பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தின் புதிய கட்டிடடத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார்!
பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலய மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்திற் கொண்டு நான்கு பிரதான கற்றல் துறைகளை உள்ளடக்கிய புதிய பாடசாலைக் கட்டிடத்தை கட்டியுள்ளது இப்பகுதி மாணவர்களின் சிறந்த கல்விக்கான சிறந்த அடித்தளமாக அமையுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இன்று முற்பகல் நூலகம் இரசாயன ஆய்வுகூடம் பௌதிகவியல் ஆய்வுகூடம் மற்றும் கணணி மூலமான பன்முக ஊடகப்பிரிவை உள்ளடக்கிய புதிய கட்டிடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் பல்வேறு வசதிகளைக் கொண்ட இப்புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருப்பது மாணவர்களின் எதிர்கால கல்வியை திறம்பட முன்னெடுப்பதற்கு வாய்ப்பாக அமையுமென்றும் இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கும் போது அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.
எமது தமிழ் தலைமைகளின் சுயலாப அரசியலுக்காக தேசத்தின் பெருமளவு வளங்களும் பெரும் எண்ணிக்கையான மனித உயிர்களும் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் நலன்கருதி பணியாற்றுவதற்கு தாம் முன்வந்திருப்பது நன்றியுணர்வை எதிர்பார்த்தல்லவென்றும் தமக்குள்ள பொறுப்பினதும் கடமைகளினதும் நிமித்தமே என்றும் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த போரின் நிகழ்வுகளை சிறந்த அனுபவமாகக் கொண்டு எதிர்காலத்தில் மக்களுக்கான சரியான நேர்மையான தலைமைத்துவமொன்றை தெரிவு செய்யவேண்டுமெனக் குறிப்பிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதில் மீண்டும் தவறு விடுவோமாயின் பழைய நிலைக்கு திரும்ப நேரிடுமென்றும் அதிக விலை கொடுத்து பெற்றுள்ள இந்த ஜனநாயகச் சூழலை நாம் எச்சரிக்கையுடன் பேணிப் பாதுகாத்து கொள்ளவேண்டுமென்றும் தெரிவித்தார்.
வேலாயுதம் மகாவித்தியாலய அதிபர் ச. திரவியராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட கல்விப் பணிப்பாளர் வி.ரி. செல்வரத்தினம் நிக்கோட் அமைப்பின் மாவட்ட உதவித்திட்ட பணிப்பாளர் என்.எஸ். சிவரூபன் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் வை. செல்வராசா மற்றும் ஈபிடிபியின் பிரதேச அமைப்பாளர்கள் உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் பெருமளவில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Response to "பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தின் புதிய கட்டிடடத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார்!"
แสดงความคิดเห็น