தமிழக குழு விடுத்த அறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு ராமதாஸ் கோரிக்கை
இலங்கை சென்று வந்த தமிழக நாடாளுமன்ற குழுவினர், இந்திய அரசிடம் சமர்பித்த அறிக்கையினை உடனே வெளியிடவேண்டும்" என்று பா. ம. க. நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் முள்வேலி முகாம்களில் வதைப்படும் மூன்று லட்சம் தமிழர்களை விடுவிக்கக் கோரி, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி 29 ஆம் திகதி வரை பிரசார பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை மெமோரியல் அரங்கத்திலிருந்து இன்று (271009) பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில் பிரசாரப் பயணம் தொடங்கப்பட்டது.
அதேவேளையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் கன்னியாகுமரியிலிருந்தும், ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ தலைமையில் ராமேஸ்வரத்திலிருந்தும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமையில் கோவையிலிருந்தும் பிரசார பயணங்கள் ஆரம்பமாகின.
இவர்கள் அனைவரும் தங்களின் பிரசார பயணத்தை எதிர்வரும் 29 ஆம் திகதி மாலை திருச்சியில் நிறைவு செய்கின்றனர். அத்துடன் அங்கு பிரம்மாண்டமான பொதுகூட்டமும் நடைபெறுகிறது.
சென்னையில் பிரசார பயணத்தைத் தொடங்கி வைத்து பேசிய ராமதாஸ்,
"விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்றால் ஏன் அந்த இயக்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி மூன்று முறை போர் நிறுத்தம் செய்து கொண்டீர்கள்?
எனவே விடுதலை புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமோ, தீவிரவாத இயக்கமோ அல்ல. அது தமிழீழத்திற்காகப் போராடும் விடுதலை இயக்கம்.
ஈழத்தமிழர்களின் கொன்று குவிக்கப்பட்ட இரத்தக்கறை கூட காயாத நிலையில், இந்தியாவிலிருந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்று, அதிபர் ராஜபக்ஷவைச் சந்தித்து, கை குலுக்கி, அவர்கள் அளித்த பரிசையும், விருந்தோம்பலையும் ஏற்று வந்திருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழக நாடாளுமன்ற குழுவினர் இந்திய அரசிடம் சமர்பித்த அறிக்கையை வெளியிட வேண்டியது தானே? அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?
நாங்கள் 29 ஆம் திகதியன்று திருச்சியில் நடத்தவுள்ள பொதுகூட்டத்திற்கு முன்னராவது அதனை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மூன்று லட்சம் தமிழர்களை அவர்களின் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கமாறு கோர மாட்டேன். தமிழர்களுக்குச் சொந்தமான பூமியை ஆக்கிரமித்திருக்கும் இலங்கை இராணுவம் அங்கிருந்து வாபஸ் பெற வேண்டும் என்றே கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
0 Response to "தமிழக குழு விடுத்த அறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு ராமதாஸ் கோரிக்கை"
แสดงความคิดเห็น