jkr

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியெற்றப்பட்டு 19 வருடங்கள் பூர்த்தி


வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன்(2009.10.30) பத்தொன்பது வருடங்கள் பூர்த்தியடைந்தன. 1990ஆம்ஆண்டு இம்மக்கள் வடமாகாணத்தில், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து வெளியேறி தற்போது புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமது வெளியேற்றம் குறித்தும், இத்தினத்தை நினைவு கூறும் வகையிலும் முஸ்லிம் சமாதான பேரவையின் புத்தளம் கிளை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு புத்தளம் முஸ்லிம் சமாதான செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

சமாதான செயலகத்தின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.என்.எல்.எம்.சுஹைர் தலைமையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில்,பதினொரு தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை வெளியிடப்பட்டது.

அவை வருமாறு :

1) இரண்டு மணித்தியால அவகாசத்தில் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாக விசாரித்து, ஆராய்ந்து, தேவையான பரிந்துரைகளுடன், அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.

2) பலவந்த வெளியேற்றத்தினால் படுமோசமாக பாதிக்கப்பட்டு, இன்னமும் அகதிவாழ்வு நடத்திவரும்,வடக்கு முஸ்லிம்களுக்கு உரிய நஷ்டயீடுகள் துரித கதியில் வழங்கப்பட வேண்டும்.

3) மீள்குடியேற்ற நிகழ்வில் முஸ்லிம்களின் விவகாரம்,தெரிவிக்கப்பட்டு அது அவர்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

4) மீள்குடியேற்றத்தின் போது 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு,முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

5) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களின்,வடக்கிலுள்ள பூர்வீக சொத்துக்களுக்கு PRESCRIPTION ORDINANCE எக்காரணம் கொண்டும் பிரயோகிக்கப்படக் கூடாது.

6) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வடக்கிலுள்ள காணிகள் அவர்களுக்கே மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்.

7) 1990இல் முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த 19 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே அதிகரித்துள்ள குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்தின் போது புதிதாகக் காணிகள் வழங்கப்பட வேண்டும்.

8) பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு 1990 ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வரும், நிவாரணத் தொகை ஆரம்பம் முதல் அதே தொகையாகவே இருந்து வருகின்றது. சுமார் 19 வருடகாலப் பகுதியில், ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கவனத்திற் கொண்டு தற்போதைய நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.

9) அரச நியமனங்கள், வளப்பகிர்வுகளின் போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய பங்குகள் சரியாக, நிறைவாக வழங்கப்பட வேண்டும்.

10) யுத்த காலத்தில் கடத்தப்பட்டு இதுவரை காலமும் தகவல் இல்லாத முஸ்லிம் குடும்பங்களுக்குத் துரிதமாக நஷ்டஈடு வழங்கப்படுவதுடன், மரண அத்தாட்சி பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும்.

11) பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுமார் இரு தசாப்தங்களாக புத்தளம் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதன் நிமித்தம் புத்தளம் பிரதேச பூர்வீக மக்களுக்கு ஏற்பட்டுள்ள காணிப் பங்கீடு, கல்வி, அரச நியமனங்கள், தொழில்வாய்ப்பு, சுகாதாரம், பல்கலைக்கழக அனுமதி உட்பட எல்லா வகைகளிலுமான, இழப்புகளும் அவசரமாக உரிய முறையில் ஈடு செய்யப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகள் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியெற்றப்பட்டு 19 வருடங்கள் பூர்த்தி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates