jkr
แสดงบทความที่มีป้ายกำกับ இந்தியச் செய்திகள் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ இந்தியச் செய்திகள் แสดงบทความทั้งหมด

அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய தமிழக அரசு பரிந்துரை : அமைச்சர் பொன்முடி தகவல்


சென்னை : அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் இருக்கும் 16 நிகர் நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது . இது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சில அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது : தமிழக முதல்வர் கருணாநிதியு‌டன் ஆலோசனை நடத்திய பிறகு தமிழக அரசு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் குறித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தேவையில்லை. நிகர்நிலை பல்கலை என்ற பெயரில் நிகரற்ற அதிகாரங்களை வைத்துக் கொண்டு, மத்திய மாநில அரசுகளை மதிக்காமல் அவை தன்னிச்சையாக செயல்படுகின்றன. எனவே நிகர்நிலை பல்கலைகழகங்களை ரத்து செய்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு தமிழக அரசு முழு ஆதரவு தெரிவிக்கிறது . ஆனால் இந்த முடிவு ஒரு சில நிகர் நிலைப் பல்கலைகழகங்களுக்கு மட்டும் என நின்று விடாமல், அனைத்து நிகர்நிலை பல்கலைகழகங்களுக்கான அதிகாரத்தையும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்பதே தமிழக அரசின் பரிந்துரை என்றார்.
மாணவர்கள் நலனுக்கு பாதுகாப்பு : தமிழகத்தில் தற்போது நிகர் நிலை பல்கலை.,யில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தார். மாணவர்கள் எந்தப் பாடப்பிரிவில் பயில்கிறார்களோ அதே பாடப்பிரிவில் தங்கள் கல்வியை தொடர ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களை சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றி அவை தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதோடு அவ்வாறு செய்தால் தான் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர்கள் கட்டண விவகாரங்கள் அரசின் கட்டுக்குள் வரும் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கடத்தல் அபாயம்: ஏர் இந்தியா விமானங்களில் தீவிர கண்காணிப்பு


புதுதில்லி, ஜன.22: அண்டை நாடுகளில் இயக்கப்படும் இந்தியா விமானங்களில் ஒன்றை லஷ்கர்-இ-தோய்பா அமைப்பினர் கடத்த முயற்சிக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து அனைத்து ஏர் இந்தியா விமானங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.


சார்க் நாடுகளிலிருந்து இயக்கப்படும், குறிப்பாக, நேபாளம், வங்கதேசம், இலங்கை, பூடான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா விமானங்களில் ஒன்றைக் கடத்த லஷ்கர்-இ-தோய்பா, ஜமாத்-உல்-தவா அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.


புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் உஷார்நிலையில் இருக்குமாறு விமான நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்பு தனிச்செயலர் யு.கே பன்சால் தெரிவித்தார். வெளிநாடுகளில் இயக்கப்படும் நமது விமானங்களில் ஒன்றைக் கடத்த பயங்கரவாதிகள் முயற்சிக்கலாம் என சந்தேகம் இருப்பதால் கடத்தல் முயற்சியைத் தடுக்கும் நடவடிக்கைகளில் கவனமாக இருக்குமாறு பாதுகாப்பு அமைப்புகளை உஷார்படுத்தியுள்ளதாக பன்சால் தெரிவித்தார்.


இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தையும், விமான நிலைய பாதுகாப்புப் படையையும் கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

21 குண்டுகள் முழக்கத்துடன் லட்சக்கணக்கில் மக்கள் அஞ்சலி:மருத்துவமனையில் பாசு உடல் ஒப்படைப்பு



கோல்கட்டா:மறைந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் உடலுக்கு, 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் நேற்று இறுதிச் சடங்குகள் நடந்தன. பின், அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக நடந்த இறுதி ஊர்வலத்தில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான ஜோதிபாசு (95), உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த 17ம் தேதி காலமானார். கோல்கட்டாவில் "பீஸ் ஹெவன்' என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஜோதிபாசு, தனது கண்களை தானம் செய்திருந்ததால், இறந்த சில மணி நேரங்களிலேயே அவரது கண்களை, டாக்டர்கள் அகற்றினர்.


இந்நிலையில், ஜோதிபாசுவின் இறுதி ஊர்வலம், நேற்று காலை துவங்கியது. பீஸ் ஹெவனில் இருந்து அவரது உடல், மாநில தலைமைச் செயலக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், அங்கிருந்து அலிமுதீன் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, தலைமைச் செயலர் மோகன் சக்கரவரத்தி ஆகியோர், ஜோதிபாசுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்று காலை 10 மணிக்கு, அங்கிருந்து மேற்கு வங்க சட்டசபை கட்டடத்துக்கு, அவரது உடல் கொண்டு வரப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப் பட்டது. அவரது உடலில் ஏற்கனவே செங்கொடி போர்த்தப்பட்டு இருந்தது. அதற்கு மேல், தேசியக் கொடியை முப்படையினர் போர்த்தினர். ஆனால், முன்னதாக இங்கே பாசு உடல் வைக்கப்பட்டிருந்த மேடையருகே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மக்கள் முண்டியடித்தபடி, தங்கள் அபிமானத் தலைவரை பார்க்க முனைந்தனர்.


கம்யூ., கட்சி செயலர் பிமன்போஸ், கூட்டத்தினர் அமைதிகாக்க, வேண்டுகோள் விடுத்தார். நிலைமையைச் சமாளிக்க, ஒரு பகுதி நுழைவு வாயிலை போலீசார் சாத்தினர். அப்போது, போலீசாரை காத்திருந்த கூட்டத்தினர் வசைமாரி பொழிந்தனர். பின்பு ஒருவழியாக அமைதி திரும்பியது.


சோனியா, ஹசீனா அஞ்சலி: சட்டசபை வளாகத்தில் வைக்கப் பட்டிருந்த ஜோதிபாசுவின் உடலுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா, நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அவருடன் வந்திருந்தார்.


மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ், மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் அங்கிருந்தனர். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியும் அஞ்சலி செலுத்தினார்.வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, 30 பேர் அடங்கிய அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் வந்து, ஜோதிபாசுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். வங்கதேச முன்னாள் பிரதமர் எர்ஷாத்தும் அஞ்சலி செலுத்தினார்.


லட்சம் பேர் பங்கேற்பு: மாலை 3 மணியளவில் ஜோதிபாசுவின் உடல், அலங்கரிக்கப்பட்ட ராணுவ பீரங்கி வண்டியில் வைக்கப் பட்டது. பின், அங்கிருந்து விக்டோரியா மெமோரியல் அருகே உள்ள பார்க்கிற்கு, அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான மார்க்சிஸ்ட் கட்சியினர் செங்கொடியுடன், ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின், விக்டோரியா மெமோரியல் அருகே உள்ள பார்க் கில், இறுதிச் சடங்குகள் நடந்தன. 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.


பின், அங்கிருந்து எஸ்.எஸ். கே.எம்., மருத்துவமனைக்கு, அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. ஜோதிபாசுவின் உடல், மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான சான்றிதழ்களை, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பீமன் போஸ், மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

23 ஆண்டுகள் மேற்கு வங்க முதல்வராக, அம் மாநில மக்களின் ஏகோபித்த செல்வாக்குடன் ஆட்சி நடத்திய ஜோதிபாசுவின் இறுதி ஊர்வலத்தில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து, இந்திய விஞ்ஞானிகள் சாதனை!


ஒவ்வொரு மனிதனின் குணாதிசயம்இ செயற்பாடுகள் திறமை, நிறம், தோற்றம், நோய் உள்ளிட்டவற்றுக்கு அவனது மரபணுக்களே காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் மரபணுவுக்கும் அவனது தந்தையின் மரபணுவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

தந்தையின் மரபணு பட்டியலில் ஏதாவது ஓரிடத்தில் நோய் இருந்தால் அவரது மகனுக்கும் அந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது. மரபணுப் பட்டியல் இருந்தால் மகனுக்கு முன்கூட்டியே மருந்து கொடுத்து அந்த நோயை தடுத்து விடமுடியும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மரபணு பட்டியலைத் தயாரிப்பது மிகவும் கடினம். இருப்பினும் அமெரிக்காஇ பிரிட்டன்இ கனடாஇ கொரியாஇ சீனா உட்பட 14 நாடுகள் தனித்தனியாக இப்பட்டியலைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளன.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்ஸிலைத் (சி.எஸ்.ஐ.ஆர்) சேர்ந்த மரபணு விஞ்ஞானிகள்இ மரபணுப் பட்டியலைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கினர்.

9 வார தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

இத்தகவலை சி. எஸ். ஐ. ஆர். தலைவர் சமீர் பிரம்மசாரி டில்லியில் தெரிவித்தார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பற்றி எரிகிறது தெலங்கானா! 33 எம்எல்ஏ; 4 எம்பிக்கள் ராஜினாமா


தனி தெலங்கானா கோரி 48 மணி நேர பந்த் நள்ளிரவு தொடங்கியது. இதனால் போராட்டம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ், நடிகை விஜயசாந்தி உட்பட 4 எம்பிக்கள் ராஜினாமா செய்தனர். இதுதவிர டிஆர்ஸ், காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்யம் கட்சிகளை சேர்ந்த 33 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். பல இடங்களில் பஸ்கள், அரசு அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டன. தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
தனி தெலங்கானா மாநிலம் குறித்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 2வது முறையாக நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தெலங்கானா மாநிலம் அமைய எந்தக் காலக்கெடுவும் இல்லை என்றதுடன் மத்திய அரசு உறுதியான முடிவை வெளியிடவில்லை.

இதுகுறித்து தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கருத்து கூறுகையில் ‘மத்திய காங்கிரஸ் அரசு நம்பிக்கை துரோ கம் செய்துவிட்டது. தெலங்கானா தனி மாநிலம் அமைய காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை. மீண்டும் அனைத்து கட்சிகளுடன் விவாதம் நடத்திய பின்னரே தெலங்கானா மாநிலம் அமைவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. இந்த அறிக்கையானது சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே இலையை பிடுங்கிக் கொண்டது போலாகும்’ என்றார்.
இதைத் தொடர்ந்து தெலங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி வீட்டில் காங்., டிஆர்எஸ் பிரஜா ராஜ்யம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களுடன் சந்திரசேகர ராவ் இரவு 11 மணி வரை ஆலோசனை நடத்தினார்.
இதில் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து தெலங் கானா மாவட்டங்களில் 48 மணி நேர பந்த் நடத்த சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்தார்.
இந்த பிரச்னையில் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கட்சி பாகுபாடின்றி வார்டு கவுன்சிலர்கள் முதல் எம்எல்ஏக்கள், உள்ளாட்சி மன்ற தலைவர்கள், எம்பிக்கள் வரை அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அதன்படி முதலாவதாக சந்திர சேகரராவ் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நடிகை விஜயசாந்தி, ரமேஷ் ராத்தோடு, பிரபாகர் ஆகிய எம்பிக்களும் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து டிஆர்எஸ்., காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி களை சேர்ந்த 33 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தனர்.

இதுதவிர எம்எல்சிக்கள், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள், உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தவண்ணம் உள்ளனர்.
இதனிடையே 48 மணி நேர பந்த் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் இரட்டை நகரங்களான ஐதராபாத், செகந்திரபாத் மற்றும் வாரங்கல், கம்மம், கரீம் நகர், அடிலாபாத், மேதக், நிஜாமாபாத், நலகொண்டா உள்ளிட்ட 9 தெலங்கானா மாவட்டங்களில் அரசு பஸ்கள், தனியார் பஸ் போக்குவரத்து நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டது. இன்று காலை வரை 10க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் 150 பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. தெலங்கானா மாவட்டங்களில் வரும் ஜனவரி 1ம் தேதி வரை 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இருப்பினும் மாணவர் சங்கங்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர். ஆசிரியர்கள் கூட்ட மைப்பினர், தொழிலாளர்கள், வக்கீல்கள் சங்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்பினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானா மாவட்டங்களில் ரயில் மறியல், கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல் போராட்டங்களும் நடந்து வருகிறது. தலைநகர் ஐதராபாத் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவு டிஆர்எஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் ராம்மோகன், மாநில பொதுச் செயலாளர் பிரபாகர் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக கைது செய்யப்பட் டனர்.

இதை கண்டித்து தெலங்கானா பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறை கலவரங்களில் குதித்துள்ளனர். வாரங்கல்லில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. விஜயவாடா & ஐதராபாத் சாலையில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஐதராபாத் ஐகோர்ட் உட்பட தெலங்கானா பகுதிகளில் உள்ள அனைத்து கோர்ட்களையும் வக்கீல்கள் புறக்கணித்துள்ளனர். வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் இன்று நடப்பதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. ஆட்டோக்கள் கூட ஓடாததால் பயணிகள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். வங்கிகள், பெட் ரோல் பங்குகளும் மூடிக் கிடக்கிறது. மகபூப் நகர் தாலுகா அலுவலகத்திற்கு இன்று காலை வன்முறையாளர்கள் தீ வைத்தனர். சித்திப்பேட்டை அருகே மச்சாவூர் என்ற இடத்தில் அரசு பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டது. தொடர்ந்து தெலங்கானா பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இரண்டு வயது குழந்தை உயிரோடு எரிந்து சாம்பல்!


ராஸ் அல்கைமா: கோர் குவைர் பகுதியில் உள்ள தனது இரண்டாவது தந்தை வீட்டில் இருந்த இரண்டு வயது நிரம்பிய பங்களாதேஷை சேர்ந்த பெண் குழந்தை ஒன்று அத் தந்தைக்கு பிறந்த மூன்றரை வயது மகனுடன் விருந்தினர் அறையில் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் உயிருடன் எரிந்து சாம்பலான சம்பவம் நடந்துள்ளது
ராஸ் அல்கைமா உள்துறை அமைச்சக தற்காலிக தலைவர் கர்னல் முகமது அப்துல்லா அல் ஜாபி கூறும்போது அச்சிறுமியின் உடல் முற்றிலுமாக கரிந்து சாம்பலாகிபோனதாக கூறினார். மேலும் அக் குடும்பத்தினர் விருந்தினர் அறையிலிருந்து புகை வருவதை கவனித்தும் அதனுள் குழந்தை விளையாடிக்கொண்டிருந்ததை கவனிக்காததையடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது

அச்சிறுவனும் சிறுமியும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போது அச்சிறுவன் அவனிடம் இருந்த லைட்டரை கொளுத்தி அங்கிருந்த சில பொருட்களில் தீவைத்துவிட்டு ஓடிவிட்டதாகவும் இதனால் அறைமுழுவதும் தீ பரவியது இதனால் மூச்சுதிணறிய அக்குழந்தை மயங்கி விழுந்து தீயில் கருகியது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து விருந்தினர் அறைக்கு சென்று பார்த்தபோது குழந்தை கருகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இறந்த சிறுமியின் தாய் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் இவர் முந்தைய கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பெண்ணாவார்.கர்னல் முகமது அப்துல்லா அல் ஜாபி கூறுகையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தீ விபத்துகளை உண்டாக்கும் பொருட்களுடன் விளையாடுவதை தவிர்த்தால் இது போன்ற சோக சம்பவங்களையும் தவிர்க்கமுடியும் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கணவனை எரித்த மனைவி தீயில் கருகி பரிதாப பலி.


தாய் வீட்டுக்கு செல்ல அனுமதி தராத கணவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மனைவி, தன் மீதும் தீ வைத்துக் கொண்டார். இதில் மனைவி இறந்தார். கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒசூர் அருகேயுள்ள இடையநல்லூரை சேர்ந்தவர் ரமேஷ் (28). விவசாய கூலித் தொழிலாளி. மனைவி மதுஸ்ரீ (22). 2 ஆண் குழந்தைகள் உள்ளன. கர்நாடக மாநிலம் ஆனைக்கல்லில் உள்ள தாய் வீட்டுக்கு செல்ல கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார். ரமேஷ் மறுத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவருக்கு சாப்பாடு போட்டுக் கொண்டே, தாய் வீடு செல்ல மீண்டும் மதுஸ்ரீ அனுமதி கேட்டார். அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மதுஸ்ரீ, வீட்டில் இருந்து மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்தார். தன் மீதும் ரமேஷ் மீதும் எண்ணெயை ஊற்றி தீ வைத்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இருவரின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து ஒசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் பெங்களூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மதுஸ்ரீ நேற்றிரவு இறந்தார். ஆபத்தான நிலையில் ரமேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மத்திகிரி இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புவனேஸ்வரியின் அடேங்கப்பா அறிமுகம்!


மூவேந்தர் முன்னணி கழகத்தின் துணையுடன் பெண்களுக்காக முழுக்க முழுக்க பாடுபடுவேன் என்று மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் நடிகை புவனேஸ்வரி கூறியுள்ளார். மூவேந்தர் முன்னணி கழகத்தில் இணைந்த நடிகை புவனேஸ்வரியை கட்சிக்காரர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது. விபச்சாரம் செய்தார் என போலீசாரால் கைது செய்யப்பட்டு, இப்போது ஜாமீனில் வெளியே இருக்கும் திரைப்பட மற்றும் டி.வி. நடிகை புவனேஸ்வரி மூவேந்தர் முன்னணி கழகத்தில், கட்சியின் தலைவர் டாக்டர் சேதுராமன் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இணைந்தார். சென்னை தியாகராயநகரில் உள்ள அலுவலகத்தில் டாக்டர் சேதுராமனுக்கு அப்போது மாலை அணிவித்தார். நடிகை டி.புவனேஸ்வரிக்கு மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து நடிகை புவனேஸ்வரியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று சென்னையில் அமர்க்களமாக நடந்தது. வழக்கமாக இம்மாதிரி கூட்டங்களுக்கு தலைகாட்டாத பலர் ஆர்வத்துடன் வந்து, புவனேஸ்வரி வருகைக்காகக் காத்திருந்தனர். கூட்டம் துவங்கியதும் மூவேந்தர் முன்னணி கழகப் பொதுச்செயலாளர் இசக்கி முத்து நடிகை புவனேஸ்வரியை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் புவனேஸ்வரி நிருபர்களுக்கு தந்த பேட்டி:


3வருடத்துக்கு முன்பே நான் இந்த கட்சியில் சேர்ந்திருக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலையால் சேரவில்லை. இப்போது அரசியலில் சேரும் நேரம் வந்ததால் இணைந்துள்ளேன்.

மூவேந்தர் முன்னணி கழகம் நான் சார்ந்த சமுதாய கட்சியாகும். டாக்டர் சேதுராமன் எனக்கு இந்த பொறுப்பை வழங்கியதால் கட்சி பணியில் தீவிரமாக செயல்படுவேன்.

கடந்த கால சம்பவம் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. அது விதியின் விளையாட்டு. போலீசார் எனக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்தார்கள். அதை நான் சட்டரீதியாக சந்திப்பேன். என் மீது போடப்பட்ட வழக்கை சந்தித்து குற்றமற்றவர் என நிரூபிப்பேன்.

நான் கைது செய்யப்பட்டபோது வாக்குமூலம் எதுவும் கொடுக்கவில்லை. நான் சொன்னதாக வந்த அனைத்து தகவல்களும் தவறானது. நான் வாக்குமூலம் கொடுக்கவில்லை என்று போலீஸ் கமிஷனரே கூறி இருந்தார்.

நடிகர் சங்க தலைவர் சரத்குமாரை நேற்று சந்தித்து இது தொடர்பாக விளக்கம் தெரிவித்தேன். எனது விளக்கத்தை அவர் ஏற்றுக்கொண்டார். எந்த நடிகர்-நடிகை பற்றியும் நான் போலீசில் எதுவும் சொல்லவில்லை.

பத்திரிக்கையாளர்கள் எனது நண்பர்கள். பத்திரிக்கையாளர்களை பற்றி நான் எதுவும் தவறாக எங்கும் பேசுவது கிடையாது. யாரோ சிலர் பேசினார்கள் என்றால் அது அவர்களுக்குள் விஷயமாகும்.

நடிப்பு என் மூச்சு அதை நிறுத்த மாட்டேன். தற்போது அரசியலிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் இங்கும் பிரகாசிப்பேன்.

பெண்களுக்கு எதிராக அநீதி எங்கு நடந்தாலும் குரல் கொடுப்பேன். எதிர் காலத்தில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சித் தலைமை முடிவுப்படி செயல்படுவேன்.

திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல முடியவில்லை. விரைவில் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறேன்.

ஆளுங்கட்சிக்கு எதிராக எந்தப் போராட்டமும் நடத்தும் ‘ஐடியா’ இல்லை என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சட்டீஸ்கரில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை


ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் போலீஸ்-நக்சலைட் இடைய நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சட்டீஸ்கர், தான்டேவாடா மாவட்டத்தில் ஆரன்பூர் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது நேற்று நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர்.

பதிலுக்கு போலீசாரும் திருப்பி தாக்கியத்தை அடுத்து அப்பகுதியில் இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதி்ல் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாஸ்டர் சரக ஐ.ஜி ஆர்.கே.விஜ் தெரிவித்தார்.

மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த அந்த நக்சலைட்டுகள் போலீசாரின் கண்ணில் படாமல் இருப்பதற்காக பள்ளி சீருடைகளை அணிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் பைகளில் இருந்து கிரானைடுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர் பிளேட்: பிரதீபா பாட்டீல் உயிர் தப்பினார்


புவனேஸ்வர்: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஆகியோர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டரில் ஒரிசா ஆளுனர் எம்.சி.பண்டாரியும் இருந்தார்.

நேற்று மாலை பூரி நகரில் இருந்து புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கிய போது இந்த விபத்து நிகழ்ந்தது.

புவனேஸ்வரி்ல் உள்ள பிஜுபட்நாயக் விமான நிலையத்தில் தரையிறங்கிய சமயத்தில், ஒரு கட்டிடத்தின் மேற்கூரையில் ஹெலிகாப்டரின் மேற்புற விசிறி உரசியது. விசிறிகள் உரசிய வேகத்தில் கட்டிடத்தில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் தூக்கி வீசப்பட்டன. இதில் ஹெலிகாப்டரின் விசிறிகள் வளைந்தன.

பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு, உடனடியாக ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் இருந்த பிரதீபா பாட்டீல் உள்ளிட்டோர் தப்பித்தனர்.

சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Read: In English
ஏற்கனவே முன்பு ஒரு முறை பிரதீபா பாட்டீல் பயணம் செய்த விமானப்படை விமானம் தரையிறங்கும்போது, இன்னொரு விமானம் டேக் ஆப் ஆக அனுமதி கொடுக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு விபத்தை குடியரசுத் தலைவர் சந்தித்துள்ளதால் பாதுகாப்பு கோளாறு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தெலுங்கானா முடிவை சிதம்பரம் எப்படி அறிவிக்கலாம்?- பாஜக


டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் குறித்து நாடாளுமன்றத்தில் ஆலோசிக்காமல் எப்படி இதுபற்றி அறிவிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை குற்றம்சாட்டி பா.ஜ.க உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டனர்.

இன்று ராஜ்யசபா அவை நடவடிக்கை துவங்கியவுடன் பா.ஜ தலைவர் வெங்கைய நாயுடு இப்பிரச்னையை எழுப்பினார். 'உள்துறை அமைச்சர் நேற்று அவையில் தான் இருந்தார். தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்து அவையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

அதற்கு பதிலாக வெளியே சென்று இதுதொடர்பான அறிவிப்பை வெளியி்ட்டுள்ளார். இதில் உள்நோக்கம் இருக்கிறது' என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களும், பா.ஜ உறுப்பினர்களும் பதிலுக்கு கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இதனால் சிறிது நேரம் அவை அமளியானது.

அரசியல் சாசன சட்டப்படி எதையும் நாடாளுமன்றத்தில விவாதித்து தான் முடிவெடுப்போம். இது உறுப்பினர்களுக்கு தெரியாதா. ஏன் கூச்சலிடுகிறீர்கள் என அவைத் தலைவர் ஹமீது அன்சாரி சமாதானப்படுத்தினார்.

அப்போது, 'இது தெரியாதா எங்களுக்கு. அவையில் விவாதித்த பின் அறிவித்தால் அது ஒருமித்த கருத்து. ப.சிதம்பரம் அறிவித்த பின் விவாதித்தால் அது காங்கிரஸ் கருத்து என உறுப்பினர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இந்த அமளியால் அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பாபர் மசூதி இடிப்பு: நரசிம்மராவ் தப்புக் கணக்குப் போட்டு விட்டார் -ப.சிதம்பரம்


டெல்லி: உ.பி. அரசையும், பாஜகவையும் நம்பியதன் மூலம், பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசு தப்புக் கணக்குப் போட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

லோக்சபாவில் 2 நாட்களாக நடந்து வந்த லிபரான் கமிஷன் அறிக்கை மீதான விவாதத்திற்கு நேற்று மாலை பதிலளித்து ப.சிதம்பரம் பேசுகையில், 1992ம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலைகள் குறித்து நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏமாந்து விட்டது.

பாஜகவையும், உ.பி அரசையும் நம்பியதன் மூலம் நரசிம்மராவ் அரசியல் தப்புக் கணக்குப் போட்டு விட்டார். இதன் விளைவு சங் பரிவார் அமைப்புகள் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது. காங்கிரஸுக்கு தேர்தல் ரீதியாகவும் அடி விழ காரணமாக அமைந்து விட்டது.

கல்யாண் சிங் தலைமையிலான மாநில அரசு மத்திய அரசுக்கு பொய்யான வாக்குறுதிகளை நம்பி மோசடி செய்து விட்டது. மத்திய அரசிடம் மட்டுமல்லாமல், சுப்ரீம் கோர்ட், தேசிய ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றிடமும், பாபர் மசூதியைக் காப்போம் என பொய் சொல்லியது.

இப்படி கல்யாண் சிங் தலைமையிலான அரசு கூறிய வாக்குறுதிகளை நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு நம்பியது தவறு. இது வருத்தத்திற்குரியது.

திட்டமிட்டு இடித்தனர்...

பல்வேறு மாநிலங்களிலிருந்து கரசேவகர்களை அயோத்திக்கு வரவழைத்து திட்டமிட்டு மசூதியை இடித்தனர். இடிக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது ஒரே நோக்கமாக இருந்தது.

அடல் பிகாரி வாஜ்பாய் சம்பவம் நடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்று அயோத்தியில் இல்லாவிட்டாலும் கூட, அதற்கு முந்தைய தினம், கரசேவகர்களை தூண்டும் வகையில், பேசினார் என்றார் ப.சிதம்பரம்.

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் நரசிம்மராவின் பங்கு குறித்து பலரும் குற்றம் சாட்டி வந்தபோதும், லிபரான் கமிஷன் அறிக்கையில் அதுகுறித்து எந்த வார்த்தையும் இடம் பெறவில்லை. இது சர்ச்சையை எழுப்பியிருந்தது.

இந்த நிலையில் நேற்று ப.சிதம்பரம் மூலம் நரசிம்மராவின் மெளனமும் தவறானதுதான் என்ற பதிலை காங்கிரஸ் வழங்கியதாக கருதப்படுகிறது.

ராவ் அரசு இடிப்பைத் தடுத்திருக்க முடியும்- காங். எம்.பி.

காங்கிரஸ் கட்சியின் பேனி பிரசாத் வர்மாவும் நேற்று நரசிம்மராவை சாடிப் பேசினார்.

அவர் பேசுகையில், பாபர் மசூதி இடிப்பைத் தடுக்கும் வகையில் சுதாரிப்பாக செயல்பட நரசிம்மராவ் தவறி விட்டார்.

மசூதி இடிப்பில் பாஜகவுக்கும், சங் பரி்வார் அமைப்புகளுக்கும் முக்கியப் பங்கு உள்ளது என்றால் நரசிம்மராவும் தப்பு செய்து விட்டார் என்பதை மறுக்கக் கூடாது.

ஒரு வீட்டில் யாராவது திருடப் போனால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்று சொல்லலாம். அதேசமயம், இதை அறியாமல் வீட்டு உரிமையாளர் தூங்கிக் கொண்டிருந்தால் அந்தப் பாவத்தில் பாதி அவருக்கும் போய்ச் சேரும்.

நீங்கள் (பாஜக) பாவம் செய்தவர்கள். இப்படிப்பட்ட பாவத்தைச் செய்த அவர்களைத் தடுக்க மத்திய படைகளை நரசிம்மராவ் ஏவியிருந்தால் கரசேவகர்களை பாபர் மசூதியை நெருங்க விடாமல் தடுத்திருக்க முடியும்.

இந்தியாவின் ஜனநாயக பெருமைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது மசூதி இடிப்புச் சம்பவம். இத்தகைய செயலில் ஈடுபட்ட பாஜகவுக்கு கொடுக்கப்படும் சரியான தண்டனை, அரசியல் ரீதியாக அவர்களை மக்கள் ஒதுக்கி வைப்பதுதான்.

எனக்கு சொந்த ஊர் அயோத்திக்கு பக்கத்தில்தான். ராமர் எங்கு பிறந்தார் என்பது குறித்து பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு ஓடி வந்த அத்வானியை விட எனக்கு நன்றாகவே தெரியும். (அப்போது பாஜக உறுப்பினர்கள் எழுந்து கடுமையாக ஆட்சேபித்துக் குரல் எழுப்பினர்).

16வது நூற்றாண்டில் இருந்த ராமர் கோவிலை இடித்து விட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாக பாஜகவினர் கூறுவது தவறான செய்தியாகும். அந்தக் கோவில் உண்மையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் கட்டிய கோவிலாகும். அது ராமர் கோவில் அல்ல. பின்னர் அவர்கள் முஸ்லீம் மதத்திற்கு மாறி விட்டனர். இதுதான் உண்மை என்றார் வர்மா.

வர்மாவின் பேச்சால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. குறி்ப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து வர்மா அவதூறாகப் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மற்றும் சமாஜ்வாடிக் கட்சியினர் கோஷமிட்டனர்.

இதையடுத்து முதலில் 5 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சபை கூடியபோதும் வர்மா மன்னிப்பு கேட்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

வாஜ்பாய் குறித்து அவதூறாகப் பேசியுள்ளார் வர்மா. இது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் பாரபட்சம் இல்லாமல் அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படுபவர் வாஜ்யாப். எனவே வர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையான குரலில் வலியுறுத்தினர். இதனால் சபைக் கூட்டத்தை நடத்த முடியவில்லை.

இதையடுத்து எழுந்த வர்மா, தான் பேசிய சில வார்த்தைகள், உறுப்பினர்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஆனால் திருப்தி அடையாத பாஜகவினர், தொடர்ந்து வர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பியபடி இருந்தநர்.

இதையடுத்து குறுக்கிட்ட சபாநாயகர் மீரா குமார், வர்மா பேசிய அவதூறான வார்த்தைகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுதாக தெரிவித்தார். மேலும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் எழுந்து வர்மா பேச்சுக்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். இருப்பினும் பாஜகவினர் அமைதி அடையவில்லை. இதையடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சங்கரன்கோவில்: வீட்டில் பெண் கொலை


சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே வீ்ட்டில் தனியாக இருந்த பெண் குத்திக்கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் நகைக்காக கொல்லப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் பரமசிவன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். குழந்தைகள் இல்லாததால் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் மாரியம்மாளின் வீட்டு கதவு திறக்காததால் அருகிலுள்ள அவரது தம்பி கருப்பசாமியின் மனைவி ஜெயலட்சுமி அங்கு சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் கதவு லேசாக திறந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மாரியம்மாள் கட்டிலில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் கத்து குத்து இருந்தது.

அவர் அணிந்திருந்த 10 பவுன் செயின், 7 பவுன் செயின், 3 பவுன் எடையுள்ள இரண்டு மோதிரங்கள், மாயமாகியிருந்தது. மேலும் காது அறுக்கப்பட்டு கம்மல் மாயமாகி இருந்தது. 20 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2.5 லட்சம்.

தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கச்சத்தீவை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை - மத்திய அரசு


டெல்லி: கச்சத்தீவு முடிந்து போன கதை. அதை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழக மீனவர்களின் நலன் காக்க புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

இதுகுறித்து ராஜ்யசபாவில் அவர் பேசுகையில், கச்சத்தீவு மீதான உரிமை பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு விட்ட ஒன்று. அதை மறுபடியும் மறு ஆய்வு செய்யும் பேச்சுக்கே இடமில்லை. இதுகுறித்து இலங்கையுடன் பேச்சு நடத்தும் திட்டமும் அரசிடம் இல்லை.

இந்தியா, இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லை 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களின் மூலம் இறுதி செய்யப்பட்டு விட்டது.

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதாக புகார் கள் வருகின்றன. எனவே, கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள நாங்கள் யோசனை தெரிவித்துள்ளோம். இதில் உள்ள நியாயத்தை இலங்கை அரசு உணரும் என்று நம்புகிறோம். எனவே, சில நாட்களில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி விடும்.

கச்சத்தீவு பிரச்சினை முடிந்துபோன விஷயம். அதில் மறுபரிசீலனை செய்வது அல்லது கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் கிருஷ்ணா.

முன்னதாக விவாதத்தைத் தொடங்கி வைத்து பாஜக உறுப்பினர் வெங்கையா நாயுடு பேசுகையில்,

இலங்கையில் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதுபற்றி மத்திய அரசு உறுதியான தகவல் எதுவும் அளிக்கவில்லை. இது பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல.

இலங்கையில் வாழும் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆகவே, உண்மை நிலையை அறிய, அங்கு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சபையில் தாக்கல் செய்தால் மகிழ்ச்சி அடைவோம் என்றார்.

அதற்குப் பதிலளித்த எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்பின்பேரில், ஓர் இந்திய குழு அனுப்பி வைக்கப்பட்டது. அது நாடாளுமன்றக் குழுவாக இல்லாதபோதிலும், அதில் சில எம்.பிக்கள் இடம்பெற்றனர். அவர்கள் அங்கு சென்று திரும்பிய பிறகு பிரதமரிடம் அறிக்கை அளித்தனர்.

(அப்போது குறுக்கிட்ட அதிமுக எம்.பி. டாக்டர் மைத்ரேயன், அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாதது ஏன்? என்றார்)

இப்போது குழுவை அனுப்ப முடியாது:

இலங்கைக்கு மீண்டும் குழுவை அனுப்புவது பற்றி நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். எனது கருத்து என்னவென்றால், இலங்கை அதிபர் தேர்தல் நெருங்கும் நேரத்தில், அங்கு குழுவை அனுப்பக்கூடாது என்பதுதான்.

இலங்கை நமது நட்பு நாடு. இந்தியாவின் பாதுகாப்புக்காக இலங்கையுடன் சுமூக உறவை கடைபிடித்து வருகிறோம். நாட்டு நலனுக்காக இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகிறோம். போரில் இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவி செய்ததாக கூறுவது தவறு.

போரின்போது, தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்தியதே, இந்தியாதான். மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும், அதை இந்தியா அங்கீகரித்தது இல்லை.

இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து ஒன்றரை லட்சம் பேர், அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதி உள்ள ஒரு லட்சம் பேரையும் குடியேற்றம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்துவோம்.

இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான், நிரந்தர தீர்வாக அமையும். அதற்கான அரசியல் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது பிரிவை திருத்தி நடைமுறைப்படுத்துவது மூலமே தீர்வு காண முடியும்.

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு இந்திய அரசு கணிசமான நிதி உதவி அளித்துள்ளது. தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய இரண்டரை லட்சம் குடும்ப பைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவை செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐ.நா. அகதிகள் அமைப்பு மூலமாக வினியோகிக்கப்பட்டன. அவையெல்லாம் பயனாளிகளிடம் போய் சேர்ந்து விட்டதாகவே எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இருப்பினும், இலங்கை தமிழர்களுக்கு செய்தது போதுமானது அல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

இலங்கையில் இந்திய அரசு மேலும் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அவற்றை கண்காணித்து வருகிறோம். சிங்கள பகுதிகளில் மட்டுமே திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாக கூறுவது தவறு என்றார்.

பின்னர் பாஜக உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் எழுந்து, இப்பிரச்சினை தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல் பிரச்சினை என்பதால்தான், அத்தனை கட்சிகளும் இப் பிரச்சினையை எழுப்புகிறார்கள் என்றார்.

தொடர்ந்து சிபிஐ உறுப்பினர் டி.ராஜா பேசுகையில்,

அகதி முகாம்களில் வசிக்கும் தமிழர்களை இலங்கை அரசு அளித்த உறுதிமொழியின்படி, 6 மாத காலத்துக்குள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிங்களவர்களுக்கு சமமாக சமஉரிமை கிடைக்கும்படி இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு இயலாத பட்சத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஒருசிலர் மட்டுமே இலங்கைக்கு சென்று வந்துள்ளதால், உண்மை நிலையை கண்டறியும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.க்களை கொண்ட குழு ஒன்றை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சிபிஎம் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசுகையில்,

கச்சத்தீவு ஒப்பந்தம் முடிந்த பிறகு, 1976-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டுவரை தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து வந்துள்ளனர். ஆனால் தற்போது இந்த நிலைமை இல்லை. எனவே, இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். முடியாத பட்சத்தில், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், தமிழர்களுக்கு சம உரிமை அரசியல்ரீதியாக கிடைக்க வழி வகுக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றார்.

திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா பேசுகையில்,

இலங்கை அரசு முகாம்களில் இருந்து தமிழர்களை வெளியேற்றுவதால் மட்டும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இலங்கை தமிழர்களுக்கு அரசியல்ரீதியாக சம உரிமை கிடைக்க வழிவகுக்க வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

மதிமுகவின் மலைச்சாமி பேசுகையில்,

ராமநாதபுரம், ராமேசுவரம் மீனவர்களின் துயரங்களை நீக்க வேண்டுமானால் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அதை செயல் இழக்க செய்ய வேண்டும் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கைக்கு அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவை அனுப்ப வேண்டும்- வெங்கையா


சென்னை: இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலையை ஆராய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் குழுவை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கோரியுள்ளார்.

சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்திய அரசு சரியாக நடந்து கொள்ளவில்லை என்ற வருத்தமும், வேதனையும் இந்திய மக்களிடம் குறிப்பாக தமிழக மக்களிடம் உள்ளது.

இலங்கையில் உள்ள முகாம்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனை பார்வையிட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை இந்திய அரசு அனுப்பி, அவர்களது மறுவாழ்வுக்கு துரித நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இலங்கை போரினால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு குடியமர்த்தும் பணிகள் மிகவும் மெதுவாக நடந்து வருகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் பொன்சேகா, தான் பதவி விலக காரணமாக கூறியுள்ள 16-ல் இதுவும் ஒன்று என கூறியுள்ளார். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் உண்மையான நிலையை புரிந்துகொள்ள இந்திய அரசு தவறிவிட்டது.

விடுதலைப்புலிகள் கதை முடிந்திருக்கலாம், ஆனால் தமிழர்களின் பிரச்சினை முடியவில்லை. இலங்கை அரசு தமிழர்களை விரைவாக மறுகுடியமர்வு செய்யாவிட்டாலோ, அரசியல் ரீதியான தீர்வு காணாவிட்டாலோ அங்கு புதிய பிரச்சினைகள் தோன்றலாம்.

இலங்கைக்கு இந்திய அரசு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை விரைவில் அனுப்ப வேண்டும். இலங்கை தமிழர்கள் மறுகுடியமர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்.

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து இறுதி முடிவெடுக்கும் முன் மாநில அளவிலும், மத்திய அளவிலும் கவனமாக, தீவிரமாக, விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.

இலங்கைக்கு தமிழகத்தை சேர்ந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.பி.க்கள் குழு மட்டும் சென்றது, தவறல்ல. அவர்கள் திறமையால் தனிப்பட்ட முறையில் சென்றார்கள். ஆனால் இது மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதால் இந்திய அரசே அனைத்து கட்சி குழுவை அனுப்பியிருக்க வேண்டும் என்றார் நாயுடு.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்திய ராணுவ கம்ப்யூட்டர் நெட்வோர்க்கில் சீனா ஊடுறுவல்!


டெல்லி: சீனா வையொட்டியுள்ள வட கிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பை மேற்கொள்ளும் இந்திய ராணுவத்தின் 33வது படைப் பிரிவின் கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள் சீனா ஊடுறுவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராணுவ கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களை தங்களது பகுதியிலிருந்தபடி அறிந்து கொள்ள உதவும் சாப்ட்வேர்கள், வைரஸ்கள் மூலம் இந்த உளவு வேலையை செய்துள்ளது சீனா என்றும் தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள சுக்னா என்ற இடத்தில் வடகிழக்குப் பிராந்திய பாதுகாப்பை மேற்கொள்ளும் ராணுவத்தின் 33வது படைப் பிரிவின் தலைமை அலுவலகம் உள்ளது.

இங்குள்ள கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள்தான் சீனா ஊடுறுவியுள்ளது.

இங்குள்ள கம்ப்யூட்டர்களில் இடம் பெற்றுள்ள தகவல்களை சீனாவில் இருந்தபடி சுட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

சீனாவின் உளவு சாப்ட்வேரை இந்திய ராணுவ கட்டமைப்புக்குள் ஊடுருவ வைத்ததில் சீனாவுக்கு இந்திய ராணுவத்தில் யாரோ துணை போயிருக்கலாம் என்றும் தெரிகிறது. அது யார் என்பதை அறிய தற்போது விசாரணை நடந்து வருகிறது.

அதேசமயம், வட கிழக்குப் பிராந்திய பாதுகாப்பு குறித்த பல முக்கியத் தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை சீனா, அறிந்து கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந் நிலையில் ராணுவ தலைமையகம் அருகே சமீபத்தில் தனியார் கல்வி நிறுவன வளாகம் ஒன்றுக்கு ராணுவம் அனுமதி அளித்திருந்தது. தற்போது இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த அனுமதியை அளித்தவர் ராணுவச் செயலாளர் லெப்டினென்ட் ஜெனரல் அவதேஷ் பிரகாஷ் மற்றும் 3 அதிகாரிகள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்திய ராணுவத்தின் கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள் சீனா ஊடுறுவியிருப்பது கடந்த 2007ம் ஆண்டு முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. சிக்கிம், பூட்டான், திபெத் ஆகியவை சந்திக்கும் இடத்தில் உள்ள டோகா லா என்ற இடத்தில் உள்ள இந்தியா வின் ஆளில்லாத ராணுவ பங்கர்கள் இரண்டை சீனா தாக்கித் தகர்த்தது.

அதன் பிறகுதான் கம்ப்யூட்டர்களில் இருந்து முக்கியத் தகவல்களை சீனா உளவு பார்ப்பது தெரிய வந்தது.

சீனாவின் செயலால் எந்த அளவுக்கு இந்திய ராணுவத்தின் திட்டமிடல், பாதுகாப்பு உத்திகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வேதாரண்யம் விபத்து-11 குழந்தைகளை மீட்ட பின்னர் உயிரிழந்த ஆசிரியை சுகந்தி


வேதாரண்யம்: வேதாரண்யம் பள்ளிக்கூட வேன் விபத்தில், நீரில் மூழ்கவிருந்த 11 குழந்தைகளை காப்பாற்றிய நிலையில் 12வது தூக்கி வீசப்பட்ட குழந்தை நீருக்குள் மூழ்கிதால் அதைக் காப்பாற்றப் போய் தானும் உயிரிழந்தார் ஆசிரியை சுகந்தி என்ற உருக்கமான தகவல் கிடைத்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பள்ளி வேன் ஒன்று நேற்று கத்திரிப்புலம் என்ற இடத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவில் குளத்தி்ல் பாய்ந்து விழுந்தது.

இதில் 9 குழந்தைகளும் 21 வயதான ஆசிரியை சுகந்தியும் உயிரிழந்தனர்.

இந்தக் கோர விபத்தில் உயிரிழந்த ஆசிரியை சுகந்தியின் செயல் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது.

வேன் தண்ணீருக்குள் மூழ்கியபோது அதன் கதவுகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் உள்ளே சிக்கிய ஆசிரியை, கிளீனர் மற்றும் குழந்தைகள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

பின்னர் கிளீனரும், ஆசிரியையும் வேன் கண்ணாடிகளை உடைத்து வெளியே வந்தனர். ஒவ்வொரு குழந்தையாக வெளியே தூக்கி வீசினர். கடைசி குழந்தையை தூக்க ஆசிரியை முயற்சித்தபோது அந்த குழந்தை 15 அடி ஆழத்திற்கு போய் விட்டது.

ஆசிரியை சுகந்திக்கு நீச்சல் தெரியாது என்றபோதிலும், எப்படியாவது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புடன், எதைப் பற்றியும் கவலைப்படாமல் மளமளவென நீருக்குள் போயுள்ளார்.

ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்து அவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும் தான் உயிரிழப்பதற்கு முன்பு 11 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி விட்டார் சுகந்தி.

கும்பகோணம் தீவிபத்தில் பிஞ்சுக் குழந்தைகள் கருகி உயிரிழந்தபோது அவர்களைக் காக்க முயலாமல் ஆசிரியர்கள் தப்பிச் சென்றதால் ஆசிரியர் குலத்திற்கே பெரும் அவமானம் ஏற்பட்டது. ஆனால் ஆசிரியை சுகந்தியின் செயல் அனைவரையும் உருக்கியுள்ளது.

டிரைவரும் 4 குழந்தைகளை காப்பாற்றினார்:
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பிரபாகரன் பேனர்கள் அகற்றம்- வைத்தவர்கள் மீது நடவடிக்கை - டிஜிபி தகவல்


சென்னை: பிரபாகரன் படம், பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிஜிபி கே.பி.ஜெயின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சார்பில் மாவீரர் தினம் அனுசரிக்கும் போது வைக்கப்பட்ட பிரபாகரன் படங்கள் அகற்றப்பட்டு மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவீரர்கள் தினத்தையொட்டி பொதுக்கூட்டம் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் காவல்துறை நிபந்தனைகளை மீறி ஈரோட்டில் பிரபாகரன் படத்துடன் கூடிய போர்டுகள், பேனர்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. அவற்றை காவல்துறையினர் அகற்றினார்கள்.

இது தொடர்பாக பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் குமரகுருபரன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் விடுதலைப்புலிகளின் கொடியை ஆலமரத்தில் ஏற்றி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான வாசகங்கள் வைத்திருந்தனர்.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண்டனர். இலங்கை அகதிகள் கண்ணன் என்கிற சிவக்குமார், நிசாந்தன் மற்றும் செல்வா என்கிற செல்வக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் 9 பேர் கைது...

இதற்கிடையே, ஈரோட்டில் பிரபாகரனுக்கு ஆதரவாக பேனர் வைத்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவீரர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் பரவலாக பல இடங்களில் பிரபாகரன் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

இந்த பேனர்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர். இதன் எதிரொலியாக சென்னையில் உள்ள இளங்கோவனின் வீடு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்த நிலையில், பேனர்கள் வைத்த மோகன்ராஜ், வடிவேல், சண்முகம், மோகன், பலிப்பாண்டி, உமாபதி, ஹரிகுமார், சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

87 வருடங்களாக மனமொத்து வாழ்ந்த தம்பதியை பிரித்த காலன்!


தர்மசாலா: 87 வருடங்களாக மனமொத்து வாழ்ந்து வந்து முதிய தம்பதியை காலன் பிரித்து வைத்து விட்டான். நேற்று கல்யாணம், இன்று ஹனிமூன், நாளைக்கு விவாகரத்து என்று வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் உலகம் இது. இந்த நிலையில் 87 வருடங்களாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த முதிய தம்பதியை காலன் பிரித்து வைத்து விட்டான்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் வசித்து வந்தவர் ஹன்சா தேவி. 103 வயதாகிறது இந்தப் பாட்டிக்கு. இவரது கணவர் பெயர் பியாரா சிங் (107). கணவன், மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணமாக இந்தத் தம்பதிகள் விளங்கினர்.

கங்க்ரா மாவட்டத்தில் உள்ள பரோல் கிராமத்தில் இந்த தம்பதிகளின் வீடு உள்ளது. இந்தக் கிராமம் மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்து கிராமங்களிலும் ஹன்சா தேவி, பியாரா சிங் தம்பதி வெகு பிரபலம்.

இங்கு மட்டுமல்ல கின்னஸ் புத்தகத்திலும் கூட இவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. நூறாண்டுகளைக் கடந்த கணவன், மனைவி என்ற சாதனையுடன் வாழ்ந்து வந்தனர் ஹன்சா - பியாரா தம்பதியினர்.

இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே மாட்டார்களாம். எங்கு போனாலும் சேர்ந்தே போவார்களாம். இருவருக்கும் இடையே எந்த சண்டையும் வந்ததில்லையாம். அனுசரித்து நடந்து கொள்வதில் மட்டுமே இவர்களுக்குள் போட்டி வருமாம்.

சிங் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். ஹன்சா தேவியை 1922ம் ஆண்டு மணந்தார். அன்று முதல் இருவரும் சண்டை சச்சரவின்றி அன்போடும், அனுசரணையோடும் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஹன்சா தேவிக்கு உடல் நலம் சரியில்லை. வீட்டோடு முடங்கியிருந்தார். அவருக்கு ஆதரவாக எங்கும் செல்லாமல் பியாரா சிங்கும் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ஹன்சா தேவி மரணமடைந்தார். இதன் மூலம் அவர்களின் 87 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

ஹன்சா தேவியின் மறைவை அறிந்து மக்கள் திரண்டனர். இறுதிச் சடங்கில் அவர்கள் கண்ணீருடன் கலந்து கொண்டனர். பியாரா சிங்குக்கு ஆறுதல் கூறினர்.

அக்டோபர் 7ம் தேதி தான் தனது கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக ஹன்சா தேவி கர்வா சாத் விரதம் அனுசரித்தாராம்.

கடந்த ஆண்டு இந்தப் பகுதிக்கு வந்த திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா, ஹன்சா தேவி, பியாரா சிங் குறித்துக் கேள்விப்பட்டு அவர்களை சந்தித்து பாராட்டி, ஆசிர்வதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சென்னை விமான நிலையம்-9 சுங்கத்துறை அதிகாரிகள் கைது


சென்னை: சென்னை விமான நிலைய சரக்குப் பிரிவில் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்ட 2 பெண் அதிகாரிகள் உள்பட 9 சுங்கத்துறை அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்குப் பிரிவில் இருந்து பல நாடுகளுக்கும் பொருட்கள் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களும் இங்கு சோதனையிடப்பட்ட பிறகே வெளியே அனுப்பப்படுகின்றன.

இந்த சரக்குப் பிரிவில் பெரும் முறைகேடுகள் நடந்து வருகின்றன. ஏராளமாக லஞ்சம் வாங்கிக் கொண்டு இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையை குறைவாக நிர்ணயித்து குறைவான வரி விதிப்பது, வரியே விதிக்காமல் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது என இந்த சரக்குப் பிரிவை கண்காணிக்க வேண்டிய சுங்கத்துறை அதிகாரிகள் பெரும் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து கடந்த இரு தினங்களாக சிபிஐ அதிகாரிகளின் 5 குழுக்கள் இரவு பகலாக இந்த சரக்கு மையத்தில் சோதனை நடத்தின.

சுங்க இலாகாவினரின் ஆவணங்களையும், சரக்கு ஏஜெண்டுகளின் ஆவணங்களையும் சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்த சுங்கத்துறையினரிடம் இருந்து பல லட்சம் அளவுக்கு லஞ்சப் பணத்தையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 2 பெண் அதிகாரிகள் உள்பட 9 சுங்க இலாகா அதிகாரிகளை மேல் விசாரணைக்காக சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் இவர்களது வீடுகளிலும் சிபிஐ ரெய்ட் நடத்தியது. அதில் ஒரு அதிகாரியின் வீட்டியில் இருந்து 2 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. மேலும் இரு அதிகாரிகளின் வீடுகளில் இருந்து ரூ. 16 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து 9 சுங்கத்துறை அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விவரம்:

பாஸ்கர்-கண்காணிப்பாளர்
அறிவுடை நம்பி-கண்காணிப்பாளர்
நாகேஸ்வரி-கண்காணிப்பாளர்
பழனியப்பன்-கண்காணிப்பாளர்
ஜக்மோகன் மீனா- முன்னெச்சரிக்கை அதிகாரி
ஆசைத்தம்பி-முன்னெச்சரிக்கை அதிகாரி
மஞ்சுளா- முன்னெச்சரிக்கை அதிகாரி
பெஞ்சமின்- முன்னெச்சரிக்கை அதிகாரி
கண்ணன்- வரி உதவியாளர்.

இவர்களோடு ஏஜெண்ட் குமார் என்பவரும் கைதாகியுள்ளார். குமாரின் உதவியாளர் ராஜ்குமார் என்பவர் தப்பியோடிவிட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

பாஸ்கரன், கண்ணன், குமார் ஆகியோரிடம் மேல் விசாரமை நடத்த சிபிஐ அனுமதி கோரியதால் 3 பேரையும் வரும் வெள்ளிக்கிழமை வரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates