jkr

ஐ.நா.வின் சான்றிதழை அடுத்தே முகாம்களிலுள்ள அனைத்து தமிழ் மக்களும் மீள்குடியமர்த்தப்படுவர்- அமைச்சர் ஆறுமுகன் தெரிவிப்பு;


கண்ணிவெடிகளை அகற்றுவது, மனிதநேய அடிப்படையிலான உதவிகளைச் செய்வது குறித்து ஐ.நா. அமைப்பு சான்றிதழ் அளித்த பின்னரே இலங்கை முகாம்களில் உள்ள ஒருலட்சத்து 86ஆயிரம் தமிழர்கள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அதேசமயம், கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் அங்கேயுள்ள பிரச்சினை எனவும் அவர் கூறியுள்ளார். இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றும் பணிகள் குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முதலமைச்சர் கருணாநிதியை அவரது கோபாலபுரத்திலுள்ள இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசுகையில், இலங்கை முகாம்களில் 3 இலட்சம் தமிழர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், 1.86 இலட்சம் தமிழர்களே உள்ளனர். தமிழகத்தில் இருந்து எம்.பி.க்கள் குழு வருவதற்கு முன்பே, 24 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழக எம்.பி.க்கள் குழு வந்து சென்ற பின்னர், இதுவரை 57 ஆயிரம் தமிழர்கள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எம்.பி.க்கள் குழுவின் வருகைக்குப் பின்னர் இலங்கைத் தமிழர்களை வாழ்விடங்களுக்கு அனுப்பும் பணி இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி ராஜபக்ஷ கொடுத்த வாழ்த்துச் செய்தியையும், அங்கு நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் குறித்தும் முதல்வர் கருணாநிதியிடம் விளக்கினேன்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இந்தியக் குழு ஈடுபட்டு வருகிறது. மேலும் ஒரு குழுவை அனுப்புவதாக இந்திய அரசு கூறியுள்ளது.

இலங்கைத் தமிழர்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்ப, ஐ.நா.விடம் இருந்து சான்றிதழ் பெறுவது அவசியம். "தமிழர்களின் வாழ்விடங்களில் கண்ணிவெடிகள் ஏதுமில்லை என்றும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள், வருமானத்துக்கான வழி போன்றவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன" எனவும் அகதிகள் நல்வாழ்வுக்கான ஐ.நா. அமைப்பின் அதிகாரியிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும்.

இப்போது, 1.86 இலட்சம் தமிழர்களின் வாழ்விடங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் பிரச்சினையாக உள்ளது. குடியமர்த்தப்பட்ட பிறகு, அவர்கள் தொழில் செய்யவோ, விவசாயம் செய்யவோ உதவி செய்கிறோம்.

இலங்கையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மேலும் ரூ.500 கோடி தருவதாக இந்திய அரசு கூறியுள்ளது. இதற்கான திட்டத்தை இலங்கை அரசின் சார்பில் கொடுக்க இருக்கிறோம். எந்தெந்த திட்டங்களுக்கு இந்தப் பணத்தை செலவிடுவது என்பது குறித்து விவாதிக்க இலங்கை அதிகாரிகள் குழு இந்தியா வர உள்ளது என்று ஆறுமுகன் தொண்டமான் கூறினார்

அதேவேளை ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் அகதிகளான மக்கள் ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்கு மாற்றப்படுகின்றனரே தவிர அவர்களது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்படுவதில்லை என்று கூறப்படுகின்றதே எனக் கேட்டபோது அமைச்சர் பதிலளிக்கையில், நானும் ஒரு தமிழன் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த இடங்களை பார்வையிட்டேன். நீங்கள் அங்கு சென்று பார்க்காமல் எம் மீது குற்றம் சாட்டுகின்றீர்கள் என்று பதிலளித்தார்.

இதேவேளை உங்கள் அரசு அங்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லையே என மற்றொரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது, ஏன் இல்லை கலைஞர் தொலைக்காட்சி குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்தார்களே, அவர்கள் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இல்லையா? என்றும் பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதலமைச்சர் கருணாநிதிக்கு ஏதேனும் விசேட செய்திகளை அனுப்பி வைத்தாரா எனக் கேட்டபோது மீள்குடியேற்றம் தொடர்பில் முதலமைச்சருக்கு எடுத்து விளக்குமாறு கூறினார் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஐ.நா.வின் சான்றிதழை அடுத்தே முகாம்களிலுள்ள அனைத்து தமிழ் மக்களும் மீள்குடியமர்த்தப்படுவர்- அமைச்சர் ஆறுமுகன் தெரிவிப்பு;"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates