கிழக்கில் முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைக்கும் முயற்சியில் அமெரிக்க அரசாங்கம்
கிழக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகளை மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைக்கும் பொருட்டு, சொந்த மற்றும் சிறிய வணிக முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு தேவையான சாதனங்களையும் வளங்களையும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிலையம் (USAID) வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, முன்னாள் போராளிகள் 1000 பேரை சமூகத்துடன் மீள ஒன்றிணைக்க சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி (USAID), இரண்டு வருட முன்னோடிச் செயற் திட்டமொன்றுக்கு நிதி வழங்கியுள்ளதாக இது தொடர்பாக விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் சமுதாயங்களுடன் முன்னாள் போராளிகள் சேர்ந்து பணியாற்றுவதனூடாக, கிழக்கு மாகாணத்தில், மக்களின் பாதுகாப்பையும் திடத்தன்மையையும் அதிகரிப்பதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி மேற்கொள்ளும் இச்செயற் திட்டம் பெயர்ச்சிக்கான சர்வதேச அமையத்தினால்( IOM)நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் பணிக் குழுப் பணிப்பாளரான ரெபேக்கா கோன்,
"புதிய வாழ்வை ஆரம்பிக்கும் பொருட்டும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் பொருட்டும், முன்னாள் போராளிகள் தொழில்சார் பயிற்சி பெறுவதற்கும் அவர்களுக்கு அவசியமான ஆதரவைப் பெறுவதற்கும் மோதல்களுக்குப் பின்னர் சமுதாயங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும் இச்செயற் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்த உதவியுடன், ஆண்களும் பெண்களும் தமது வாழ்வை மாற்றுவதற்கும் புதிய இலக்குகளை அமைப்பதற்கும் புதிய கனவுகளைக் காண்பதற்கும் ஒரு சந்தர்ப்பத்தைப் பெறுவார்கள்"என்றார்.
முன்னாள் போராளிகளுக்கான இச்செயற்திட்டம் தொழிற் பயிற்சிகளுக்கு வழிகாட்டுவதுடன் உள ரீதியான ஆதரவை வழங்கி தொழிற் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
பொருத்தமான அனுபவத்தையும், திறமைகளையும் கொண்ட பங்குபற்றுநர்கள் சிலர், தமது உள்ளூர் சமுதாயங்களில், சொந்த வர்த்தகத்தை ஆரம்பிப்பதற்கு உதவியாக, சிறு கொடைகளைப் பெறுகின்றார்கள். இச்செயற்திட்டத்திற்கு இதுவரை 400 முன்னாள் போராளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுள் சிலருக்கு பயிற்சியும் வேறு சிலருக்கு வாழ்வாதார உதவியும் இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
"மோதல்களுக்குப் பின்னர் மக்கள் தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கும் வாழ்வாதாரங்களை மீட்பதற்கும் உதவும் முகமாகக் கருவிகளையும் பயிற்சியையும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியுடன் கூட்டுச் சேர்ந்து வழங்குவதில், பெயர்ச்சிக்கான சர்வதேச அமையம் மகிழ்ச்சியடைகின்றது" என அமையத்தின் இலங்கை பணிக்குழுத் தலைவர் மொகமத் அப்திக்கர் இந்நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
மேலும்,"நன்மை பெறுவோர் இந்நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், தமது குடும்பங்களுடன் பகிர்ந்துகொள்வதற்குப் பெரிதும் அவசியப்படும் வளங்களைப் பெறுவதற்கு ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவை, கிழக்கில் சுபீட்சம் ஏற்படுவதற்கான நம்பிக்கையின் அடையாளங்களாகும்"என்றும் அவர் தொடர்ந்து கூறினார்.
0 Response to "கிழக்கில் முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைக்கும் முயற்சியில் அமெரிக்க அரசாங்கம்"
แสดงความคิดเห็น