jkr

செய்தியறிக்கை


ஜான் கிரிஸ்டோபி மித்தரான்
ஜான் கிரிஸ்டோபி மித்தரான்

அங்கோலாவுக்கு ஆயுதம் விற்றதற்காக பிரான்ஸின் முன்னாள் அமைச்சருக்கு சிறைத்தண்டனை

1990களில் அங்கோலா உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த நாட்டுக்கு ஆயுதங்கள் விற்றது தொடர்பான ஊழல் வழக்கில் பிரான்சின் முன்னாள் உள்துறை அமைச்சர் சார்ள்ஸ் பாஸ்காவுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைதண்டனையாகும்.

இதே வழக்கு தொடர்பாக, பிரன்சின் முன்னாள் அதிபர் பிரன்கோசுவா மித்தாரானின் மகன் ஜான் கிரிஸ்டோபி மிட்டாராண்ட் அவர்களுக்கு இரண்டு ஆண்டு கால ஒத்தி வைக்கப்பட்ட சிறை தண்டனையும், 5 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் இருந்து ஆயுதங்களை கொண்டு வந்து கொடுத்தார் என்று அரச தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டும் ரஷ்ய தொழிலதிபருக்கும் அவரது பிரன்சுக் கூட்டாளிக்கும் 6 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொழிலதிபர்களும் நீதிமன்றத்துக்கு வராத நிலையில் அவர்கள் மீதான வழக்கு முன்னெடுக்கபப்பட்டது.


கரடிச்சுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்

ரடோவன் கரடிச்
ரடோவன் கரடிச்
போஸ்னியாவின் முன்னாள் செர்பிய தலைவர் ரடோவன் கரடிச் மீதான போர்குற்ற வழக்கின் விசாரணைகளில் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவரும் நிலையிலும், அந்த வழக்கின் விசாரணைகள் த ஹேக்கில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும் துவங்கி நடந்துவருகின்றன.

கரடிச் இல்லாத நிலையிலும், வழக்கு தொடுத்திருப்பவர்கள் சார்பிலான வழக்கறிஞர் தங்கள் வாதங்களை ஆரம்பிக்கலாம் என்று கூறியுள்ள விசாரணை நீதிபதி ஓ கோன் க்வான் அவர்கள், கரடிச் அவர்கள் சார்பில் வாதாட வழக்கறிஞர் ஒருவரை நியமிப்பதா வேண்டாமா என்பது குறித்து பின்னர் தாம் முடிவெடுப்பதாக தெரிவித்தார்.

1990 களில் போஸ்னியாவில் நடந்த உள்நாட்டு போரின்போது, ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தலைமை தளபதியாக கரடிச் அவர்கள் இருந்ததாக, வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தனது ஆரம்ப வாதத்தில் தெரிவித்தார்.

மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்தது, இனப் படுகொலை செய்தது உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுக்கள் கரடிச் மீது சுமத்தப்பட்டுள்ளன.

தனது தரப்பு வாதத்தை முன்னெடுப்பதற்கு தனக்கு மேலதிக அவகாசம் தேவை என்று கரடிச் கோரி வருகிறார்.


லிஸ்பன் ஒப்பந்தம் குறித்த வழக்கை செக் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது

லிஸ்பன் ஒப்பந்தத்துக்கு எதிரான ஒருவர்
லிஸ்பன் ஒப்பந்தத்துக்கு எதிரான ஒருவர்
ஐரோப்பிய ஒன்றியத்தை மறுசீரமைக்கும் நோக்கிலான லிஸ்பன் ஒப்பந்தம் பற்றிய வழக்கு மீதான விசாரணையை செக் குடியரசின் அரசியல் சட்ட விவகாரங்களுக்கான நீதிமன்றம் அடுத்த வாரம் வரை ஒத்தி வைத்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம் நடத்தப்படும் விதத்தை ஒழுங்கு படுத்துவதற்கும், அதன் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் லிஸ்பன் ஒப்பந்தம் முக்கிய படிக்கல்லாக பலராலும் பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளில் செக் குடியரசில் மட்டும் தான் இந்த ஒப்பந்தத்திற்கு இறுதி ஒப்புதல் இன்னமும் வழங்கப்படவில்லை.

இந்த லிஸ்பன் ஒப்பந்தம் செக்குடியரசின் இறையாண்மையை பாதிக்கிறதா என்கிற கேள்விக்கு நீதிமன்றம் விடை அளிக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தால், செக் அதிபர் வக்லவ் க்ளவுஸ் அவர்கள் அதில் கையெழுத்திட வேண்டி வரும். ஆனால் இதில் கையெழுத்திடுவதற்கு, அவர் ஏற்கனவே நிபந்தனைகளை அறிவித்திருக்கிறார்.


புலிகளைக் காப்பாற்றுவதற்கான மாநாடு

மாநாட்டில் கலந்துகொண்டோர்
மாநாட்டில் கலந்துகொண்டோர்
புலிகளை அழிவில் இருந்து காப்பதற்கான நோக்குடன் ஒரு சர்வதேச கருத்தரங்கு நேபாளில் துவங்கியுள்ளது.

உலக வங்கின் அனுசரணையுடன் நடக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகள், புலிகளை பாதுகாப்பதற்கான உக்திகளையும், புலிகள் வேட்டையாடப்படுவது, அதனது வாழ்விடங்கள் அழிக்கப்படுவது, புலிகளின் உடல் பாகங்கள் வியாபாரப் பொருட்களாக விற்கப்படுவது போன்ற பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர்.

இந்தப் பிரச்சனைகளைக் கையாள, உலகளாவிய அளவிலான ஒத்துழைப்பும், பிராந்திய ஒத்துழைப்பும் முன்னேப்போதையும் விட தற்போது அதிகம் தேவை என்று இந்த மாநாட்டை துவக்கி வைத்த நேபாள பிரதமர் மாதவ் குமார் நேபாள் கூறியுள்ளார்.

ஆசியாவில் உள்ள 13 நாடுகளில் மட்டுமே வனங்களில் புலிகள் உள்ளன. மொத்தமாக மூவாயிரம் முதல் நான்காயிரம் புலிகள் காடுகளில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஒரு லட்சம் புலிகள் காடுகளில் இருந்தன.

செய்தியரங்கம்
 இந்திய, சீன மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள்
இந்திய, சீன மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள்

ஆப்கான் நிலைமை குறித்து இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா கவலை

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து, ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

இன்று பெங்களூரில் நடைபெற்ற ரஷ்யா, இந்தியா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட, ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜெய் லவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் யங் ஜியெசி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள். இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், பொருளாதார மந்த நிலை, சுகாதாரம், வேளாண்மை உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

அந்தக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், சில அமைப்புக்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தடை விதித்துள்ள நிலையில், அந்த உத்தரவுகளை அனைத்து நாடுகளும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்து வருவது குறித்து அந்த மாநாட்டில் கவலை தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை வலுப்படுத்த, அனைத்து ஐ.நா உறுப்பு நாடுகளும், சர்வதேச பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பான நடைமுறைகளுக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர்கள் கேட்டு்க் கொண்டனர்.


இந்தோனேசியா அகதிகளை கொட்டுவதற்கான இடம் அல்ல என்கிறார் உள்ளூர் மாகாண ஆளுநர்

இந்தோனேசியாவின், இரு வேறு பகுதிகளில் இரு படகுகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட தஞ்சம் கோரும் இலங்கையர்கள் நிர்கதியாக நிற்கும் நிலையில், ''இந்தோனேசியா அகதிகளைக் கொண்டு கொட்டுவதற்கான இடமல்ல'' என்று அந்நாட்டில் உள்ள ஒரு மகாண ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இந்த இரண்டு படகுகளும் ஆஸ்திரேலிய கடற்படையால் தடுக்கப்பட்டன.

இந்தப் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.

இதில் 250 க்கும் அதிகமானோர் மேரக் துறைமுகத்தில் உள்ள ஒரு படகில் இருக்கின்றனர். இவர்கள் செவ்வாய்கிழமையன்று ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.


கம்யூனிஸ்ட் கட்சியின் தலித் ஆதரவுப் பேரணி

பேரணியில் கலந்து கொண்டவர்கள்
பேரணியில் கலந்து கொண்டவர்கள்
தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டப்படவேண்டும் என வலியுறுத்தி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் இன்று சென்னையில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

ஆலயங்களில் தலித் உரிமைகள் நிலை நாட்டப்படவேண்டும், வன்கொடுமைத் தடுப்புசட்டம் சரியாக அமல்படுத்தப்படவேண்டும், அரசு நிலங்கள் தலித் மக்களுக்கு வழங்கப்படவேண்டும், பாதாளச் சாக்கடை அடைப்புக்களை அகற்ற தலித் மக்கள் இறக்கிவிடப்படக்கூடாது, மாறாக இயந்திரங்கள் பயன்படுத்தப்படவேண்டும், தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு 18 இல் இருந்து 19 சதமாக உயர்த்தப்படவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் எழுப்பப்பட்டன.

தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் கையளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வரதராசன் கோரிக்கைகள் நியாயமானவையே என்று முதல்வர் கருணாநிதி ஒப்புக்கொண்டு, அவையெல்லாம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.

ஆனால் தலித் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவர் என்றும் வரதராசன் எச்சரித்தார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates