செய்தியறிக்கை
குண்டுவெடித்த இடம் |
பெஷாவர் கார் குண்டு வெடிப்பில் 90 பேர் பலி
பாகிஸ்தானின் வட மேற்கே பெஷாவார் நகரில் உள்ள சனநேருக்கடி மிக்க சந்தை ஒன்றில் பாரிய கார் குண்டு ஒன்று வெடித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் 90 க்கும் அதிகமானோ கொல்லப்பட்டதுடன், 200 பேர் வரை காயமடைந்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.
ஒரு பள்ளிவாசல் உட்பட பல கட்டிடங்களை நிர்மூலம் செய்த இந்தக் குண்டு வெடிப்பில் மேலும் பல கட்டிடங்கள் எரிந்துபோயின.
கொல்லப்பட்டவர்களின் சடலங்களையும், காயமடைந்தவர்களையும் இடிபாடுகளில் இருந்து மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் தமக்கு தொடர்பில்லை என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.
ஆனால் ஆப்கான் எல்லையில் தீவிரவாதிகளின் பலமான பகுதிகள் மீது மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைக்குப் பதிலடியாக நடத்தப்படுவதாக கூறப்படும் தொடர்ச்சியான குண்டுத்தாக்குதல்களுக்கு தலிபான்களே காரணம் என்று பாகிஸ்தான் அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.
பாகிஸ்தானில் அமெரிக்க அரசுத்துறை செயலர்
பாகிஸ்தான் சமீப காலத்தில் தொடர்ந்து குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி வருவதாகக் குறிப்பிட்ட ஹிலாரி கிளின்டன், பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டம் பாகிஸ்தானிய மக்களுடையது மட்டுமல்ல என்று தான் உறுதிகூற விரும்புவதாகவும் தெரிவித்தார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு என்பதைத் தாண்டி பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவு மேம்பட்டுச் செல்ல வேண்டும் என்று ஒபாமா நிர்வாகம் விரும்புவதாக கூறிய ஹிலாரி கிளின்டன் அவர்கள், முதலீடுகளை அதிகரிக்கவல்ல உள்கட்டமைப்பு திட்டங்கள், கல்வி, மின்சார உற்பத்தி போன்ற பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவிசெய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆப்கானில் ஐ.நா. பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு பான் கீ மூன் கண்டனம்
கொடூரமான, வெறுப்புக்குரிய மற்றும் கண்டனத்துக்குரிய தாக்குதல் என்று கூறி பான் கி மூன் இதனை விவரித்துள்ளார். ஆனாலும் ஐ. நா. அமைப்பு ஆப்கானிஸ்தானில் தனது பணிகளை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காபூலில் ஐ.நா. அமைப்புக்கு சொந்தமான விருந்தினர் விடுதி ஒன்றில் துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுடன் அத்துமீறி நுழைந்த தற்கொலைத் தாக்குதலாளிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆப்கானியர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.
பாதுகாப்புப் படையினருடன் நடந்த நீண்ட மோதலில் தாக்குதலாளிகளும் கொல்லப்பட்டுவிட்டனர்.
அடுத்த வாரம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு இடையூறு செய்வதற்கான தமது முதலாவது நடவடிக்கை இது என்று தலிபான்கள் கூறுகின்றனர்.
கர்சாய் சகோதரர்: தான் சி.ஐ.ஏ. கைக்கூலி அல்ல
அகமத் வாலி கர்சாய் |
ஆப்கானில் உள்ள அமெரிக்க மற்றும் பிற சர்வதேச படைகளுடன் தான் ஒத்துழைப்பு நல்கியிருந்ததை ஐனாதிபதியின் சகோதரர் அகமத் வாலி கர்சாய் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் நாட்டின் தெற்கிலுள்ள கந்தஹார் நகரில் ஒரு துணைப் படையை அமைக்கவும், தாலிபான்களுடனான பேச்சுக்களினபோது இடைத்தரகராக செயல்படவும் சி.ஜ.ஏ. இவருக்கு பணம் கொடுத்ததாக நியூயார்க் டைமஸ் வெளியிட்டுள்ள செய்தியை கேலிக்குரியது என்று அகமது வாலி கர்சாய் கூறியுள்ளார்.
சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் அபின் வர்த்தகத்துடன் தனக்கு தொடர்பேதும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஜெர்மன் அரச தலைவராக அங்கேலா மெர்கெல் மீண்டும் பதவியேற்பு
ஆட்சித் தலைவி அங்கேலா மெர்கெல் |
நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு வாக்கெடுப்பின் மூலம் அவரது புதிய வலதுசாரி மையவாத கூட்டணி ஆட்சியமைக்க உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது பதவியேற்பு வைபவம் இடம்பெற்றது.
செப்டம்பரில் பொதுத்தேர்தலில் அவரது கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது.
பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு வரி வெட்டுத் திட்டத்தையும், சுகாதாரத்துறையில் ஒரு மறுசீரமைப்பையும் அவரது அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
காஷ்மீர்: அமைதியை ஏற்படுத்த விரும்புவோருடன் பேச இந்தியா தயார் என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் |
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த விரும்பும் அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்த இந்திய அரசு தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் சக்திகளை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில், அனந்த்நாக் மற்றும் காஸிகுன்ட் பகுதிகளுக்கு இடையிலான ரயில் போக்குவரத்தை துவக்கிவைத்துப் பேசும்போது பிரதமர் இதைத் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வன்முறையைக் கைவிடும் யாருடனும் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக தனது அரசு அறிவித்ததை சுட்டிக்காட்டிய மன்மோகன் சிங், அதன்பிறகு அரசு பல குழுக்களுடன் பேச்சு நடத்தி, பல திட்டங்களை செயல்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த 2004 மற்றும் 2007-ம் ஆண்டுகளுக்கு இடையே, பயங்கரவாதம் மற்றும் வன்முறை குறைந்தபோது, பாகிஸ்தானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்ததாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த பிரதமர், 60 ஆண்டுகளில் முதல் முறையாக இருநாட்டு மக்களும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் வழியாக, சாலை மார்க்கமாகச் செல்லமுடிந்தது என்று குறிப்பிட்டார்.
இந்தியா நீட்டியுள்ள நட்புக்கரத்துக்கு பாகிஸ்தான் மதிப்பளித்து செயல்பட வேண்டும் என்றும், அது இருநாட்டு மக்களுக்கும் நல்லது என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அரசுக்கு அழைப்பு விடுத்தார்.
சர்வதேச மொழிகள் சிலவற்றிலும் இணையதள முகவரி பெயர்கள் அமைய புதிய திட்டம்
இணையத்தை ஒழுங்கு செய்யும் ஓர் அமைப்பு இண்டர்நெட் கார்ப்பரேஷன் ஃபார் அஸைண்ட் நேம்ஸ் அண்ட் நம்பர்ஸ் (ICANN) ஆகும்.
வரும் வெள்ளிக்கிழமையன்று தென்கொரியாவில் நடக்கும் ஒரு கூட்டத்தில், இத்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், வரும் நவம்பர் 16ஆம் தேதி முதலே லத்தீன எழுத்துக்கள் அல்லாத வேற்று மொழி எழுத்துக்களைக் கொண்ட பெயர்களுடன் இணையதளங்கள் உலாவரத் துவங்கிவிடும்.
இவ்வளவு காலமும் லத்தீன எழுத்துக்கள் மட்டுமே இணைய முகவரிகளில் ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், அவ்வெழுத்துகளைத் தாண்டி அரபி, சீன மொழி, ஜப்பானிய மொழி, சிரில்லிக், தமிழ் போன்றவற்றின் எழுத்துகளைக் கொண்டும் இனி இணையதள முகவரிகளை வைத்துக்கொள்ள வழி பிறக்கும் என்று தெரிகிறது.
பலகணி - இந்தியாவுக்காக எத்தியோப்பியாவில் விவசாயம்
இந்தியாவில் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுவருகிறது |
1970களின் பிற்பகுதி முதலே இந்தியா உணவு உற்பத்தியில் பெரும்பாலும் தன்னிறைவு கண்டுள்ளது என்றாலும், இந்தியாவின் ஜனத்தொகை மிக வேகமாக அதிகரித்துவருவதன் காரணமாகவும், தொழிற்சாலைகள் அமைப்பதற்காக விளைநிலங்களை தாரைவார்க்க வேண்டிய நிர்பந்தம் காரணமாகவும், சீதோஷ்ண நிலை மாற்றங்கள் காரணமாகவும் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது.
எதிர்காலத்தில் இந்தியாவுக்கு தொடர்ந்து உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் உணவு உற்பத்தி செய்வது என்பதை வரிச் சலுகைகள், குறைந்த வட்டிகளுடன் கூடிய கடன்கள் உள்ளிட்ட பல்வேறு வழிவகைகள் மூலம் இந்திய அரசு ஊக்குவித்துவருகிறது.
அவ்வகையில் எத்தியோப்பியாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய விவசாயப் பண்ணை குறித்த செய்திப் பெட்டகத்தை நேயர்கள் பலகணியில் கேட்கலாம்.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น