ஜனாதிபதியை ஆதரித்தால் தான் அழிந்துபோன எம் மாவட்டத்தைக் கட்டியெழுப்ப முடியும் : கனரத்தினம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதன் மூலமே அழிந்து போன எமது மாவட்டத்தையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கட்டியெழுப்ப முடியும் என வன்னி மாவட்டத் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து இன்று வவுனியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
"மீண்டும் ஜனாதிபதியாக வரக் கூடிய தகுதி கொண்டவராக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காணப்படுகின்றார். ஜனநாயகத்தை மதிக்கும் அரசியல்வாதியாகவும், அரசியல் அனுபவம், அறிவு, ஆற்றல் என்பனவற்றை தன்னகத்தே கொண்டவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்கின்றார். இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டாக, அவரது 30 வருட அரசியல் அனுபவத்தை எடுத்துக் கூறலாம்.
வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து மீண்டும் தத்தமது கிராமங்களில் மீளக்குடியமர்ந்துள்ள, மற்றும் மீளக்குடியமரவுள்ள மக்களைச் சந்தித்து கலந்துரையாடினேன். முல்லைத்தீவுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கருத்துப் பறிமாறல்களை மேற்கொண்டேன்.
தமிழ்ச் சமூகத்தின் நலன் குறித்து கூடிய அக்கறையும் கவனமும் செலுத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எமது மக்கள் ஆதரிக்க வேண்டும்.
குறுகிய காலத்துக்குள் அகதி முகாம்களில் இருந்த எமது மக்களை மீளக்குடியமர்த்துவதில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆற்றிய பணிகள் பாராட்டப்பட வேண்டியவை" என்றார்
0 Response to "ஜனாதிபதியை ஆதரித்தால் தான் அழிந்துபோன எம் மாவட்டத்தைக் கட்டியெழுப்ப முடியும் : கனரத்தினம்"
แสดงความคิดเห็น