jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ராஜ் ராஜரட்ணம் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ராஜ் ராஜரட்ணம் แสดงบทความทั้งหมด

ராஜரட்ணத்திற்கு எதிராக ஐ. அமெ. பெடரல் யூரி சபை குற்றப்பத்திரிகைத் தாக்கல்


நிதி மோசடிகள் பலவற்றுடன் தொடர்புடையவர் எனக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான ராஜ் ராஜரட்ணத்திற்கு எதிராக ஐக்கிய அமெரிக்க பெடரல் யூரி சபை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

அவருக்கு எதிராக 17 குற்றச்சாட்டுகளை முன்வைத்து 36 பக்கங்களுடனான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கு பத்திர மோசடி, நிதி ரீதியான சூழ்ச்சி ஆகியன அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுக்களாகும்.

அத்துடன், கெலியான் நிறுவனத்துடன் 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஹெஜிங் ஒப்பந்தத்தை மேற்கொண்டு அந்தரங்க கொடுக்கல் வாங்கல்களை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, அமெரிக்க நீதிமன்றம் ஒன்றின் முன்னிலையில் விசாரிக்கப்படும் பாரிய நிதி மோசடி வழக்காக இது கருதப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க பெடரல் பொலிஸார் ராஜ் ராஜரட்ணத்தைக் கைது செய்த நிலையில், நீதிமன்ற அனுமதிக்கிணங்க அவரின் தொலைபேசி கலந்துரையாடல்களும் இரகசியமான முறையில் செவிமடுக்கப்பட்டனஎன்க் கூறப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ராஜரட்னத்தின் டி.எப்.சீ.சீ. பங்குகள் நேற்று விற்பனை


அமெரிக்காவின் பிரபல தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்தின் டி.எப்.சீ.சீ. பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பங்குப் பரிவர்த்தனையினால் பங்குச் சந்தை மொத்தப் புரள்வு வளர்ச்சியைப் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பிரபல வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் அமெரிக்கா காவல்துறையினால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க நீதிமன்றம் விதித்துள்ள ரொக்கப் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் ராஜ் ராஜரட்னத்தின் கெலுன் நிறுவன சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் ஒரு கட்டமாக இலங்கையில் ராஜ் ராஜரட்னத்திற்கு சொந்தமான டி.எப்.சீ.சீ. வங்கிப் பங்குகள் கொழும்புப் பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டி.எப்.சீ.சீ. வங்கியின் ஐந்தாவது முக்கிய பங்குதாரராக கருதப்படும் ராஜ் ராஜரட்னம் தனது சகல பங்குகளையும் நேற்றைய தினம் விற்பனை செய்துள்ளார்.

பங்குத் தரகு நிறுவனங்களின் மூலம் இந்த கொடுக்கல் வாங்கல் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

பங்கு ஒன்று 135 ரூபா என்ற விகிதத்தில் சுமார் 12.2 மில்லியன் பங்குகள் நேற்றைய தினம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

உலகின் மோசமான நிர்வாகிகள் பட்டியலில் ராஜ் ராஜ்ரட்னம்-ராஜு!


நியூயார்க்:உலகின் மிக மோசமான நிர்வாகிகளின் பட்டியலில் சத்யம் ராமலிங்க ராஜுவுக்கு 4-வது இடம் தரப்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தப் பட்டியல் விவரம்:

சர்வதேச அளவில் புகழ்பெற்ற அதே நேரம், நியாய தர்மங்களை மீறிய அசாதாரண சிஇஓக்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் லாயிட் பிளாக்ஃபெயின். கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ. இவருக்கு அடுத்த நிலையில் மெர்ரில் லிஞ்ச் நிறுவனத்தின் சிஇஓ ஜான் தாய்ன் உள்ளார்.

இலங்கை வம்சாவளி தமிழரான ராஜ் ராஜரட்னத்துக்கு இந்த வரிசையில் மூன்றாவது இடமும், சத்யம் நிறுவனர் பி ராமலிங்க ராஜுவுக்கு நான்காவது இடமும் தரப்பட்டுள்ளது.

இவர்கள் நால்வருமே நிதி மோசடி, முறையற்ற வழியில் நிறுவனத்தின் நிதி மதிப்பை உயர்த்துதல், இல்லாததை இருப்பதாகக் காட்டி பங்குதாரர்களை ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கார்ப்பரேட் குற்றங்களைச் செய்து சட்டத்தின் முன் நிற்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களுக்கு ராஜரட்ணம் மறுப்பு


நிதிச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க அரசாங்கத்தினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என பிரபல அமெரிக்க தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்ணம் தெரிவித்துள்ளார்.

பாரிய நிதிச் சந்தை மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல அமெரிக்கத் தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்ணத்தை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்திருந்தது.

போலியான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தமது அரசியல் சாசன உரிமையை மீறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பங்குச் சந்தையில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ராஜ் ராஜரட்ணம் அறிந்திருக்கவில்லை என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும், சட்டவிரோத பங்குப் பரிவர்த்தனையின் ஊடாக ராஜ் ராஜரட்ணம் பெருந்தொகை லாபத்தை ஈட்டியுள்ளதாகத் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ராஜரட்னத்தின் ஒரு பகுதி பங்குகள் இலங்கையில் விற்பனை : 'த ஹிந்து' தகவல்


அமெரிக்காவில் உட்சந்தை மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ராஜ் ராஜரட்ணம், தமது பிணைத்தொகையை திரட்டுவதற்காக தமது பங்குகளின் ஒருபகுதியை இலங்கையில் விற்பனை செய்யவிருப்பதாக இந்திய செய்தி இதழான 'த ஹிந்து' தெரிவித்துள்ளது.

ராஜ் ராஜரட்னம் கடந்த ஒக்டோபர் 16aaம் திகதி அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க 100 மில்லியன் டொலர்கள் பிணைத்தொகை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தொகையைக் குறைக்குமாறு கோரப்பட்டிருந்த போதும், அதனை அமெரிக்க நீதிபதிகள் நிராகரித்தனர். எனினும், அமெரிக்காவின் முக்கிய பிரதேசங்களுக்குள் பயணம் செய்வதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு பங்குச்சந்தையில் அவரது 105 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பங்குகளை விற்பனை செய்யவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் 100 மில்லியன் டொலர்களைத் திரட்டுவதற்கு, இலங்கையின் நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், இங்கு பங்கு விற்பனையில் சிக்கல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராஜ் ராஜரட்ணம் கைது செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு நெருக்கடி நிலைமைகளைச் சந்திக்க நேர்ந்திருந்தது.

அவர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டது. அத்துடன் அவர் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதற்கிடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக அடையாளப்படுத்திய நிலையில் கைதான கே. பத்மநாதன், ராஜ் ராஜரட்ணம் புலிகளின் முன்னிலை நிதி வழங்குனராக இருந்தார் எனத் தெரிவித்திருந்ததாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அமெ. உட்சந்தை மோசடி : மேலும் எண்மர் மீது வழக்குப் பதிவு


ராஜ் ராஜரட்னத்தின் உட்சந்தை மோசடி தொடர்பில் மேலும் 8 பேர் மீது அமெரிக்கப் புலனாய்வுத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், இது தொடர்பில் ராஜ் ராஜரட்னத்தின் மீது 13 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பங்குச் சந்தைத் தகவல்களை வழங்கியதன் ஊடாக உட்சந்தை மோசடியில் ஈடுபட்டு தமது பங்குக்கு 25 மில்லியன் டொலர்களை லாபமாக ஈட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பங்கு பரிவர்த்தனை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அவரும் அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் 5 பேரும் இன்று பிணை விடுகைக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் நேற்று மேலும் 8 பேரை உட்சந்தை மோசடி தொடர்பில் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்த வழக்கு மீதான விசாரணைகள் மேலும் விரிவுப் படுத்தப்பட்டுள்ளதாக, அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ராஜரட்னத்தின் பிணைத் தொகையைக் குறைக்குமாறு கோரிக்கை


பங்கு உட்சந்தை வியாபாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னத்தின், பிணை அபராதத் தொகையை, 100 மில்லியன் டொலர்களில் இருந்து 25 மில்லியனாகக் குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பங்கு உட்சந்தை வணிகத்தில் பல பில்லியன் டொலர்களை மோசடி செய்த பேர்னாட் மடோப் என்பருக்கு, 10 மில்லியன் டொலர்களே அபராதம் அறவிடப்பட்டமை இதற்காகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர்களில் ஒருவரான ராஜ், குற்றவாளியாகக் காணப்பட்டாலும் அவருக்கு 10 வருடத்துக்கும் குறையாத தண்டனையே வழங்கப்படும் என அவருடைய சட்டத்தரணி ஜோன் டௌட் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ராஜரட்னத்தின் பிணைக்காக அசாதாரண நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டுள்ள மொடப்புக்கு, 150 வருடகால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ராஜ் ராஜரட்னத்துக்கான பயணத்தூரமும், நியூயோர்க் நகருக்குள் 175 கிலோமீற்றர் தூரம் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பிறந்த ராஜ் ராஜரட்னம், சுமார் 1.3 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுடன், உலகின் 549ஆம் இடத்தை வகிக்கும் கோடீஸ்வரராவார்.

அவர் நியூயோர்க் நகரில், 17.5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான மாளிகையில், தமது மனைவியுடன் 21 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையில் ராஜ் ராஜரட்னம் தமது தவறை இதன் பின்னர் திருத்திக் கொள்வார் எனச் சட்டத்தரணி டெளட் தெரிவித்துள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கரன்ஸி புலி’யின் மர்ம முகங்கள் : பொறியில் சிக்கிய ராஜ் ராஜரத்தினம்


கரன்ஸி புலி’யின் மர்ம முகங்கள் : பொறியில் சிக்கிய ராஜ் ராஜரத்தினம்

நியூயார்க்கில் வசிக்கும் அமெரிக்க மெகா கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர்! நியூயார்க் பங்குச் சந்தை ஏறுவதிலும் - இறங்குவதிலும் இவரது கண்ணசைவுக்கும் பங்குண்டு என்று கூறுவார்கள். இலங்கையில் பிறந்து, இங்கிலாந்தில் படித்த அமெரிக்க பிரஜை. 'ஹெட்ஜ் பண்ட்' எனப்படும் பங்குச் சந்தை வியாபாரத்தில் உலக மகா கில்லாடி. இவரை கடந்த 16.10.09-ல் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ (FBI) கைது செய்துள்ளது. 'பங்குச் சந்தை தொடர்பான மோசடி செய்தார்' என்று ராஜரத்தினம் மீது குற்றம் சாட்டப்பட்டாலும், விசாரணை வேறு திசையிலும் பயணிப்பதாக பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ட்டனுடன் தோளில் கை போட்டுப் பேசக் கூடியவர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ட்டனின் தேர்தல் செலவுகளுக்கு கோடிகளை நன்கொடையாக வழங்கியவர் என்று நியூயார்க்கையே அதிசயத்துடன் தன் பக்கம் நிமிர்ந்து பார்க்க வைத்தவர் ராஜ் ராஜரத்தினம். இவர் விடுதலைப்புலிகளுக்கும் பணத்தை அனுப்பியதாகவும் அதிகாரிகள் துருவி வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைக் கலங்கடித்த 'அக்னி' ராஜரத்தினம் அல்ல இவர். ராஜ் என்று அன்போடு அழைக்கப்படும் ராஜரத்தினம் சென்னைக்கு 'விசிட்' அடித்ததோடு சரி. போர்பஸ் மாத இதழ், ராஜ் ராஜரத்தினம் உலகின் முதல் 100 செல்வந்தர்களில் ஒருவர் என்று கூறுகிறது.

இன்டெல். ஐ.பி.எம்., மெக்கின்ஸி ஆகிய பெரும்புகழ் கொண்ட நிறுவன பங்குகளை சுமார் 20 மில்லியன் டாலர்கள் வரையில் (சுமார் 92 கோடி ரூபாய்), 'இன்ஸைடர் டிரேடிங்' முறையில் வாங்கி 100 மில்லியன் டாலர்கள் வரை தவறாக பங்குச்சந்தையில் லாபம் பார்த்தார் என்று எப்.பி.ஐ. தனது முதல் குற்ற அறிக்கையில் கூறியிருக்கிறது. இவரை பொறி வைத்துப் பிடித்தவர், அதிபர் ஒபாமாவினால் சமீபத்தில் நியூயார்க் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட ப்ரித் பராரா என்ற பஞ்சாபி - இந்தியர்தான்!

இலங்கையில் நடைபெற்று வந்த ஈழப் போரில், தனது வியாபாரத் தொடர்புகள் கருதி நடுநிலை எடுத்து வந்த ராஜ், 2000-ம் ஆண்டு முதல் புலிகளை மறைமுகமாக ஆதரிக்கத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. தடை செய்யப்பட்ட இயக்கமான TRO எனும் 'தமிழர் மறுவாழ்வு அமைப்பு' மூலம், இலங்கையில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய்களை புலிகள் அமைப்புக்கு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு 2001-ம் ஆண்டு எழுந்தது. 2004-ம் ஆண்டில் சுனாமி இலங்கையில் கோரத் தாண்டவம் ஆடியபோது... தமிழர்கள் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வீடுகளை இலவசமாக இவர் கட்டித் தந்தார். இலங்கை அரசும் இதை வரவேற்றது.

இலங்கையின் அரசியல்வாதிகளை இவர் நன்கு கவனித்து வந்ததாலோ என்னவோ... ஈழப்பகுதிகளில் இவர் செய்த உண்மையான மனிதாபிமான செயல்களை பாராட்டியே வந்தனர். அதேசமயம், 'இவர் ஈழப்பிரச்னையில் தலையிடுகிறார்' என்று உளவு அமைப்புகள் இலங்கை அரசை எச்சரித்து வந்தன. வாஷிங்டன் அருகில் உள்ள மேரிலேந்து மாகாணத்தில் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக அமெரிக்க அரசினால் கைது செய்யப்பட்ட தலைவர் கருணாகரன் கந்தசாமி, போலீஸில் கொடுத்த வாக்குமூலத்தில் 'மிஸ்டர் பி' என்பவர் ஒரு மில்லியன் டாலர்கள் நன்கொடை கொடுத்ததாகக் கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்களையும் போலீஸ் கைப்பற்றியது. 2000, 2004 ஆண்டுகளில் தலா ஒரு மில்லியன் கொடுத்ததற்கான ஆதாரங்களையும் இலங்கை வங்கியில் இருந்து சேகரித்தது. யானையிறவு போரில் புலிகள் வெற்றிபெற இந்த நன்கொடைகள் பெருமளவு உதவியதாகவும் இலங்கை போலீஸார் அரசுக்குத் தகவல் தந்தனர். மொத்தத்தில், 2000-ம் ஆண்டு முதலே போலீஸாரின் பார்வையில் வந்த ராஜ், தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார் என்று தெரிகிறது.

எப்.பி.ஐ - கோர்ட்டில் உத்தரவு பெற்று இவரது தொலைபேசி,கைபேசிகளை ஒட்டுக்கேட்டது. இவரது பிஸினஸ் கோஷ்டியில் ஒரு ரகசிய உளவாளியை நுழைத்து கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 2006-ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற வட அமெரிக்க சங்கப் பேரவையின் ஆண்டு மாநாடு நடைபெற்றபோது, அப்போதைய தலைவர் திருப்பூரைச் சேர்ந்த நடராஜன் ரத்தினத்திடம் 'ப்ளாங்க் செக்' கொடுத்து, 'எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்' என்றாராம் ராஜ். இதற்காக ராஜ் வைத்த ஒரே கண்டிஷன், புலிகளின் ஆதரவு பெற்ற மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் கேரன் பார்க்கரை அழைத்துப் பேச வைக்கவேண்டும் என்பது என்றும் கூறப்படுகிறது. பிறகு, பலமுறை புலிகளின் ஆதரவுக் கூட்டங்களுக்கு பணம் கொடுத்திருக்கிறார் என்றும் அதையெல்லாம். எப்.பி.ஐ தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்தது என்றும் சொல்கிறார்கள் இப்போது.

ஆனால், ராஜரத்தினத்தின் நண்பர் வட்டமோ, ‘அவர் தமிழ் ஆர்வலர். ஆகவே பேரவைக்கு நன்கொடை கொடுத்தார். பல்வேறு சேவை மையங்களுக்கும்தான் வாரி வாரி வழங்கியுள்ளார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அவர் புலி ஆதரவாளர் என்று கூறுவது தவறு. சிறிய வயதில் கஷ்டப்பட்ட ராஜ், ஏழைகளுக்கு உதவினார். சுனாமி தாக்கிய கிராமங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். இதை அன்றைய இலங்கை அதிபரே பாராட்டினார்!’ என்று கூறுகிறார்கள்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ட்டனை தலைமை டிரஸ்டியாகக் கொண்டு செயல்படும் அமெரிக்க - இந்திய பவுண்டேஷன் எனும் தொண்டு நிறுவனத்தில் ராஜ் டிரஸ்டியாக செயல்படுகிறார். இந்த நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பெரும் கொடை வள்ளல் ராஜ்தான். இதனால், இவர் புகழ் அமெரிக்காவெங்கும் பரவியது. இவரது கம்பெனியின் மதிப்பு 5 பில்லியன் டாலர்கள். செல்வச் செழிப்பில் வளைய வந்த ராஜ், ஒரு சமயம் தன் பிறந்தநாளைக் கொண்டாட ஒரு சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்து அதில் சுமார் 500 விருந்தினர்களை களிப்பூட்டினார். பங்குச் சந்தை முதலாளிகள், வங்கித் தலைவர்கள், முதலீட்டாளர்கள் என்று அந்த கப்பலில் மிதந்தனர். மிக உயரிய ஒயின், புளூ லேபிள் விஸ்கி ஆறாக ஓடியது. விருந்தினர்களோடு அந்த கப்பல் நியூயார்க் மாநகரை சுற்றி வந்தது. பங்குச் சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டாலும், புலிகளின் ஆதரவுப் பழியும் ராஜ் மீது இறங்கியிருக்கிறது.

இலங்கையில் போர் முடிந்து புலிகள் ஒடுக்கப் பட்டுவிட்ட நிலையில், புலிகளின் ஆதரவு பிரமுகர்கள் மீது அமெரிக்கா வழக்குகளை தூசி தட்டி எடுப்பது ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் இந்த கைது நடந்ததா என்ற கேள்வியும் இதனால் எழத் துவங்கியுள்ளது.

(உலக பணக்கார்களின் வரிசையில் 587 வது இடத்திலிருக்கும் ஒருவரை முதல் 100 பேர்களில் ஒருவரென கதையளக்கின்றார். அத்தோடு நிறுத்தாமல் “2004-ம் ஆண்டில் சுனாமி இலங்கையில் கோரத் தாண்டவம் ஆடியபோது... தமிழர்கள் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வீடுகளை இலவசமாக இவர் கட்டித் தந்தார். இலங்கை அரசும் இதை வரவேற்றது“. என்று அடுத்த புழுகையும் அவிழ்த்து விடுகின்றார். சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில தமிழர்களுக்கு மட்டும் யுனிசெவ் அமைப்பே சில வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. இலங்கை அரசோ அல்லது விடுதலைப்புலிகளோ அல்லது தனிநபர்களோ ஒரு குடிசை கூட அந்த மக்களுக்கு போட்டுக் கொடுக்கவில்லையென்பதே உண்மை. ஆனால் விடுதலைப்புலிகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குதவவென பல நாடுகளிடமிருந்தும் நேரடியாக பல மில்லியன் டாலர்களை பெற்றுக் கொண்டனர் ராஜ் ராஜரத்தினம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென புனர்வாழ்வக்கழகத்திற்கு வழங்கிய நிதியை புனர்வாழ்வுக்கழகம் புலிகளுக்கே கொடுத்தது. இதனாலேயே புனர்வாழ்வுக்கழகத்தை இலங்கை அரசு தடை செய்தது. ராஜ் ராஜரத்தினம் நிதி வழங்கிய கால கட்டத்தில் புனர்வாழ்வுக்கழகம் தடைசெய்யப்பட்டிருக்காததால், ராஜ் ராஜரத்தினம் மீது இலங்கை அரசால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது.- கிருபானந்தன்))

(இன்ஸைடர் டிரேடிங் என்றால் என்ன என்று முதலீட்டு ஆலோசகர் நாகப்பனிடம் கேட்டபோது, 'பங்குச் சந்தையால் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரியே அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலையேற்றத்தை முன்கூட்டி தெரிந்துகொண்டு, பங்குகளை வாங்கிப் போட்டு விலையேற்றத்துக்குப் பிறகு விற்று லாபம் பார்ப்பதுதான் இன்ஸைடர் டிரேடிங்!

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்குகளின் விலை குறையப்போகிறது என்று தெரிந்து கொண்டு, முன்கூட்டியே பங்குகளை விற்பதும் இதில் பொருந்தும். ஒரு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர், தன் பெயரில் பங்கு பரிவர்த்தனை செய்யாமல், மறைமுகமாக தன் உறவினர் பெயரிலும் செய்ய வாய்ப்பிருக்கிறது. இந்தியாவில் 'செபி' மாதிரியான அமைப்புகள் இன்ஸைடர் டிரேடிங்கைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டுவந்து விட்டது. பங்குச் சந்தையால் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர்களுடைய உறவினர்களின் லிஸ்ட்டைக்கூட அந்த நிறுவனம் கேட்டு வாங்கி வைத்திருக்க வேண்டும் என்று 'செபி' வலியுறுத்தத் துவங்கியிருக்கிறது. காரணம், இந்த உறவினர்கள் யாரேனும் அதே நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்கிறார்களா என்பதை 'செபி' கண்காணித்து வருவதுதான்!'' என்றார் நாகப்பன்.

ஏற்கெனவே தங்கள் வசம் கிடைத்திருக்கும் கே.பத்மநாபன் (கே.பி.) மூலமாக விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி வலைப் பின்னல்களை விசாரித்து வரும் இலங்கை அரசுக்கு, கே.பி. மூலம்தான் ராஜ் ராஜரத்தினம் தொடர்பாகச் சில விவரங்கள் கிடைத்ததாகவும்... அதை அமெரிக்காவின் கவனத்துக்கு கொண்டு போனதும்தான் இந்த கைது என்றும் ஒரு செய்தி உள்ளது. டி.ஆர்.ஓ. எனப்படும் தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்கு மாற்றுப் பெயரில் மில்லியன் டாலர் நிதி அளித்ததோடு, அதன் ஒருங்கிணைப்பாளராகவும் அவரே செயல்பட்டு வந்தாரா என்று தற்போது எஃப்.பி.ஐ. விசாரித்து வருகிறது. புலிகளின் மிகப் பெரிய தாக்குதல்களான ஓயாத அலைகள் 1, ஓயாத அலைகள் 2 போன்ற போர்களின் போதெல்லாம் ஆயுதங்கள் வாங்கிக் குவிக்க நிதி கொடுத்தது ராஜ் ராஜரத்தினம்தான் என்று புலிகள் ஆதரவு ஆட்களே சொல்லத் துவங்கியுள்ளனர். அதோடு, இலங்கையில் போர் கடுமையாக நடந்த சமயத்தில் அந்நாட்டின் பங்கு மார்க்கெட்டை ஆக்கிரமித்திருந்த டாப் 10 கம்பெனிகளையும் ராஜ் ராஜரத்தினம் கட்டுப் படுத்தி வந்ததாக இலங்கையில் தற்போது பேச்சு எழுந் துள்ளது.

போர் முழுவதுமாக முடிந்த பிறகு புலிகளின் குழந்தைப் போராளிப் பிரிவுக்கான மறுவாழ்வு ஏற்பாடுகளுக்கு ஒரு மில்லியன் டாலர்களை இலங்கை அரசிடம் வழங்க முன்வந்திருக்கிறார் ராஜ் ராஜரத்தினம். இம்முறை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சரான ரோஹித்த பொகல்லகாம இந்தப் பணத்தை வாங்கவிடாமல் தடுத்துவிட்டார்!
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ராஜரட்ணம் புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கியவரென கே.பி தெரிவிப்பு!


அமெரிக்காவில் வர்த்தக மோசடியில் ஈட்டுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க குடியுரிமையாளர் ஆன ராஜ் ராஜரட்ணம் புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கியவர் என்பது கே.பி மூலம் தெரிய வந்ததாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது. புலிகளுக்கு நிதியுதவி புரிந்தவர்களில் ராஜரட்ணம் முதன்மையானவர் என்பதினை புலிகளின் முன்னாள் ஆயுத கொள்வனவாளர் ஆன குமரன் பத்மநாதன் தெரியப்படுத்தியதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ராஜரட்னத்தின் பங்குகள் தொடர்பில் ஆய்வு : பங்கு மாற்ற ஆணையர் தகவல்

மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரபல கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னத்திற்கு சொந்தமான பங்குகள் தொடர்பில் இலங்கை பங்கு பரிமாற்ற ஆணைக்குழுவின் பாதுகாப்புப் பிரிவு ஆராய்ந்துள்ளது என அதன் பணிப்பாளர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னம், இலங்கையில் மிக பெரிய முதலீட்டாளர் என்பதால் அவரது கொள்வனவுகள் குறித்த தகவல்களைத் திரட்டவுள்ளதாக பங்கு பரிமாற்ற ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் இவர் 150 மில்லியன் டொலர் வரை முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ராஜரட்னம் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை : இலங்கை மத்திய வங்கி


பிரபல கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்க நிதி உதவி வழங்கியமை தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக ஏசியன் ட்ரிபியூன் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில்,

"பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு 52 வயதான ராஜ்ராஜரட்னம் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் 'டீ ஆர் ஓ' எனப்படும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

எனினும் அவர் இந்தக் கழகத்துக்கு நிதியாடலை மேற்கொள்ளும் போது, அது இலங்கையிலோ அல்லது அமெரிக்காவிலோ தடை செய்யப்பட்டிருக்கவில்லை என மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பி. கே. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியே, நிதி மோசடி தொடர்பிலான புலானாய்வுகளை மேற்கொள்ளும் பிரதான புலனாய்வு பிரிவாகக் காணப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் அடிப்படையில் ராஜ் ராஜரட்னம் எந்த குற்றச் செயலுடனும் தொடர்புடையவர் அல்லர் என அவர் தெரிவித்துள்ளார்.

ராஜ் ராஜரட்னம் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பின்னரான கட்டுமானப் பணிகளுக்காக தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்கு நிதி வழங்கியுள்ளார்.

எனினும் அந்த அமைப்பு இலங்கையிலும் அமெரிக்காவிலும் 2007ஆம் அண்டு நவம்பருக்கு பின்னரே தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் அதற்கு அவர் நிதி வழங்கவில்லை என விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ராஜ் ராஜரட்னத்தின் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இலங்கையின் பங்குகள் தொடர்பிலும் ஆராய்வதற்கான தேவை இல்லை எனவும் பங்கு பரிமாற்று ஆணையகத்தின் பணிப்பாளர் சன்னா டீ சில்வா தெரிவித்துள்ளார்.

ராஜ் ராஜரட்னம் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஏற்ப சந்தேகத்துக்கு இடமானமுறையில் செயற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜ் ராஜரட்னத்தின் கைதைத் தொடர்ந்து இலங்கையின் பங்கு சந்தை நேற்று 3.1 சதவீத வீழ்ச்சியடைந்தது.

உலகின் 559ஆவது கோடீஸ்வரராகத் திகழும் அவருக்கு, விடுதலைப் புலி உறுப்பினர்களின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கியமைக்காக கடந்த மாதம் இலங்கையின் நீதி அமைச்சு நன்றி தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates