அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் இலட்சியக் கனவுகளை நனவாக்குவோம்-சிறப்பு கட்டுரை
இ.தொ.கா.வின் ஸ்தாபகருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 10ஆவது சிரார்த்த தினம் இன்றாகும். இøதயொட்டி அமரரின் கனவுகளை நனவாக்குவதற்கும் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கும் அவரது அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கும் இ.தொ.கா. தீவிர செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது. இ.தொ.கா.வின் பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இதற்கான ஏற்பாடுகளை விரிவாக மேற்கொண்டுள்ளார்.அமரரின் சிரார்த்த தினத்தையொட்டிய வைபவங்களை நடத்துவதற்கு மாறாக அவரது இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இ.தொ.கா. ஈடுபட்டு வருகின்றது.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக சமுதாயத்தின் பிரச்சினைகளையும் அவலங்களையும் சர்வதேச உலகிற்கு எடுத்துக்காட்டி வந்துள்ளார். சர்வதேச தொழிற்சங்க ஸ்தாபனங்கள் மூலமாகவும் மலையக மக்களின் பரிதாபகரமான அவல நிலையை அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்துள்ளார். இன்று உலக நாடுகளில் இந்திய வம்சாவளியினர் பரந்துபட்டு சிதைந்து வாழ்கின்றனர். குறிப்பாக மலேசியா, தென்னாபிரிக்கா, ஈஜிப்ற் தீவுகள் ஆகியவை உள்ளிட்ட உலக நாடுகளில் எல்லாம் இவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்திய மத்திய அரசும், மாநில அரசும் இப்போதுதான் இவர்களின் நலன்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், இந்தச் சிந்தனையை ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னரே அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இந்தப் பெரும் அரசுகளுக்கு வலியுறுத்தி வந்துள்ளார். 1960களில் பர்மாவில் இருந்து இந்தியத் தமிழர்கள் அகதிகளாகவும் பலவந்தமாகவும் வெளியேற்றப்பட்டார்கள். அத்தருணத்தில் அவர்களுக்காக குரல் கொடுக்க பர்மாவில் ஆக்கபூர்வமான ஒரு கட்சி இயங்கவில்லை. அதற்கான ஒரு தலைவரும் இருக்கவில்லை. அதேவேளை இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் நாட்டுரிமையும், வாக்குரிமையும் பறிமுதல் செய்யப்பட்ட போது இவற்றுக்கு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்து 1952இல் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் அமரர் தொண்டமான் துணிச்சலோடு பங்குபற்றினார். சத்தியாக்கிரகப் போராட்டத்தை முறியடிப்பதற்கு அன்றைய அரசு குதிரைப் படையை ஏவியது. ஆனால், அமரர் தொண்டமான் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து ஆக்ரோஷமாக படையினருடன் வாக்குவாதங்களை நடத்தினார். அது மாத்திரமல்ல பெரும்பான்மை அரசியல் தலைவர்களுடனும், பிரதமர்களுடனும் அவர் நேரடியாக மோதியுள்ளார்.
மலையகத் தமிழர்களின் அவல நிலையை அன்றைய பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு, சென்னை ஆளுநராக இருந்த இராஜகோபால் ஆச்சாரியார் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துக் கூறியுள்ளார். இந்த மக்களுக்கு எதிராக அன்றைய அரசியல்வாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கெடுபிடிகளையும் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளையும் தொழிற்சங்க மூலமாக சர்வதேச அரங்குகளில் எடுத்துக்காட்டி வந்துள்ளார். ஸ்ரீமாசாஸ்திரி ஒப்பந்தம் 1964ஆம் ஆண்டு கைசாத்திடப்பட்டது. இது மலையகத் தலைவர்களை கலந்தாலோசிக்காமல் இரு நாடுகளான இலங்கையும் இந்தியாவும் தன்னிச்சையான கூட்டில் உருவாக்கியுள்ளன என அவர் கடும் கண்டனம் தெரிவிக்கத் தவறவில்லை. இலங்கையில் அடுத்தடுத்து வன்செயல்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கைத் தமிழர்களின் தமிழ்மொழி கோரிக்கை, தனிநாட்டு கோரிக்கை ஆகியவற்றால் இனக்கலவரங்கள் இடம்பெற்றன. இந்த இனக்கலவரங்களில் அப்பாவிகளான இந்திய வம்சாவளி மக்களும் குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த மக்களின் பெரும்பாலான கடைகளும் வீடுகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அநேகர் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டார்கள். இந்த வன்செயல் கொடுமைகளை விசாரிப்பதற்கென "சன்சோனி' ஆணைக் குழு நிறுவப்பட்டது.
இந்த சமயத்தில் குறிப்பாக வட, கிழக்கு தமிழர்களுக்காக பிரபலமான சட்டத்தரணிகள் "சன்சோனி' ஆணைக்குழு முன் ஆஜராகி தங்களின் மக்களுக்காக மாத்திரமே வாதாடினார்கள். இந்த சட்டத்தரணிகள் வட, கிழக்கு மக்களைத் தவிர இந்த வன்செயல்களால் மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. தமிழர்கள் என்ற ரீதியில் ஒருதலைப் பட்சமான அணுகுமுறை கையாளப்பட்டது. இதைக் கண்டு அமரர் தொண்டமான் அன்று கலங்கினார். அவரது கவலை ஆத்திரமாக உருவெடுத்தது. இந்த இனக்கலவரத்தில் கேகாலை, எட்டியாந்தோட்டை, இரத்தினபுரி, பலாங்கொடை, கண்டி ஆகிய பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளிலும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தார்கள்.
இவர்கள் தொடர்பான விபரங்களை இ.தொ.கா.வால் நிறுவப்பட்ட விஷேட குழு திரட்டியது. இவ்விடயத்தில் அமரர் தொண்டமான் நேரடி கண்காணிப்பைச் செலுத்தினார். இந்த மக்களுக்காக "சன்சோனி' ஆணைக்குழு முன் வாதாடுவதற்காக அமரர் தொண்டமான் பிரபல்யமான சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்திருந்தார். இந்த "சன்சோனி' ஆணைக்குழுவின் முதல் விசாரணை ஓய்வுபெற்ற நீதியரசர் சன்சோனி முன்னிலையில் கண்டி செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் ஆரம்பமானது.இந்த அமர்வில் மலையகத்தில் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் ஆஜராகினார்கள். அவர்கள் மலையகத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள், பதவியாளர்கள் ஆகியோர் பற்றியே பெரிதும் பேசினார்கள். இதே வேளை மலையக இந்திய வம்சாவளியினர் பற்றி அவர்கள் பிரஸ்தாபிக்கவில்லை. இந்த முதல் அமர்வில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினருக்காக இ.தொ.கா. சார்பில் பிரபல சட்டத்தரணிகள் வாதாடினார்கள்.
இந்த சட்டத்தரணிகள் குழுவிற்கு கே. என். சொக்ஸி தலைமை வகித்தார். இந்த அமர்வில் அமரர் தொண்டமானும் அப்போதைய நீதிச் செயலாளராக இருந்த அமரர் வி. அண்ணாமலையும் நேரடியாக கலந்து கொண்டார்கள். இந்த அமர்வின் போது வடகிழக்கு மக்களுடைய பிரச்சினைகள் வேறு மலையக மக்களது பிரச்சினைகள் வேறு. இந்த வன்முறைகளுக்கு காரணமான கோரிக்கைகளில் இந்த மக்கள் சம்பந்தப்படவில்லையென சொக்ஸி தனது வாதத்தை முன்வைத்தார்.இதற்குப் பின்னர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசுகளுடன் இணைந்து அமரர் தொண்டமான் அரசியல் சாணக்கியமான முறையில் இவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தினார். அவரது இலட்சியங்களை தொடர்ந்து கடைப்பிடித்து நமது சமுதாயத்தை மென்மேலும் ஈடேற்றுவதற்கு இத்தினத்தில் இ.தொ.கா. திடசங்கற்பம் கொள்கிறது.
0 Response to "அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் இலட்சியக் கனவுகளை நனவாக்குவோம்-சிறப்பு கட்டுரை"
แสดงความคิดเห็น