சீனாவின் 60ஆவது ஆண்டுக் கொண்டாட்டம்
அதன் படைபலம், இராணுவ பலத்தை பறைசாற்றும் விதமாக அமைந்த இராணுவக் கண்காட்சியும், வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும் அனைவரையும் வசீகரிக்கும் வகையில் அமைந்திருந்தது.
பெய்ஜிங்கில் மிகப் பெரிய சீன இராணுவத்தின் வல்லமையைப் பறைசாற்றும் விதத்தில், அணு ஏவுகணைகள், இராணுவ டாங்குகளுடன் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். எனினும், பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
தொலைக்காட்சி மூலம் இந்த அணிவகுப்பு மற்றும் இதர கொண்டாட்டங்களைக் கண்டுகளிக்குமாறு பொதுமக்களை அரசு கேட்டுக் கொண்டது.
பெய்ஜிங்கில் இராணுவ அணிவகுப்பு நடைபெற்ற தியானன்மென் சதுக்கம் உட்பட முக்கிய இடங்கள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. இராணுவ அணிவகுப்பு மரியாதையை சீன அதிபர் ஹஜின்டாவோ ஏற்றுக் கொண்டார்.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஜெட் போர் விமானங்கள் விண்ணில் சாகசங்களை நிகழ்த்தின. கைகளில் வாழ்த்து அட்டைகளை ஏந்தி வந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
கம்யூனிஸ்ட் ஆட்சியின் 60ஆம் ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில், 60 அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் இடம் பெற்றன. சீனாவின் விண்வெளித் திட்டம் மற்றும் இதர துறைகளில் நாடு எட்டியுள்ள முன்னேற்றங்களை சித்திரிக்கும் வகையில், இந்த அலங்கார ஊர்திகள் பவனி வந்தன.
60ஆவது ஆண்டு தினத்தையொட்டி, சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில்,
"முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. நமது நாடு மிகுந்த வலிமை பெற்றுள்ளதற்கும், செல்வச்செழிப்புடன் திகழ்வதற்கும் நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும்" என்றார்.
0 Response to "சீனாவின் 60ஆவது ஆண்டுக் கொண்டாட்டம்"
แสดงความคิดเห็น