அரசியல் அடைக்கலம் கோருவோர் மத்தியில் புலிகள் இல்லை: சிறிலங்காவின் கருத்துக்கு அவுஸ்திரேலியா மறுப்பு

அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோரி வந்து கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருக்கக்கூடும் என சிறிலங்கா தெரிவித்த கருத்தை அவுஸ்திரேலியா மறுத்துள்ளது.
அண்மைக்காலமாக இலங்கையைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோரி வருகின்றனர். படகுகள் மூலம் நாட்டுக்குள் நுழைய முயற்சிப்பவர்களை கைது செய்து கிறிஸ்மஸ் தீவில் உள்ள முகாம்களில் தடுத்து வைத்திருக்கிறது அவுஸ்திரேலியா.
தற்சமயம் 1,600 பேர் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினர் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அகதி நிலை தகுதி வழங்குவது குறித்து அவுஸ்திரேலிய அரசு பரிசீலித்து வருகின்றது.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களும் இருக்கக்கூடும் என்றும் அவர்களால் அவுஸ்திரேலியாவிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் அந்த நாட்டுக்கான சிறிலங்கா தூதுவர் சேனக்க வல்கம்பய எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 50 முதல் 100 பேர் வரையிலானோர் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என தூதுவர் தெரிவித்தார்.
“அங்கே (கிறிஸ்மஸ் தீவு) இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உறுதியான இளைஞர்கள் என்று நாம் கேள்விப்படுகின்றோம். அவர்களில் சிலரின் உடல்களில் காயங்களால் ஏற்பட்ட வடுக்களும் காணப்படுகின்றன. அவர்கள் சண்டையில் ஈடுபட்டார்கள் என்பதற்கான அடையாளங்கள் அவை” என்றார் தூதுவர் சேனக்க வல்கம்பய.
அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எவையும் தம்மிடம் கிடையாது எனத் தெரிவித்த தூதுவர், கிறிஸ்மஸ் தீவு மக்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையிலேயே தமது கருத்து அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
“கிறிஸ்மஸ் தீவில் உள்ளவர்களுக்கு அகதி நிலைத் தகுதி வழங்குவது குறித்து எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் விடுதலைப் புலிகள் நாட்டுக்குள் ஊடுருவாமல் இருப்பதை அவுஸ்திரேலியா உறுதிப்படுத்த வேண்டும் என்றே நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட தமது இயக்கத்தை அவர்கள் இங்கு புனரமைக்கக்கூடும்” என்று தூதுவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களையும் கருத்துக்களையும் மறுத்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரென்டண் ஓ கோர்னர், கடந்த ஒரு வருட காலத்தில் வருகை தந்தவர்களிடம் நடத்தப்பட்ட பாதுகாப்புச் சோதனைகளின்போது ஆபத்தானவர்கள் அவர்கள் மத்தியில் இருப்பதற்கான ஆதாரங்கள் எவையும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
“கடந்த செப்ரெம்பர் மாதத்தில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய முயற்சித்தவர்களின் மத்தியில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் இருப்பதற்கான சான்றுகள் எவையும் இல்லை” என்றார் அவர்.
மிகக் கடுமையான பாதுகாப்பு மற்றும் அடையாளப்படுத்தல் சோதனைகள் நடத்தப்படுவதாகக் கூறிய அமைச்சர், பாதுகாப்புப் பிரச்சினை இருக்கக்கூடியவர்களுக்கு விசா அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் கூறினார்.
“ஒரு படகு பிரிபட்டு அதில் இருந்தவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டதும், உடல்நலப் பரிசோதனை, அடையாளப் பரிசோதனை மற்றும் பாதுகாப்பு சோதனை என்பவற்றுக்கு அவர்கள் உட்படுத்தப்படுகிறார்கள்” என அமைச்சர் ஓ கோர்னர் குறிப்பிட்டார்.







0 Response to "அரசியல் அடைக்கலம் கோருவோர் மத்தியில் புலிகள் இல்லை: சிறிலங்காவின் கருத்துக்கு அவுஸ்திரேலியா மறுப்பு"
แสดงความคิดเห็น