ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டு 5 மணிநேரத்தின் பின் மீட்பு
ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து நேற்றுக் காலை 9.30 மணியளவில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று டில்லி நோக்கிப் புறப்பட்டது. பிற்பகல் 3.30 மணி அளவில் ஜார்கண்ட் - மேற்கு வங்காள எல்லையில் உள்ள மேற்கு மிட்னாபுர் மாவட்டத்துக்கு அந்த ரயில் வந்த போது வழிமறிக்கப்பட்டது.
ஜார்கிராம் என்ற ரயில் நிலையத்தைக் கடந்து பன்ஸ்தாலா ரெயில் நிலையத்தை நோக்கி அந்த ரயில் சென்றது. அந்த பகுதி முழுவதும் அடர்ந்த காடுகளைக் கொண்டதாகும்.
ஜார்கிராமில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சென்றபோது தண்டவாளத்தின் குறுக்கே மரங்களும், மரக்கிளைகளும் போடப்பட்டு இருப்பதைப் பார்த்த டிரைவர் ஆனந்த ராவ் உடனே, ரயிலை நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, அருகில் உள்ள புதர்களில் மறைந்திருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் ஓடி வந்து ரயிலைச் சூழ்ந்து கொண்டனர்.
மேலும், ரயில் சாரதி ஆனந்த ராவ் மற்றும் உதவி சாரதி கே.ஜே.ராவ் இருவரையும் மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றனர். அதே நேரத்தில், ரயிலைச் சுற்றிலும் மற்றவர்கள் நின்று கொண்டனர். எனவே ரயிலும், அதில் இருந்த சுமார் ஆயிரம் பயணிகளும் சிறைப் பிடிக்கப்பட்டனர்.
பொலிசாருக்குத் தகவல்
இது குறித்து, ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும், பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாகப் பொலிசார் மற்றும் துணை இராணுவப்படையினர் பன்ஸ்தாலா காட்டுக்கு விரைந்தனர். அப்போது நடந்த தேடுதல் வேட்டையில், தண்டவாளத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.
இதற்கிடையே, ரயில் சாரதிகள் கடத்தல் குறித்து, 'பொலிஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் அமைப்பி'ன் புதிய தலைவர் சந்தோஷ் பத்ரா சில நிபந்தனைகளை விதித்தார்.
"ரயில் சாரதிகளை நாங்கள் கடத்தவில்லை. `பந்த்' அழைப்பை மீறி ரயிலை ஓட்டி வந்ததால், எங்களுடன் அழைத்து வைத்திருக்கிறோம். அவர்களுக்கோ, ரயில் பயணிகளுக்கோ நாங்கள் எதிரானவர்கள் அல்லர். விரைவில் விடுதலை செய்து விடுவோம். எங்களுடைய தலைவர் மகோதாவை விடுவிப்பது உட்பட 22 அம்ச கோரிக்கைகள் உள்ளன.
மேற்கு வங்காள மாநில அரசு அதிகாரிகள் அல்லது ரயில்வே மந்திரி மம்தா பானர்ஜி இங்கு வந்து எங்களுடைய மக்களின் நிலைமையைப் பார்க்க வேண்டும். அவ்வாறு வந்தால் ரயில் சாரதிகளை விடுதலை செய்து விடுவோம்."
இவ்வாறு சந்தோஷ் தெரிவித்தார்.
அதே நேரத்தில், ரயில் டிரைவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று மாவோயிஸ்ட்டுகள் அறிவித்தனர்.
அதே நேரத்தில், மேற்கு வங்காள முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யாவை உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தொடர்பு கொண்டு ரயில் கடத்தல் பற்றிய தகவல்களை கேட்டார். மாநில உள்துறை செயலாளர் மற்றும் பொலிஸ் டி.ஜி.பி. ஆகியோரை மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து விசாரித்தார்.
மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கை குறித்து கொல்கத்தாவில் பேட்டியளித்த முதல்-மந்திரி புத்ததேவ்,
"மாவோயிஸ்ட் ஆதரவுடன் செயல்படும் மக்கள் அமைப்புத் தலைவர் மகோதாவை விடுதலை செய்யும் பேச்சுக்கே இடமில்லை" என்றார்.
இராணுவத்துக்கு உத்தரவு
இந்நிலையில், ரயில் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு செல்லுமாறு மத்திய துணை இராணுவப் படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மேற்கு வங்காள மாநிலம் மேற்கு மிட்னாபுர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள அத்தனை படைகளும் தேடுதல் வேட்டைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.
மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் பொலிஸ் உள்ளிட்ட துணை இராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாவோயிஸ்ட்டுகளுடன் துப்பாக்கிச் சமர் நடந்தது.
எனினும், கூடுதலாக துணை இராணுவப்படையினர் வருவதை பார்த்ததும், இரவு 7.00 மணியளவில் ரயில் சாரதிகளை விடுதலை செய்துவிட்டு மாவோயிஸ்ட்டுகள் தப்பி ஓடி விட்டனர்.
சுமார் 5 மணி நேரமாக நீடித்த ரயில் கடத்தல் முடிவுக்கு வந்தது. பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
0 Response to "ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டு 5 மணிநேரத்தின் பின் மீட்பு"
แสดงความคิดเห็น