jkr
แสดงบทความที่มีป้ายกำกับ மட்டக்களப்பு แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ மட்டக்களப்பு แสดงบทความทั้งหมด

ஆளும் - எதிர்க்கட்சிப் பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல்


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் இல்லங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளரான எஸ்.ஏ.ராபீல், இன்று அதிகாலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர் எம்.ரி.எம் ஹுசைன் ஆகியோரது வீடுகளின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின் போது, அவற்றின் முன் பகுதிகள் சேதமடைந்துள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் நபர்களே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனினும் சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனப் பொலிசார் தெரிவ்சித்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இளம்விதவை படுகொலை : அடையாள அணி வகுப்பில் சந்தேக நபர்கள்


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் இளம் விதவையொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் ஆஜர் படுத்துமாறு கல்குடா பொலிசாருக்கு வாழைச்சேனை மஜிஸ்திரேட் ரி.சரவணராஜா இன்று உத்தரவிட்டுள்ளார்.

வாழைச்சேனை மருதநகரைச் சேர்ந்த வாணி எனப்படும் இராமச்சதிரன் கோமதி (வயது 24) என்பவர் கடந்த 14ஆம் திகதி இரவு வீட்டிலிருந்த வேளை, கத்தியால் வெட்டியும் இரும்புக் கம்பியால் தாக்கியும் படுகொலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவரது சகோதரி முறையான இளம்பெண் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்திய போது, இதற்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான மருதநகரைச் சேர்ந்த ஆனந்தன் ஸ்ரீ ரஞ்சினி, சொருவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் ரூபன் மற்றும் அழகேந்திரன் ஹரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுத் துறையினரையும் இது தொடர்பான விசாரணைமேற் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் பணித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஐதேக மட்டு. முகாமையாளரின் இல்லம் மீது கைகுண்டுத் தாக்குதல்


ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் அரசரட்னம் சசிதரனின் இல்லம் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் c தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது இல்லம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலின் போது அவரும் அவரது குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்தனர்.

சம்பவத்தின் போது பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்த போதிலும் சந்தேக நபர் தப்பியோடிவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் கரு ஜயசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு, அரசரட்னம் சசிதரனின் இல்லத்தில் கட்சி பிரமுகர்கள் சந்திப்பொன்றில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியான பின், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள முதலாவது தேர்தல் வன்முறை இதுவாகும்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வனத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாசிக்குடா கடலில் மூழ்கி பலி


மட்டக்களப்பு பாசிக்குடாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் பாசிக்குடா கடலில் மூழ்கி பலியானார்.

நேற்று மாலை இடம் பெற்ற இச்சம்பவத்தில் காலியைச் சேர்ந்த விக்கிரமசிங்க அக்கலங்க (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிரித்தலையிலுள்ள வன ஜீவராசிகள் பயிற்சிக் கல்லூரியில் 3 மாத பயிற்சியை முடித்துக் கொண்ட அதிகாரிகள் வெளியேறுவதை முன்னிட்டு இந்த சுற்றுலாப் பயணத்தை பாசிக்குடாவுக்கு மேற்கொண்டிருந்தனர்.

இச்சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட அதிகாரிகள் இருவர் கடலில் மூழ்கியதாகவும் ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும், குறிப்பிட்ட நபர் நீரில் மூழ்கி விட்டதாகவும் கூறப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எயிட்ஸ் நோய்க்கெதிராக மட்டக்களப்பில் பாரிய பேரணி


மட்டக்களப்பு மாவட்டத்தில் எயிட்ஸ் நோய்க்கெதிராக இன்று (12.12.2009.) காலை பாரிய கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

மட்டக்களப்பு மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் ஆரம்பமான ஊர்வலம் பல மணி நேரம், பல வீதிகள் வழியாகச் சென்று முடிவடைந்தது.

மட்டக்களப்பு பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம், தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் எஸ் தட்சணாமூர்த்தி உட்படப் பலர் இதில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை இருவர் எயிட்ஸ் நோயினால் மரணமடைந்துள்ளனர்; 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மட்டக்களப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டம் :இரண்டரை வருடங்களின் பின் கூட்டமைப்பு எம்.பிக்கள் பங்கேற்பு


மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்ற போது மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டரை வருடங்களின் பின்னர் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ,மத்திய அமைச்சர்களான எஸ்.எச்.அமீர் அலி ,விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் மாகாண ஆளுனர் வைஸ் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் ,தங்கேஸ்வரி கதிர்காமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் மத்திய அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட முதலாவது நிகழ்வு இதுவாகும்.

இன்றைய கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச காணிகளில் அத்து மீறல்கள் தொடர்பாக சுட்டிக்காட்டினர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லைப் பிரதேசமான கெவிலியாமடு மற்றும் மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்ட எல்லைப் பிரதேசமான தோணி தாண்ட மடு ஆகிய இடங்களில் தொடரும் சட்டவிரோத குடியேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்க அதிபர் ,மாகாண காணி ஆணையாளர் ,பிரதேச செயலாளர் பொலிஸ் ,இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படை அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இக்குழுவின் அறிக்கையை எதிர்வரும் திங்கள் கிழமைக்கு முன்னர் சமர்ப்ப்பிக்குமாறு அரசாங்க அதிபர் கேட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு - கல்முனை வீதியில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் முன்பாக மூடப்பட்டுள்ள வீதியை உடனடியாக திறந்து பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிப்பது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மட்டக்களப்பில் முதலாவது பன்றிக் காய்ச்சல் நோயாளி வைத்தியசாலையில் அனுமதி


மட்டக்களப்பு மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல்(H1 N1) வைரஸ் நோயினால் பீடிக்கபட்ட முதலாவது நோயாளர் இனம் காணப்பட்டுள்ளார்.

சத்துருக்கொண்டானைச் சேர்ந்த கே.பாக்கிராஜா (வயது 45) என்ற குறித்த நோயாளி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறிப்பிட்ட நோயின் அறிகுறிகளுடன் கடந்த 27 ஆம் திகதி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரது இரத்த மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்விற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை தொலைபேசி ஊடாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவன அறிக்கையில் இந்நபருக்கு பன்றிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதனையடுத்து வைத்தியசாலையில் ஊழியர்களிடையே பரபரப்பான நிலை காணப்படுவதாக எமது பிராந்திய நிருபர் தெரிவித்தார்.

முகக் கவசம் அணிந்து ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ள போதிலும் ஏற்கனவே சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முகக் கவசம் போதுமானதாக இல்லை என்பதால் வைத்தியசாலை நிர்வாகம் சிரமங்களை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்பு சுகாதார அமைச்சர் நிமால் ஸ்ரீ பால டீ சில்வாவினால் திறந்து வைக்கப்பட்ட தொற்று நோய்களுக்கான தனியான வார்ட் பிரிவு தொடர்ந்தும் இயங்காத நிலையில் காணப்படுகின்றது.

20 படுக்கைகளுடன் கூடிய குறித்த வார்ட்டை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை ஊழியர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

கடந்த வாரம் திருகோணமலையில் இந்நோயினால் பீடிக்கப்பட்ட இராணுவ சிப்பாயொருவர் உயிரிழந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தேசிய நல்லிணக்க அமைச்சின் பிராந்திய அலுவலகம் மட்டக்களப்பில் திறப்பு


தேசிய நல்லிணக்க அமைச்சின் முதலாவது பிராந்திய அலுவலகம் இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

மடக்களப்பு மாவட்ட செயலக கட்டிடத்தில் தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் மாநகர சபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் ஆகியோர் இவ்வலுவலகத்தை நாடாவை வெட்டித் திறந்து வைத்தனர்.

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரச செயலகங்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மட்டு. சிவானந்தா தேசிய பாடசாலை பரிசளிப்பு விழா


மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா வித்தியாலய அதிபர் எம்.ரவீந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கௌரவ அதிதிகளாக இராமகிருஷ்ண மிஷன் முதல்வர் சுவாமி அஜ்ராத்மானந்தாஜி, மண்முனை வடக்கு கோட்டக் கல்வி அதிகாரி எம்.டேவிட் ஆகியோரும் சிறப்பு அதிதியாக ஓய்வு பெற்ற அதிபர் பொன் ஆனந்தராஜாவும் கலந்து கொண்டார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மட்டக்களப்பில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்


வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களில் இரண்டாவது தொகுதியினருக்கு சமாதானத்திற்கான பல் சமய ஒன்றியத்தினால் அத்தியாவசிய பாவனைப் பொருட்களடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

இலங்கை - அமெரிக்கன் மிஷன் உதவியுடன் இந்நிவாரணப் பொருட்கள் கொக்கட்டிச்சோலை ,களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவுகளில் மீளக் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கே இரண்டாவது தொகுதியாக இவை வழங்கப்பட்டன.

சமாதானத்திற்கான பல் சமய ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு - திருகோணமலை துணை ஆயர் வண.ஜோசப் பொன்னையா ஆண்டகை மற்றும் அகில இலங்கை ரமண மகரிஷி அமைப்பின் மட்டக்களப்பு இணைப்பாளர் என்.செல்லத்துரை ஆகியோர் நிவாரணப் பொருட்களை உரியவர்களிடம் கையளித்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாசிவன்தீவு கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் கரையொதுங்கியது


வாழைச்சேனை நாசிவன்தீவு கடற்கரைக்கு விளையாடச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த சிறுவர்களில் ஒருவரது சடலமே இதுவரை கரையொதுங்கியுள்ளது.

மற்யை சிறுவன் தொடர்பாக இதுவரை தகவல்கள் இல்லை என வாழைச்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாழைச்சேனை முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த 11 வயதான சகாப்தீன் ஹதீப் ,என்ற சிறுவனின் சடலமே கரையொதுங்கியுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மட்டு.- கல்லடி புதிய பால நிர்மாண வேலைகள் இடைநிறுத்தம்


மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள கல்லடிப் பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் நிர்மாண வேலைகள் கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இம்மாவட்டத்தில் சுனாமிக்குப் பின்னரான மீள் கட்டுமானத் திட்டத்தின் கீழ் ஜப்பான் உதவியுடன் குறித்த புதிய பாலம் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

சீன நிறுவனமொன்று இதற்கான ஒப்பந்த வேலைகள் பொறுப்பேற்று ஆரம்ப வேலைகள் நடைபெற்று வந்தன. தற்போது நிர்மாண வேலைகள் இடைநிறுத்தப்பட்டு இதற்காக கொண்டுவரப்பட்ட உபகரணங்களும் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கின்றன.

குறித்த ஒப்பந்த நிறுவனத்தின் வேலைகள் திருப்தியின்மை, மற்றும் தாமதங்கள் காரணமாக ஏற்கனவே வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரிகள் சபை கூறுகின்றது.

தற்போது ஒப்பந்தம் வேறு நிறுவனம் ஒன்றுக்கு மாற்றப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிரிமிச்சையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி


மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திலுள்ள கிரிமிச்சை கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை நாளாந்தம் அதிகரித்து வருவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு காட்டு யானை தாக்கியதில் 55 வயது விவசாயியான சோமசுந்தரம் குமாரசாமி என்பவர் பலியாகியுள்ளார்.சம்பத்தில் மேலும் இரு விவசாயிகள் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விவசாயிகள் தமது வயல்களில் இரவு நேர காவல் கடமைக்காக தங்கியிருந்த போது வயலுக்குள் நுழைந்த யானைகள் 7 காவல் குடிசைகளை சேதமாக்கியதோடு விவசாயிகளையும் தாக்கியுள்ளது.

என்றுமில்லாதவாறு காட்டு யானைகளின் தொல்லை தற்போது அதிகரித்து வருவதால் தமது விவசாயச் செய்கை கூட அழிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வாழைச்சேனையில் உர மூடை ஏற்றிச்சென்ற லொறி விபத்து:இருவர் பலி


மட்டக்களப்பு வாழைச்சேனையிலிருந்து உர மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று பாதைய விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் இரண்டு விவசாயிகள் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் ஊற்றுச்சேனையைச் சேர்ந்த வீ.வடிவேல் (வயது 50 ) மற்றும் சி.சின்னராசா (வயது 50) ஆகியோரே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள அதே வேளை 15 பேர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விவசாயத்தினைக்களத்தினால் தங்களுக்கு வழங்கப்பட்ட உர மூடைகளை குறித்த வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஊற்றுச்சேனை - வெலிக்கந்தை வீதி வழியாக நேற்று முன் தினம் மாலை வயலுக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளை இந்த விபத்து ஏற்பட்டதாக காயமடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மாரி மழை பெய்து வருவதால் மழை நீர் தேங்கி வீதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் குறித்த வாகனம் பாதையை விட்டு விலகி மதகொன்றுடன் மோதியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மீள்குடியமர்வுக்காக மட்டக்களப்பு வந்தவர்கள் பொலிஸாரால் மீள் பதிவு


வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்ட குடும்பங்கள் சில பிரதேசங்களில் பொலிஸாரால் மீள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

885 குடும்பங்களைச் சேர்ந்த 2454 பேர் கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வரை மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட புனர்வாழ்வு செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் நிலைய பிரிவு ரீதியாக இக்குடும்பங்கள் தற்போது மீள் பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்முனை வடக்கு மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவுகளில் தங்கியுள்ள 48 குடும்பங்களைச் சேர்ந்த 212 பேர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு மீள் பதிவு மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மட்டக்களப்பில் 5000 சட்டவிரோத மீன்பிடிப் படகுகள் கண்டுபிடிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்தொழில் திணைக்களத்தில் பதிவுசெய்யப்படாத சுமார் 5000 மீன்பிடிப் படகுகள், தோணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன், பதிவு செய்யப்படாத படகுகளின் உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக மாவட்ட உதவிப் பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 450 ஆழ்கடல் இயந்திரப் படகுகள், 1250 வெளி இணை கரையோர இயந்திரப் படகுகள், 1300 கடல் தோணிகள், 2800 வாவித் தோணிகள் என்பன தினமும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள இம்மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் தமது படகுகளைக் கடற்தொழில் திணைக்களத்தில் பதிவு செய்யாது, சட்ட விரோதமான முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.

எதிர்வரும் 20 ஆம் திகதி இறுதி அறிவித்தல் என்றும் அத்திகதிக்குள் பதிவு செய்யப்படாத படகுகளின் உரிமையாளர்கள் மீது திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கல்குடாவில் அரிய 'காட்டு அணுங்கு' விலங்கினம் கண்டுபிடிப்பு


கல்குடா பொலிஸ் பிரிவின், பாசிக்குடா பகுதியில், அநாதரவான நிலையில், இலங்கையில் அருகிவரும் காட்டு அணுங்கு (எறும்பு தின்னி) விலங்கு ஒன்றை மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கல்குடா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வன ஜீவராசிகள் மட்டக்களப்பு சுற்றுவட்டார பாதுகாப்பு அதிகாரி என்.சுரேஷ்குமார் தலைமையில், உதவி பாதுகாப்பு அதிகாரி ஏ.டி.பெஞ்சமின், வன ஜீவராசி பாதுகாப்பு உத்தியோகத்தர்களான ஜீ.பிரசாந்த், எஸ்.குபேரலிங்கன், ரீ.தேனுவர, ரீ.தஸநாயக்க ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்தக் காட்டு அணுங்கு விலங்கைக் கண்டுபிடித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறமான பெரியபுல்லு மலைக்காட்டுப் பகுதிக்கு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் கொண்டு செல்லப்பட்ட இவ்விலங்கு, அங்கு சுதந்திரமாக விடப்பட்டதாக மட்டு.மாவட்ட அரச ஊடக அதிகாரி பி.ரீ.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழக்கில் ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையம் திறப்பு


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா ஏ.பியூடெனிஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையம் ஒன்றை திறந்து வைத்துள்ளார்.

அம்மாவட்டத்தில் உள்ள 4,000 பாற்பண்ணை விவசாயிகளின் அன்றாட வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளோருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவரான 'யு.எஸ்.எய்ட்' இப்புதிய ஐஸ் கிறீன் உற்பத்தி நிலையத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு 3.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை, அமெரிக்காவின் பிரபல பால் உற்பத்தியாளரான 'லாண்ட் ஓ லேக்' , மற்றும் இலங்கையின் பிரபல விவாசாய நிறுவனமான சிஐசி ஆகியவற்றுக்கு வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர்,

"கிழக்கில் புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் அமெரிக்கா பெருமையடைகின்றது. இத்திடத்தின் மூலம் விவசாயிகளின் நாளாந்த வருமானம் அதிகரிப்பதுடன் இலங்கையில் பால் உற்பத்தி தரமடையக் கூடியதாக இருக்கும். இறக்குமதி செய்யப்படும் பாற் பொருட்களின் அளவும் குறையும்" எனத் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் பங்குபற்றியுள்ள மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களுக்கு பால் உற்பத்தித் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கையில் உள்நாட்டு பால் உற்பத்தி 9 சதவீதத்தால் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக, இது தொடர்பாக அமெரிக்கத்ச் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மட்டக்களப்பு கன்னியர் மடத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற பிள்ளைகளுக்கு வெண்மயில் அமைப்பு உதவி.

கடந்தகால யுத்த அனர்த்தங்களினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டு அனாதரவான நிலையில் மட்டக்களப்பு கன்னியர்மடத்தில் தங்கியுள்ள பெண் பிள்ளைகளுக்கு வெண்மயில் நிறுவனம் உதவிகளை வழங்கியுள்ளது.

வெண்மயில் அமைப்பின் தலைவரும் ஜேர்மன் பிராந்திய ஈபிடிபி அமைப்பாளருமான மாட்டின் ஜெயா அவர்கள் கடந்த வாரம் அங்கு விஜயம் மேற்கொண்டபோதே மேற்படி உதவிகளை வழங்கினார். ஜெயந்திபுரத்தில் அமைந்துள்ள கன்னியர்மடத்திற்கு மாட்டின் ஜெயா அவர்களும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஈபிடிபி அமைப்பாளருமான சிவா மாமா அவர்களும் விஜயம் மேற்கொண்டபோது கன்னியர் மடத்தின் நிர்வாகிகளான அருட்சகோதரி அனற்றா மற்றும் அருட்சகோதரி ஏஞ்சலா ஆகியோர் அவர்களை மகிழ்வுடன் வரவேற்றனர்.

கன்னியர் மடத்தின் நிர்வாகிகளுடனும் குறிப்பாக அங்கு தங்கியுள்ள ஆதரவற்ற பிள்ளைகளுடனும் கலந்துரையாடிய மாட்டின் ஜெயா அவர்கள் வளமானதொரு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அவர்களுக்கு தெரியப்படுத்தியதுடன் அவாகளுக்கு மதிய போசனம் வழங்கியதுடன் பிள்ளைகளின் தேவைகளின் பொருட்டு ஒரு தொகையினையும் நிதி உதவியாக வழங்கினார். மேலும் எதிர்வரும் காலத்திலும் வெண்மயில் அமைப்பால் தொடர் உதவிகள் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். ஆதரவற்ற பெண்பிள்ளைகளின் நலன் குறித்த வெண்மயில் அமைப்பின் அக்கறை குறித்து தமது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் கன்னியர்மட நிர்வாகிகள் தெரிவித்துக்கொண்ட அதேவேளை அங்கு தங்கியுள்ள பிள்ளைகளும் தமது நன்றிகளை பகிர்ந்துகொண்டனர்





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழ.மாகாண மற்றும் மத்திய கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்களின் ஏற்பாட்டில் கண்காட்சி


கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சு மத்திய கால் நடை அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கால்நடை அபிவிருத்தி தொடர்பான கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களையும் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானோர் பார்வையிட்டனர்.

இம்மாவட்டத்தில் கால் டை அபிவிருத்தியில் முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வை மையப்படுத்தி மட்டக்களப்பு இந்து கல்லூரி மண்டபத்திலும் மைதானத்திலும் நடைபெற்ற இக்கண்காட்சியை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேத்சதுரை சந்திரகாந்தன் திறந்து வைத்தார்.

மாகாண கால்நடை அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் ,பிரதம செயலாளர் மு.பொ.பாலசிங்கம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இக்கண்காட்சியில் கால் நடைகளுடன் பல்வேறு வகையான கால் டை உற்பத்திப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு அது பற்றிய விளக்கமும் அளிக்கப்பட்டது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates