்சமாக நடத்தப்பட்டு வந்தனர் என்பது உண்மையே. தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடுவதற்கு அவசியமான சகல தார்மீக உரிமைகளை வழங்கிய அனைத்த நிலைமைகளும் இலங்கையில் இருந்தன என்பதுவும் உண்மையே. இன்னும் இருக்கின்றன என்பது இப்போதும் உண்மையே. சாத்வீகப் போராட்டங்கள் சரிவராது, ஆயுதம் ஏந்திய போராடுவது தவிர்க்க முடியாது என்ற நினைப்புக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டதையும் மறுக்க முடியாது.

மாற்று இயங்கங்களை தமது துப்பாக்கியால் ஒடுக்கி தமிழ் மக்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தவர்கள் புலிகள். புலிகளின் தொடர்ச்சியான தவறான ஏகபோக, ஜனநாய மறுப்பு, பாசிச செயற்பாடுகளால் போராட்ட சக்திகள் சின்னா பின்னப்பட்டுப் போனது என்பது நாம் யாவரும் அறிந்ததே. ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்த தமிழ் தலைமைகளும் தமது நாற்காலி கனவுகளுக்காக தமிழ் மக்களுக்கு வீராவேசம் ஏற்றிவிட்டு பின்னர் தமிழ் மக்களின் உரிமைகளை விற்று பிழைத்ததும் உண்மையே. தமிழ் மக்கள் மத்தியில் மக்கள் நலன் சார்ந்த தலைவர்கள் கட்சிகள் உருவாகி பலம் பெறாதவாறு ஆவதற்கு தமிழ் பிழைப்பவாத அரசியற் சக்திகள் ஒரு பிரதான காரணம். இது தமிழ் காங்கிரஸ் இல் இருந்து ஆரம்பித்து தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு வரை பொருந்தும்.

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெல்லப் போவதில்லை என்பது நிச்சயம்.. ஐக்கிய தேசியக் கட்சியால் தமிழ் மக்களுக்கு எந்தக் காலத்திலும் எந்தவொரு பலனும் கிடைக்கப் போவதில்லை. ஆறு கடக்கும் வரைக்கும் தான் அண்ணன் தம்பி பிறகு நீ யாரோ நான் யாரோ - இதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை. எதிர்வரும் இரண்டு தேர்தல்களிலும் மஹிந்த ராஜபக்சவும் பொதஜன ஐக்கிய முன்னணியும் தான் வெல்லப் போகின்றார்கள். கடந்த தேர்தலில் புலிகளின் புண்ணியத்தில் மஹிந்த தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் பெரும்பான்மையாக சிங்கள மக்களின் வாக்குகளாலேயே வென்றார். நாடாளுமன்றத்தில் சிங்கள இனவாதக் கட்சிகளின் பிடியிலேயே அவர் செயற்பட வேண்டி வந்தது.

மஹிந்த தமிழர்களுக்கு நியாயமான அரசியற் தீர்வைத் தரத்தயாராக இருக்கிறாரா? என்பது பலரிடமும் உள்ள கேள்வியே. ஆனால் மஹிந்த நினைத்தால் மஹிந்தவால் முடியும் என்பதுவும் அனைவருக்கும் தெரிந்த உண்மை. அப்படியொரு துணிச்சலும் திண்ணமும் உடையவர் அல்ல ரணில். ஆனால் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டும்தான் அரசமைக்கும் நிலையேற்பட்டால் தமிழர்கள் மஹிந்தவிடம் இருந்து அரசியற் தீர்வை எதிர்பார்க்கும் தார்மீக உரிமையை இழந்து விடுவார்கள். மாறாக மஹிந்தவின் வெற்றிக்கு தமிழர்கள் வாக்குகள் கணிசமான காரணி என அமைந்தால் மஹிந்த தமிழர்களுக்கு ஒரு நியாயமான அரசியற் தீர்வை வழங்க வேண்டிய தார்மீக கட்டாயத்துக்கு உள்ளாவார் என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டும்.

இன்றைய மகிந்த அரசு புலிகளை வென்ற மமதையில் தன்கருத்தை மட்டும் கருத்தில் எடுத்து ஏதாச்சாகாரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் திசைவழியில் பயணிக்க தொடங்கியுள்ளதா என்ற சந்தேகத்தில் நியாயங்களை நாம் தேடாமல் ‘நினைத்ததை முடிப்பவன்’ என்ற மகிந்தவின் ஆற்றலில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான நல்லதை நினைக்க வைக்கும் கைங்கரியங்களை சிறுபான்மை மக்களின் ஐக்கிய முன்னணி மூலம் சாதிக்க வேண்டும். தமிழ்க் கட்சிகளே ஐக்கிய முன்ணியைக் கட்டியமையுங்கள். அணைந்தோ அல்லது இணைந்தோ சென்று நல்லதை நடக்க வைக்க வேண்டும். அதற்கான பேரம் பேசும் சக்தி வலிமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையாக தந்திரோபாய ஐக்கிய முன்னணியை அமையுங்கள். எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை நல்ல சந்தர்ப்பங்களாக மாற்றுங்கள். நாமும் வெல்ல முடியும். நமது மக்களும் வெல்ல முடியும் என வரலாறு உங்களை பதிவு செய்யட்டும்!…
-சாகரன்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "நடிப்பின் சிகரம் மனோகணேசன்.., புலிகளுக்கு பாவமன்னிப்பு வழங்கிய ரவூப் ஹக்கீம்.., இரட்டை வேடதாரிகளான தமிழ்க் கூட்டமைப்பு..; யாருடன் ஐக்கிய முன்னணி? எதற்காக ஐக்கிய முன்னணி?? -சாகரன் (கட்டுரை)"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates