செய்தியறிக்கை
வெப்ப வாயு வெளியேற்றம் பருவ நிலை மாற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது |
உலக சீதோஷ்ண நிலை மாற்றம் குறித்த ஐ.நா.மாநாட்டில் ஒரே குரலாக ஒலிக்க ஐரோப்பியத் தலைவர்கள் சம்மதம்
எதிர்வரும் டிசம்பர் மாதம் கோபன்ஹேகனில் நடக்க இருக்கும் ஐ.நா.மன்றத்தின் பருவ நிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சார்பில் பொதுவானதொரு நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் மத்தியில் ஒப்புதல் ஏற்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் எதிர்மறை பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு வளர்ந்துவரும் நாடுகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கு தேவைப்படும் நிதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நியாயமான பங்குத்தொகையை ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தாங்கள் அளிக்க இருக்கும் தொகை எவ்வளவு என்று அவர்கள் குறிப்பிட்டு கூறவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் ஏழை நாடுகள் தங்களின் சக்திக்கு ஏற்ற வகையில் இதற்கான தமது நிதிப்பங்களிப்பை தாமாக முன்வந்து அளிக்கலாம் என்று இந்தத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் இந்த விடயத்தில் நிலவிய தடையை இவர்கள் வெற்றிகரமாக கடந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
பருவநிலைமாற்றம் தொடர்பிலான நடவடிக்கைகளை எடுப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் முன்னணியில் இருக்கிறது என்பதை இந்த ஒப்பந்தம் குறிப்புணர்த்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பதவியில் தற்போது இருக்கும் ஸ்வீடன் தெரிவித்துள்ளது. அதேவேளை, மற்ற நாடுகள் தம்மை பின்பற்றுவார்கள் என்றும் அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.
போதை மருந்து கடத்தல் தடுப்பு: அமெரிக்கா-கொலம்பியா இடையில் ஒப்பந்தம்
கொலம்பியா வரைபடம் |
இதன்படி கொலம்பியாவின் ஏழு இராணுவ நிலைகளை அமெரிக்கப் படைகள் பயன்படுத்த வழி ஏற்பட்டுள்ளது.
போதைமருந்து தீவிரவாதம் என்று கொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் கேப்ரியேல் சில்வாவால் வர்ணிக்கப்படும் விடயத்துக்கு எதிரான போரில், கொலம்பிய இராணுவத்துக்கு தேவைப்படும் பயிற்சி, நடைமுறை உத்திகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களை அமெரிக்கப் படையினர் அளிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் ஏற்படும் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டை இந்த ஒப்பந்தம் குறிப்புணர்த்துவதாக வெனிசுவேலா, இகுயுவேடர், பொலிவியா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் விமர்சித்துள்ளன.
இந்திய எண்ணெய்க் கிடங்கில் தீ: நான்கு பேர் பலி, ஆறு பேரைக் காணவில்லை
தீயை அணைக்கமுடியவில்லை |
இந்தத் தீவிபத்தில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கிடங்கில் பணியாற்றிவந்த மேலும் ஆறு பேரைக் காணவில்லை என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கூறுகிறது. வியாழன் பின்னிரவு தீப்பிடித்து எண்ணெய்க் கிடங்கு மொத்தத்திலும் அக்கம் பக்கத்து இடங்களிலும் தீ கொளுந்துவிட்டு எரிகிறது.
அப்பகுதியில் வாழ்ந்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
தீயை அணைப்பது மிகவும் சிரமமாக இருப்பதால், எண்ணெய் முழுவதும் எரிந்து தானாக தீ அடங்கும் வரை காத்திருக்க வேண்டுமெனத் தெரிவதாக எண்ணெய் வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
லத்தீன் எழுத்துகள் அல்லாத பிற மொழி எழுத்துகளிலும் இணையதள முகவரி அமைய புதிய ஏற்பாடு
இண்டர்நெட் கார்ப்பரேஷன் ஃபார் அஸைண்ட் நேம்ஸ் அண்ட் நம்பர்ஸ் - சுருக்கமாக ஐகேன் (ICANN) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற இணைய ஒழுங்கு அமைப்பானது, இணையம் செயலாற்றிவந்த விதத்தில் இதுவரையில் நடந்துள்ள மிகப் பெரிய மாற்றம் இதுதான் என்று கூறுகிறது.
இணையத்தைப் பயன்படுத்துகின்ற நூற்று அறுபது கோடி மக்களில் பாதி பேர் லத்தீன எழுத்துகள் அல்லாத பிற எழுத்துகளைக் கொண்டு இணையத்தை பயன்படுத்துபவர்கள் என்று கூறும் ஐகேன் அமைப்பு, வேற்று மொழி மக்கள் தங்களுடைய கலாச்சார அடையாளத்தை இணையத்திலும் பெற்றிருக்க தற்போது கொண்டுவரப்படும் மாற்றம் அனுமதிக்கும் என்று கூறுகிறது.
கொழும்பு நகர காவலில் பொலிசார் |
கொழும்பில் இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது
இலங்கையில், தலைநகர் கொழும்பில் பம்பலபிட்டிய என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பம்பலபிட்டி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர், வெள்ளிக்கிழமை மாலை அதே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரனைகள் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக்கூறும் இலங்கைப் பொலிஸ் பேச்சாளர் நிமல் மெதிவக்க, இரத்மலானை என்ற இடத்தைச் சேர்ந்த 26 வயதான இந்த இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவித்தார்.
மூன்று தடவைகள் அங்கோடை மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ள இவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பம்பலபிட்டிய கடற்கரைப் பகுதியில், அதனை ஒட்டிச் செல்லும் கரையோர ரயில் பாதையில் சென்ற ரயிலொன்றின் மீதும் வீதியில் சென்ற வாகனங்களின் மீதும் கற்களை வீசியெறிந்ததாககக் கூறப்படும் இந்த இளைஞனை சிலர் பிடிக்க முனைந்துள்ளனர்.
சம்ப இடத்துக்கு உடனடியாக விரைந்த பொலிசார் அந்த இளைஞனை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கடலில் பாய்ந்து தப்பிச் செல்ல முயன்ற இந்த இளைஞனை கடலிலிருந்து மீள விடாது தொடர்ந்தும் சிலர் தாக்கிய நிலையில் கடல் அலையில் சிக்கி தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பத்தின் பின்னணியில், இலங்கையில் மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு மற்றும் சமூக அக்கறைகள் தொடர்பான நிலைமை குறித்து இலங்கையில் மனித உரிமைகள் ஆர்வலர் எஸ். பாலகிருஷ்ணன் அளித்த செவ்வியை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றிய கப்பல் இன்னும் ஒரு வார காலத்திற்கு கடற்பரப்பில் தங்கியிருக்கலாம்
கப்பலில் தமிழ் அகதிகள் |
ஓசியானிக் வைகிங் என்று பெயரிடப்பட்ட இந்த கப்பல் அங்கே தங்கி இருப்பது தொடர்பிலான காலக்கெடு இன்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் பின்னணியில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்த இலங்கை தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பின்டன் தீவுப்பகுதியில் கரைக்கு வருவதற்கு இந்தோனேஷிய அரசாங்கம் ஒப்புக்கொண்டதாவும், ஆனால் இந்த படகில் இருப்பவர்கள் அதிலிருந்து இறங்குவதற்கு மறுத்து வருவதாகவும் இந்தோனேஷிய அரசு கூறிவருகிறது.
"பா.ஜ.க கூட்டணி ஆட்சியின் போது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன" - தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா குற்றச்சாட்டு
அமைச்சர் ஆ. ராசா |
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், அலைக்கற்றைகளை தொலைபேசி சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கியதன் மூலம், அரசுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ராசா புகார் கூறியுள்ளார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக, தொலைத் தொடர்புத்துறை தயாரித்துள்ள அறிக்கையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, பிரபல தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் பலனடைந்துள்ளதாகவும், அப்போதைய ஆட்சியில் அவர்களுக்கு சாதகமாக விதிகள் மீறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ராசாவின் புகார்களை பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவ்டேகர் முழுமையாக மறுத்துள்ளார்.
ஜோசப் ஸ்டாலினை நல்லவராக சித்தரிக்க சில அரசியல்வாதிகள் முயலுவதாக ரஷ்ய அதிபர் குற்றச்சாட்டு
ஜோசப் ஸ்டாலின் |
கடந்த நூற்றாண்டின் இரத்த தாகம் கொண்ட மோசமான தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படும், முன்னாள் சோவியத் சர்வாதிகாரியான ஜோசப் ஸ்டாலினுக்கு உன்னதமானவர் என்ற அந்தஸ்தை கொடுக்க முயற்சிக்கும் ரஷ்யர்கள் மீது, ரஷ்ய அதிபர் டிமித்ரி மெட்வடேவ் அவர்கள் வெளிப்படையான தாக்குதலை தொடுத்துள்ளார்.
தனது சொந்த மக்களையே ஒழித்த ஒருவரை நியாயப்படுத்த முனைவது சாத்தியமானது அல்ல என்று அதிபர் மெட்வடேவ் கூறியுள்ளார்.
அண்மைய வருடங்களில் ஸ்டாலினுக்கு ஒரு சாதகமான அந்தஸ்தை வழங்க சில ரஷ்ய அரசியல்வாதிகள் பிரயத்தனங்களை செய்து வருகிறார்கள்.
ரஷ்ய அதிபர் அலுவலகத்துக்கு சொந்தமான இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில், வழமைக்கு மாறான இந்த விமர்சனத்தை மெட்வடேவ் அவர்கள் வைத்துள்ளார்.
1920 ஆம் ஆண்டு முதல் 1953 இல் ஸ்டாலின் இறக்கும் வரையிலான அவரது கொடுங்கோல் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட பல லட்சக்கணக்கான மக்களை நினைவு கூருவதற்கான நாளில் இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது.
பல குழுக்களைச் சேர்ந்த மக்கள் ஒட்டுமொத்தமாக படுகொலை செய்யப்பட்டு, அவர்களது சடலங்களை புதைப்பதற்கான உரிமை கூட பறிக்கப்பட்ட நிலையில், ஸ்டாலினின் ஆட்சியின் கீழ் நடந்தேறிய அடக்குமுறையை கற்பனை செய்து பார்ப்பது கூட முடியாத விடயம் என்று மெட்வடேவ் அவர்கள் கூறியுள்ளார்.
ஆனால், தற்போது கடந்த கால அடக்குமுறைகளை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகள் நடப்பதாக கூறும் ரஷ்ய அதிபர், சரித்திரம் தவறாக கற்பிதம் செய்யப்பட்டுவிடக்கூடது என்றும் எச்சரித்துள்ளார்.
ஸ்டாலின் ஒரு சிறந்த நிர்வாகி என்றும், சோவியத் ஒன்றியத்தை ஒரு உலக சக்தியாக மாற்றியவர் அவர்தான் என்றும் கூறும் போக்குகளுக்கு மத்தியில் இந்த விமர்சனம் வந்துள்ளது.
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น