jkr

செய்தியரங்கம்

செய்தியறிக்கை
தாக்குதல் நடந்த இடத்தில் அரச படையினர்
தாக்குதல் நடந்த இடத்தில் அரச படையினர்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஆயுததாரிகள் தொடர் தாக்குதல்

பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான லாகூர் நகரில், மத்திய பாதுகாப்பு கட்டிடம் ஒன்றையும், இரண்டு போலிஸ் பயிற்சி மையங்களையும் தாக்கிய தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல்கள் நடந்தன.

இந்த மோதல்களில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர்.

முன்னதாக, வடமேற்கு நகரான கொஹாத் நகரில், போலிஸ் நிலையம் ஒன்றின் அருகே கார் குண்டுஒன்று வெடித்ததில், குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர்.

வடமேற்கு நகரான பெஷாவரில், மக்கள் குடியிருப்புப் பகுதி ஒன்றில் கார் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருகுழந்தை கொல்லப்பட்டது, பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


காசா மீதான இஸ்ரேலிய படை நடவடிக்கை: ஐ.நா. மனித உரிமை சபையில் மீண்டும் விசாரணை

காசாவில் இஸ்ரேல் தீவிர படை நடவடிக்கை மேற்கொண்டிருந்தது
மத்தியகிழக்கிலுள்ள காசா பகுதி மீது இந்த வருடத்தின் முற்பகுதியில் நடைபெற்ற இஸ்ரேலிய படை நடவடிக்கை குறித்த தனது விவாதத்தை ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் மீண்டும் துவக்கியுள்ளது.

இது குறித்த விசாரணைகள் தென் ஆப்பிரிக்க நீதிபதி ரிச்சரட் கோல்ட்ஸ்டோன் தலைமையில் நடைபெற்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அகிய இரண்டுமே போர்க் குற்றங்களை புரிந்ததாக குற்றம்சாட்டி, இருதரப்பும் நம்பத்தகுந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இவ்விசாரணைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதல் விவாதம் இரு வாரங்களுக்கு முன்பு நடந்தபோது, இப்பிரச்சினை தொடர்பான தனது பதில் நடவடிக்கைகளை ஆறு மாதங்கள் காலம் தாழ்த்துவது என மனித உரிமை கவுன்சில் முடிவெடுத்தது.

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக முதலில் இதற்கு பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இணக்கம் தெரிவித்திருந்தார். ஆனால் பாலத்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவை மாற்றிக் கொண்டு, இது தொடர்பான விவாதம் உடனே மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.


ஊழலுக்கு எதிராக தென்னாப்பிரிக்க மக்கள் ஆர்ப்பாட்டம்

பல தென்னாப்பிரிக்க நகரங்களில், தமக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்றும், ஊழல் புரியும் அதிகாரிகளை நீக்க வேண்டும் என்றும் கோரி மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் செய்துள்ளனர்.

குறிப்பாக சாக்ஹைல் என்ற இடத்தில் அவசரகாலநிலை போன்ற ஒரு சூழல் நிலவுவதாக பிபிசி நிருபர் ஒருவர் கூறுகிறார்.

மூன்று வாரங்களாக நடக்கும் இந்த போராட்டத்தில் பல சாலைகள் மறிக்கப்பட்டன. முனிசிபல் கட்டிடங்கள் கொளுத்தப்பட்டன.

இரண்டு அமைச்சர்களும் பல மூத்த அதிகாரிகளும் அந்தப் பகுதிகளுக்கு செல்லவுள்ளனர்.


சர்வதேச வைர வர்த்தக நடைமுறைகள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன

பட்டை தீட்டப்படாத வைரக்கற்களை வைத்து உலக அளவில் நடக்கும் வணிகத்தை ஒழுங்குபடுத்தும் கிம்பர்லி வழிமுறை எனப்படும் சர்வதேச திட்டம் தோல்வியடைந்துவருவதாக கனடாவில் இருந்து இயங்கும் கண்காணிப்புக் குழு ஒன்று கூறியுள்ளது.

போர்க்குழுக்களின் தளபதிகளும், கிரிமினல்களும் வைர வர்த்தகத்தைப் பயன்படுத்தி கறுப்புப் பணத்திற்கு பொய்க்கணக்கு காட்டுவது மற்றும் மோதல்களை நடத்த நிதி தருவது, போதைப் பொருட்களைக் கடத்துவது போன்ற நடவடிக்கைகள் மீண்டும் வரக்கூடிய ஒரு அபாயம் இருப்பதாக அது கூறுகிறது.

அங்கோலா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, வெனிசுவேலா உள்ளிட்ட பல நாடுகளில் கட்டுப்பாடுகள் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அவர்களது வைரங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை அறிவது ஒருபோதும் சாத்தியமாகவில்லை என்றும் ஆப்ரிக்கா-கனடா கூட்டு அமைப்பு என்ற இந்த குழு கூறுகிறது.



இந்தோனேஷிய கடற்படையால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்


ஆஸ்திரேலியாவுக்கு கப்பலில் செல்ல முயன்றபோது இந்தோனேசியாவின் கடற்படையால் ஜகார்தா அருகேயுள்ள மெரக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 260 இலங்கை தமிழ் அகதிகள் தாம் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.

கப்பலில் உள்ள சிறு குழந்தைகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் பங்கேடுத்துள்ளதாக தமிழோசையில் தெரிவித்த கப்பலில் உள்ள அகதிகளில் ஒருவர், உடனடியாக ஏதாவது ஒரு நாடு தமக்கு அடைக்கலம் கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

கப்பலில் உள்ளவர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்தவர்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர்களில் சிலர் முகாம்களில் இருந்து தப்பிவந்தவர்கள் என்றும் அவர் நம்மிடம் மேலும் தெரிவித்தார்.

சட்ட விரோத குடியேறிகள் இந்தோனேசியா வழியாக தமது நாட்டுக்கு வருவதை இந்தோனேசியா தடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் சில தினங்களுக்கு முன்பாகத்தான் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து 1400 பேர் விடுவிப்பு

சிலகாலம் முன்பு வவுனியா முகாம்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன
இலங்கையில் பருவமழைக் காலம் நெருங்கிவரும் நிலையில், இடம்பெயர்ந்த மக்களை முகாம்களிலிருந்து வெளியே அனுப்புவதை துரிதப்படுத்தும் நடவடிக்கையின் முதல்கட்டமாக வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 1400 பேர் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த இரண்டு வார காலகட்டத்தில் மொத்தம் ஐம்பதாயிரம் பேர் வரை முகாமிலிருந்து வெளியில் விடுவது என்றும், ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் முகாமில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் இந்த நடவடிக்கையில் திட்டமிடப்பட்டுள்ளது.

வியாழனன்று முகாமிலிருந்து வெளியில் அனுப்பப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இவர்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தலைமை செயல் அதிகாரியை மாற்ற வேண்டும்: சுரேஷ் கல்மாதி

போட்டிகளுக்கான ஆயத்த நிலை தொடர்பில் இந்திய ஏற்பாட்டுக்குழுவுக்கும் காமன்வெல்த் போட்டிகள் நிர்வாகக் குழுவினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன
காமன்வெல்த் விளையாட்டு்ப் போட்டிகள் அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், அந்தப் போட்டிகளுக்கான தலைமை செயல் அதிகாரி மார்க் ஹூப்பரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று போட்டிகளின் அமைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹூப்பர், லண்டனை மையமாகக் கொண்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் சம்மேளனத்துக்கும், போட்டியை நடத்தும் இந்தியாவுக்கும் பாலமாக இருந்து வருகிறார். போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இந்தியாவின் செயல்பாடு குறித்து காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம், சம்மேளனத் தலைவர் மைக் ஃபென்னல், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து கவலை வெளியிட்டார். விரைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த நிலையில், வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் கல்மாதி, மார்க் ஹூப்பர் உடனடியாக லண்டனுக்குத் திருப்பியனுப்பப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதே நேரத்தில், அவருக்குப் பதிலாக விரைவில் புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்று மைக் ஃபெனல் அவர்களுக்கும் கடிதம் எழுதியிருப்பதாக சுரேஷ் கல்மாதி தெரிவித்தார்.

ஆனால், கல்மாதியின் புகாரை நிராகரித்துள்ளார் மார்க் ஹூ்ப்பர். காமன்வெல்த் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற இந்தியப் பிரதமர் முதல் அனைவரும் சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகவும், அதனால், டெல்லியிலிருந்து காமன்வெல்த் போட்டிகளை வேறு நகருக்கு மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான செயல் அதிகாரி மார்க் ஹூப்பர் தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்துக்கான தரைவழித் தபால் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணப் பகுதிக்கு தரைவழியாகத் தபால்களை எடுத்துச்செல்லும் நடவடிக்கைகளை மூன்று ஆண்டுகால இடைவெளிக்குப் பின் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொழும்பிலிருந்து அனுப்பப்படுகின்ற தபால்கள் முதலில் ரயில் மூலம் வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து அண்மையில் மீண்டும் திறக்கப்பட்ட ஏ9 நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் செல்லப்படும்.

2006ஆம் ஆண்டில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் போர்நிறுத்தத்துக்குப் பின் மீண்டும் ஆரம்பித்ததிலிருந்து தரைவழி தபால் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.


இலங்கை சென்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வி

இந்தியாவின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று அண்மையில் இலங்கை சென்று இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து, அவர்களது நிலைதொடர்பாக இலங்கை ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாடிவிட்டு இந்தியா திரும்பியிருந்தது.

திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கையில் தமிழ் அகதிகளின் நிலை மற்றும் அவர்கள் நலனுக்காக தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் ஆகியவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த திமுகவின் கனிமொழி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சுதர்சனம் நாச்சியப்பன் ஆகியோர் தெரிவிக்கும் கருந்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வேகமாக உருகிவருகிறது ஆர்க்டிக் பனிப் படலம் - பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

வடதுருவ ஆர்க்டிக் கடலில் பனிக்கட்டியாக உறைந்திருக்கும் நீர் அடுத்த பத்து ஆண்டு காலத்திலேயே கோடைக் காலங்களில் கிட்டத்தட்ட முற்றும் முழுதாய் உருகிவிடும் ஓர் ஆபத்து இருப்பதாக புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

ஏற்கனவே கணித்திருந்த காலத்தைவிட மிகவும் முன்கூட்டியே இந்த நிலை ஏற்படலாம் என்பதை புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு வருடத்தில் பல மாத காலம் புவியின் வடதுருவத்தில் உறைபனியே இல்லாத நிலை உருவாகும்.

பிரிட்டனின் முன்னணி துருவ ஆராய்ச்சி நிபுணரான கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் வாதம்ஸ் இந்தக் கணிப்பைச் செய்துள்ளார்.

இந்த ஆண்டில் முன்னதாக ஆர்க்டிக் உறைகடல் மீது கிட்டத்தட்ட முன்னூறு மைல்கள் நடந்து சென்ற வழியெல்லாம் பனிப்படலத்தின் ஆழத்தை அளந்து திரும்பிய பென் ஹேடோ மற்றும் அவருடைய சகாக்கள் சேகரித்து வந்த தகவல்களை வாதம்ஸ் ஆராய்ந்துள்ளார்.

எதிர்பார்த்த அளவை விட ஆழம் குறைவாய் இருப்பதாகவும் பழைய பனிக்கட்டிகளைவிட அடர்த்தி குறைவாக இருப்பதாகவும் பனிப் படலம் இருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியரங்கம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates