
யாழ் குடாநாட்டிற்கான தரைவழி அஞ்சல் சேவை வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் வீ.குமரகுரு தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்ததையடுத்து மூடப்பட்டிருந்த ஏ9 வீதி திறக்கப்பட்டு போக்குவரத்துக்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான தரைவழி அஞ்சல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 56 தபால் பொதிகளும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான 42 தபால் பொதிகள் வவுனியாவுக்கும் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் வீ.குமரகுரு தெரிவித்தார்.
வவுனியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள கொழும்புக்கான யாழ் அஞ்கல் பொதிகள் அங்கிருந்து ரயில் மூலமாக கொழும்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து ரயில் மூலமாக வவுனியாவுக்கு வந்தடையும் யாழ்ப்பாணத்திற்கான தபால் பொதிகள், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தி்ற்கு ஏ9 வீதிவழியாக பஸ் வண்டிகளில் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சேவை தினசரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ9 வீதி மூடப்பட்டிருந்த வேளை, யாழ்ப்பாணத்திற்கான தபால் பொதிகள் கொழும்பில் இருந்து திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கிறீன் ஓசியன் கப்பல் மூலமாகவே எடுத்துச் செல்லப்பட்டன. இந்த சேவையை கிறீன் ஓசியன் கப்பல் இலவச சேவையாக கட்டணமின்றி செய்ததாக வடமாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் குமரகுரு கூறினார்.
கப்பல் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு தபால்கள் அனுப்பி வைக்கப்பட்டபோது, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் கடிதங்கள் சென்றடைவதற்கு 5 தொடக்கம் 7 தினங்கள் வரையில் எடுத்தது என்பதும், இப்போது இந்தத் தாமதம் நீங்கி 48 மணித்தியாலங்களுக்கிடையில் கடிதங்கள் சென்றடையும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது,