நலன்புரி முகாம்களிலுள்ள தமிழ் மக்களை விடுவிப்பதுடன் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக் குடியேற்ற வேண்டும்
இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விடுதலை செய்வது குறித்தும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூட்டாக அறிக்கையொன்றை விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவரும் சிரேஷ்ட உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று கேசரிக்குத் தெரிவித்தார். இதேவேளை, தமிழ், முஸ்லிம் கட்சிகள் 5 ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. அதில் நாட்டில் இடம்பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அரசமைப்புக்கு முரணாக சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறி பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் ஆர். சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் மனோ கணேசன், அகில இலங்கை தமிழ் ஐக்கிய முன்னணி சார்பில் கே.விக்னேஸ்வரன் ஆகியோர் ஒப்பமிட்டு இவ்வறிக்கையில் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார். * வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். * வடக்கிற்கும் கிழக்கிற்கும் சில பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் நடமாடும் சுதந்திரத்துக்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டும். * வட மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு உடனடி இயல்பு வாழ்க்கை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பன வலியுறுத்தப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து தமிழ் பேசும் மக்கள் பல தசாப்த காலமாக கொடுந் துயரை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் இனப்பாகுபாட்டையும், வன்முறையையும், இனச் சுத்திகரிப்பையும் எதிர்கொள்கின்றனர். 1983 இல் இடம்பெற்ற இனப் படுகொலையின்போது, அரசாங்கத்தின் ஒரு பகுதியினரும் அதில் ஈடுபட்டிருந்தனர். இனப்படுகொலைகளாலும் கடந்த 34 வருட கால இலங்கை இனரீதியான உள்நாட்டு யுத்தத்தாலும் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் ஏனையோரும் இன்னும் நாட்டின் ஏனைய பகுதி மக்களும் கூட பலியெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழ் மக்கள் இத்தகைய துன்பங்களால் பெருமளவு சலிப்படைந்துள்ளனர். போரின் இறுதிக் கட்டத்தில் வன்னி மக்கள் எல்லையற்ற துன்பத்தை அனுபவித்துள்ளனர். போர் முடிவடைந்துள்ள இந்த நிலையிலும்கூட அவர்களுடைய துன்பம் இன்னும் தீர வில்லை. நாட்டில் எங்கும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மரண அச்சுறுத்தல்கள், பொது மக்கள் படுகொலைகள், ஊடகவியலாளர்களும் ஏனையோரும் காணமற் போதல் என்பவற்றுக்கு மத்தியிலும் நாம் இந்த இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாக உடனடியாகவும் கூட்டாகவும், முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டுமென கருதுகின்றோம்.
இதன் கீழ் ஒப்பமிட்டுள்ள நாம் அனைவரும் சகித்துக் கொள்ள முடியாத இந்நிலைமையினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். நாட்டிலுள்ள இடம்பெயர்ந்த இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் அரசியலமைப்புக்கு முரணாக சர்வதேச சட்டங்களை மீறி பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என்று சுட்டுக் காட்ட விரும்புகின்றோம். இம்மக்கள் உடனடியாக அம்முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அத்தோடு அவர்கள் தங்களது பாரம்பரிய தொழில்களான விவசாயம் மற்றும் மீன்பிடி போன்றவற்றில் ஈடுபட எத்தகைய தடையுமின்றி அனுமதிக்க வேண்டும். அல்லது அவர்கள் தமது உறவினர் நண்பர்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும், அல்லது அவர்கள் தமது சட்டபூர்வமான உரிமையைப் பயன்படுத்தி தாங்கள் விரும்பிய இடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இவர்களில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர்கள் எதுவித தாமதமுமின்றி நீதிமன்றம் முன் நிறுத்தப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த முகாம்களுக்கு உறவினர்கள், மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர், ஐ.நா. நிறுவன பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு கடந்த இரண்டு தசாப்தங்களாக கடும் துன்பங்களை எதிர்கொண்டுவரும் முஸ்லிம் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவதோடு, அங்கு அவர்கள் தமது பொருளாதார, சமூக வாழ்வை எவ்வித இடையூறுமின்றி வாழ வழி செய்ய வேண்டும்.அதேபோன்று கிழக்கிலும் இடம்பெயர்ந்து கடும் துயரை அனுபவிக்கும் மக்களையும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வடக்கிற்கும் கிழக்கின் சிலபகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் நடமாடும் சுதந்திரத்துக்கான கட்டுப்பாடு தளர்த்தப்படல் வேண்டும். குறிப்பாக, வட மாகாணத்தில் அடிப்படை உரிமை மீறல் நடவடிக்கைகள் விலக்கப்படல் வேண்டும்.
வட மாகாணத்தில் பல பகுதிகளிலும் ஊரடங்குச் சட்டமும் பல்வேறு கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படுவது நியாயப்படுத்தப்பட முடியாதவைகளாகும். இதனால், அங்கு எவ்வித தாமதமுமின்றி உடனடியாக இயல்பு வாழ்க்கை ஏற்படுத்தப்படல் வேண்டும். நாட்டில் சில பகுதிகளில் வாழும் மக்கள் இன்னமும் அச்சத்துடனேயே உள்ளார்கள். அவசரமான விடயங்களுக்குக்கூட அவர்கள் செல்வதில்லை. இதனால், சமூக செயற்பாடுகள் தொடர்பான பணிகள் தடைப்பட்டுள்ளன. மேலும் இராணுவ நிர்வாகம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், தளர்த்தப்பட வேண்டும். சமூக, பொருளாதார, இயல்புவாழ்வு மீளத் திரும்பும் வகையில் சிவில் நிர்வாகம் சீரமைக்கப்படல் வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "நலன்புரி முகாம்களிலுள்ள தமிழ் மக்களை விடுவிப்பதுடன் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக் குடியேற்ற வேண்டும்"
แสดงความคิดเห็น