
பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களை ஒடுக்க பாகிஸ்தான் இராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்குப் பழிவாங்கும் வகையில் தலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை ராவல் பிண்டியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்தில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து அதிரடியாக தாக்கினார்கள். இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மீண்டும் பாரிய தாக்குதலை நடத்தி உள்ளனர். இந்தத் தாக்குதல் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூரில் நடந்தது.
லாகூர் இந்தியாவை ஒட்டியுள்ள நகரமாகும். இன்று காலை 10 க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் இந்த நகருக்குள் நுழைந்தனர்.
3 இடங்களில் தாக்குதல்
பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள் 3 பிரிவுகளாகப் பிரிந்து சென்று தாக்குதலைத் தொடங்கினார்கள்.
பாகிஸ்தானின் பொலிஸ் உளவுத்துறையான 'பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி' அலுவலகம் டெம்பிள் வீதியில் உள்ளது. இங்கு ஒரு பிரிவு தீவிரவாதிகள் நுழைந்தனர்.
இன்னொரு பிரிவினர் பேடியன் வீதியிலுள்ள பொலிஸ் பயிற்சி மையத்திலும் மற்றொரு பிரிவினர் லாகூர் புறநகர் பகுதியான மனாவனில் உள்ள மற்றுமொரு பொலிஸ் பயிற்சி மையத்திலும் நுழைந்தனர்.
3 இடத்திலும் ஒரே நேரத்தில் நுழைந்த தீவிரவாதிகள் அதிரடியாகத் தாக்கினர். அலுவலக வாசலில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டுகளை வீசி விட்டு உள் பகுதிக்குள் ஊடுருவினர். சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளையும் வெடிக்க செய்தனர்.
உளவுத்துறை அலுவலகத்தில் நுழைந்த தீவிரவாதிகள் கண்ணில் தெரிந்தவர்களைச் சுட்டுக்கொன்றனர். அங்கு நின்றிருந்த பாடசாலை சிறார்கள் 2 பேரையும் ஈவு இரக்கமின்றி சுட்டு வீழ்த்தினர்.
அங்குள்ள ஒரு அறைக்குள் புகுந்த தீவிரவாதிகள் உளவுத்துறை அதிகாரிகள் 2 பேரைச் சுட்டுக்கொன்றனர்.
உடனே அந்த இடத்துக்கு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கும்-தீவிரவாதிகளுக்கும் கடும் சமர் நடந்தது. அதில் ஒரு தீவிரவாதியை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். ஒரு மணி நேரம் மோதலுக்குப் பின் உளவுத்துறை அலுவலகம் பொலிஸ் கட்டுப்பாட்டுக்கு வந்தது.
அங்கு நடந்த தாக்குதலில் மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டனர். அதில் 3 பேர் உளவுத்துறை அதிகாரிகள், ஒருவர் தீவிரவாதி, 2 பேர் பாடசாலைச் சிறார்கள்.
பேடியன் வீதியிலுள்ள பொலிஸ் பயிற்சி மையத்தில் 3 தீவிரவாதிகள் நுழைந்தனர். அங்கு முதலில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை வெடிக்கச் செய்தனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பைப் பயன்படுத்திக் கொண்ட தீவிரவாதிகள் உள் பகுதிக்குள் நுழைந்தனர்.
அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொலிசார் சிலரைப் பணய கைதிகளாகப் பிடித்து கொண்டனர். அங்கும் அதிரடிப்படையினர் தீவிரவாதிகளைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அடிக்கடி குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டப்படி இருக்கின்றன. இங்கு நடந்த தாக்குதலில் 3 பேர் பலியானார்கள்.
மனாபனிலுள்ள பொலிஸ் பயிற்சி மையத்திலும் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்களை நடத்தினர். இங்கு ஒருவர் மட்டும் பலியாகி இருப்பதாக இது வரை கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.
3 இடங்களிலும் நடந்த தாக்குதலில் மொத்தம் 11 பேர் பலியாகி இருக்கிறார்கள். 40 பேர் காயம் அடைந்துள்ளனர்.
வடமேற்குப் பகுதியில்
லாகூரில் 3 இடங்களில் தாக்குதல் நடந்த அதே நேரத்தில் பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள கோகாத் நகரில் தலிபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் பொலிஸ் நிலையத்தில் கார் குண்டு தாக்குதல் நடத்தினர். இதில் பொலிசார், பள்ளி குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர்.
3 இடங்களிலும் நடந்த தாக்குதலில் மொத்தம் 21 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
ஒரே நாளில் 3 இடங்களில் தாக்குதல் நடந்ததால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போய் உள்ளது. மக்கள் பீதியில் உள்ளனர்.
இன்று தாக்குதல் நடந்த உளவுத்துறை அலுவலகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதமும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 24 பேர் பலியானார்கள்.
இதே போன்று இன்று தாக்குதல் நடந்த மனாவன் பொலிஸ் பயிற்சி மையத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் தாக்குதல் நடந்தது. இதில் 8 பொலிஸார் உயிரிழந்தனர்.
இரு இடத்தையும் மீண்டும் குறி வைத்து இன்று தாக்கி இருக்கின்றனர்.
இன்றைய தாக்குதலில் பெண் தீவிரவாதி ஒருவரும் ஈடுபட்டதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்தனர்.
10-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் நுழைந்த போதிலும் இதுவரை 4 தீவிரவாதிகளை மட்டுமே பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். மற்றவர்கள் அங்கேயே பதுங்கி இருக்க வேண்டும் எனக் கருதி தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தாக்குதல் நடந்த 3 இடங்களையும் அதிரடிப்படையினர் சுற்றி நிற்கின்றனர். இந்த பகுதிகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.