jkr

21 குண்டுகள் முழக்கத்துடன் லட்சக்கணக்கில் மக்கள் அஞ்சலி:மருத்துவமனையில் பாசு உடல் ஒப்படைப்பு



கோல்கட்டா:மறைந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் உடலுக்கு, 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் நேற்று இறுதிச் சடங்குகள் நடந்தன. பின், அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக நடந்த இறுதி ஊர்வலத்தில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான ஜோதிபாசு (95), உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த 17ம் தேதி காலமானார். கோல்கட்டாவில் "பீஸ் ஹெவன்' என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஜோதிபாசு, தனது கண்களை தானம் செய்திருந்ததால், இறந்த சில மணி நேரங்களிலேயே அவரது கண்களை, டாக்டர்கள் அகற்றினர்.


இந்நிலையில், ஜோதிபாசுவின் இறுதி ஊர்வலம், நேற்று காலை துவங்கியது. பீஸ் ஹெவனில் இருந்து அவரது உடல், மாநில தலைமைச் செயலக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், அங்கிருந்து அலிமுதீன் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, தலைமைச் செயலர் மோகன் சக்கரவரத்தி ஆகியோர், ஜோதிபாசுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்று காலை 10 மணிக்கு, அங்கிருந்து மேற்கு வங்க சட்டசபை கட்டடத்துக்கு, அவரது உடல் கொண்டு வரப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப் பட்டது. அவரது உடலில் ஏற்கனவே செங்கொடி போர்த்தப்பட்டு இருந்தது. அதற்கு மேல், தேசியக் கொடியை முப்படையினர் போர்த்தினர். ஆனால், முன்னதாக இங்கே பாசு உடல் வைக்கப்பட்டிருந்த மேடையருகே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மக்கள் முண்டியடித்தபடி, தங்கள் அபிமானத் தலைவரை பார்க்க முனைந்தனர்.


கம்யூ., கட்சி செயலர் பிமன்போஸ், கூட்டத்தினர் அமைதிகாக்க, வேண்டுகோள் விடுத்தார். நிலைமையைச் சமாளிக்க, ஒரு பகுதி நுழைவு வாயிலை போலீசார் சாத்தினர். அப்போது, போலீசாரை காத்திருந்த கூட்டத்தினர் வசைமாரி பொழிந்தனர். பின்பு ஒருவழியாக அமைதி திரும்பியது.


சோனியா, ஹசீனா அஞ்சலி: சட்டசபை வளாகத்தில் வைக்கப் பட்டிருந்த ஜோதிபாசுவின் உடலுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா, நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அவருடன் வந்திருந்தார்.


மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ், மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் அங்கிருந்தனர். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியும் அஞ்சலி செலுத்தினார்.வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, 30 பேர் அடங்கிய அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் வந்து, ஜோதிபாசுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். வங்கதேச முன்னாள் பிரதமர் எர்ஷாத்தும் அஞ்சலி செலுத்தினார்.


லட்சம் பேர் பங்கேற்பு: மாலை 3 மணியளவில் ஜோதிபாசுவின் உடல், அலங்கரிக்கப்பட்ட ராணுவ பீரங்கி வண்டியில் வைக்கப் பட்டது. பின், அங்கிருந்து விக்டோரியா மெமோரியல் அருகே உள்ள பார்க்கிற்கு, அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான மார்க்சிஸ்ட் கட்சியினர் செங்கொடியுடன், ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின், விக்டோரியா மெமோரியல் அருகே உள்ள பார்க் கில், இறுதிச் சடங்குகள் நடந்தன. 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.


பின், அங்கிருந்து எஸ்.எஸ். கே.எம்., மருத்துவமனைக்கு, அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. ஜோதிபாசுவின் உடல், மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான சான்றிதழ்களை, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பீமன் போஸ், மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

23 ஆண்டுகள் மேற்கு வங்க முதல்வராக, அம் மாநில மக்களின் ஏகோபித்த செல்வாக்குடன் ஆட்சி நடத்திய ஜோதிபாசுவின் இறுதி ஊர்வலத்தில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "21 குண்டுகள் முழக்கத்துடன் லட்சக்கணக்கில் மக்கள் அஞ்சலி:மருத்துவமனையில் பாசு உடல் ஒப்படைப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates