உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம்
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ளும் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைவராக பேராசிரியர் கா.சிவத்தம்பி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தக் குழுவின் தலைவராக இலங்கைத் தமிழ் பேரறிஞர் முனைவர் கா.சிவத்தம்பியும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என தமிழறிஞர் சிவத்தம்பி கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகின.
இந்தச் செய்திகளுக்குக் கண்டனம் தெரிவித்த முதல்வர் கருணாநிதி செம்மொழி மாநாட்டில் தமிழ் பேரறிஞர்களின் வருகையைத் தடுக்க முயற்சி நடைபெறுகிறது என்று குற்றம்சாட்டினார்.
ஆய்வரங்கக் குழுவில்...
இந்த நிலையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள ஆய்வரங்க அமைப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து செம்மொழி மாநாட்டின் தனி அலுவலர் கா. அலாவுதீன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில்,
"ஆய்வரங்க அமைப்புக் குழுவின் தலைவராக பேராசிரியர் முனைவர் கா.சிவத்தம்பி நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக முனைவர்கள் ஒளவை.நடராஜன் பொன்.கோதண்டராமன் ஆகியோரும் செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராஜேந்திரன் ஆய்வரங்க அமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆய்வரங்கப் பணிகளைத் திட்டமிடவும் செயல்படுத்தவும் துணைத் தலைவர்கள் துணைக் குழுக்களை அமைத்துக் கொள்ளவும் ஆய்வரங்க அமைப்புக் குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி அனைத்து ஆய்வரங்கப் பணிகளையும் இந்தக் குழு மேற்கொள்ளும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம்"
แสดงความคิดเห็น