மராத்தி.. சச்சின் மீது பால் தாக்கரே பாய்ச்சல்!

மும்பை: 20 ஆண்டு காலத்தை கிரிக்கெட்டில் கழித்துள்ள சச்சின் டெண்டுல்கரை, சீண்டியுள்ளது சிவசேனா.
கிரிக்கெட் வாழ்க்கையில் 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சச்சின், முதலில் நான் ஒரு இந்தியன், பிறகுதான் மராத்தி.
மும்பை இந்தியாவுக்குச் சொந்தமானது. அப்படித்தான் நான் பார்க்கிறேன். நான் ஒரு மகாராஷ்டிரக்காரன், அதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால் முதலில் நான் ஒரு இந்தியன் என்று கூறியிருந்தார்.
இது சிவசேனாவை கோபப்படுத்தி விட்டது. உடனடியாக சிவசேனாவின் பத்திரிக்கையான சாம்னாவில் தலையங்கம் போட்டு சச்சினை தாளித்து எடுத்து விட்டனர்.
இதுகுறித்து சாம்னா தலையங்கத்தில் பால் தாக்கரே எழுதியிருப்பதாவது:
சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
அவர் இவ்வளவு எகத்தாளமாக பேச வேண்டிய அவசியமே இல்லை. மராத்திய மக்கள் 105 பேர் உயிர் தியாகம் செய்து மும்பையை பெற்றோம். இதற்காக இன்னும் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம் தெரியுமா, அப்போதெல்லாம் நீ பிறந்திருக்கக்கூட மாட்டாய்.
இப்படிப்பட்ட கருத்துக்களை சச்சின் தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை. மராத்தி மக்களின் மன பிட்ச்சில் தற்போது சச்சின் ரன் அவுட் ஆகி விட்டார். கிரிக்கெட்டின் பாட்ஷாவாக சச்சின் இருக்கிறார். அவர் அந்த அளவோடு நின்று கொள்ள வேண்டும். விளையாட்டில் மட்டும் அவர் கவனம் செலுத்தினால் போதும், இதுபோன்ற கருத்துக்களை எல்லாம் அவர் வெளியிடக் கூடாது.
கிரிக்கெட் வாரியம் கண்டனம்...
சச்சினை சிவசேனா கண்டித்திருப்பதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாரிய நிதிக் கமிட்டி தலைவரும், செய்தித் தொடர்பாளருமான ராஜீவ் சுக்லா கருத்து தெரிவிக்கையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் கருத்து தேவையில்லாதது. இதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட வேண்டும்.
முகம்மது அலி ஜின்னா போல பேசுகிறார் தாக்கரே. அவரது கருத்து தேவையற்றது. சிவசேனா கட்சியினருக்கு இப்படி பேசுவதைத் தவிர வேறு வேலையே இல்லை போலும். டெண்டுல்கர் இந்தியாவுக்குச் சொந்தமானவர். மகாராஷ்டிராவுக்குச் சொந்தமானவர். தன்னை ஒரு இந்தியன் என்று யாராவது கூறிக் கொண்டால் அது ஒரு குற்றமா?
சிவசேனா இப்படி பேசிக் கொண்டிருந்தால் எந்த மராத்திக்காரரும் அதை ஆதரிக்க மாட்டார். உண்மையான இந்தியனாக பேசியுள்ளார் சச்சின் , ஒரு தேசியவாதியாக பேசியுள்ளார். இதைக் கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியாதா.
சில ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி இந்தியர்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது சிவசேனா. இவர்களையெல்லாம் சும்மா விடக் கூடாது. வழக்குப் போட வேண்டும்.
இதுபோன்ற கருத்துக்களை மகாராஷ்டிர மக்கள் விரும்ப மாட்டார்கள். சில இன துவேஷிகள்தான் இதை ரசிப்பார்கள். பெரும்பாலான மகாராஷ்டிர மக்கள் இதை விரும்ப மாட்டார்கள். தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வதைத்தான் அவர்கள் விரும்புவார்கள்.
இப்படித்தான் முன்பு ஜின்னா பேசினார். சிவசேனாவின் இந்தப் பேச்சுக்கு பெரும்பாலான மகாராஷ்டிரர்கள், சில சிவசேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் கட்சித் தலைவர்கள் தவிர மற்ற அனைவருமே டெண்டுல்கருக்கு ஆதரவாகத்தான் உள்ளனர் என்றார் சுக்லா.
பிதாகமன் படத்தில் லைலா தனது அப்பாவைப் பார்த்து நீ லூசாப்பா என்பார். சாம்னா தலையங்கத்தைப் பார்க்கும்போது அந்த கேள்விதான் மனதில் வந்து போகிறது.
0 Response to "மராத்தி.. சச்சின் மீது பால் தாக்கரே பாய்ச்சல்!"
แสดงความคิดเห็น