இந்தோனேசிய பூகம்பம் :
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள பதாங் நகரில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து நாசமாயின.
ஒட்டுமொத்த நகரமே தரைமட்டமாகி விட்டதைப் போல் எங்கு பார்த்தாலும் கட்டிட இடிபாடுகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இந்த பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டி விட்டது. மேலும் ஏராளமான பேர் காயம் அடைந்துள்ளனர்.
இடிபாடுகளுக்குள் ஏராளமான பிணங்கள் கிடக்கின்றன. எனவே பிணங்களை முழுமையாக அகற்றிய பின்னர்தான் சரியான இறப்பு எண்ணிக்கை தெரியவருமெனக் கூறப்படுகின்றது.
குடி தண்ணீர், உணவு, பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்கள் சரிவர கிடைக்காததால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, பதாங் நகரில் மீட்புப்பணிகள் முழு அளவில் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளும் உதவி செய்ய முன்வந்து உள்ளன.
மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளை அகற்றிய பிணங்களை அப்புறப்படுத்துவதோடு, யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்றும் தேடி வருகிறார்கள்.
மாணவி உயிருடன் மீட்பு
பதாங் நகரில், இடிந்து விழுந்த ஒரு பள்ளிக்கூட கட்டிடத்தின் இடிபாடுகளை மீட்புக்குழுவினர் அகற்றிய போது ஒரு பெண்ணின் குரல் லேசாக கேட்டது. இதனால் உஷாரான அவர்கள் இடிபாடுகளை மெதுவாக அகற்றி உள்ளே சிக்கி இருந்த சாரி என்ற 21 வயது மாணவியை மீட்டனர்.
மிகவும் தாகமாகவும், பசியாவும் இருப்பதாக சாரி கூறியதை தொடர்ந்து அவருக்கு உடனடியாக பால் கொடுக்கப்பட்டது. அவர் மீட்கப்பட்டதும் அங்கு திரண்டு இருந்தவர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மிகவும் சோர்வாக இருந்த அந்த மாணவி சாரி உடனடியாக அம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இடிபாடுகளுக்குள் இருந்து 40 மணி நேரத்திற்கு பின் அந்த மாணவி உயிருடன் மீட்கப்பட்டு இருக்கிறார்.
பள்ளிக்கூட கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக தெரிய வந்து உள்ளது. அவர்களையும் பத்திரமாக மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமோவ் தீவுகள்
இதேபோல் பசிபிக் பெருங்கடலில் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்கன் சமோவ் மற்றும் தோங்கா தீவுகளில் மும்முரமாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுனாமி தாக்குதலில் நாசமான பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். மீட்கப்பட்ட உடல்களை ஒரே இடத்தில் ஒட்டு மொத்தமாக புதைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
அமெரிக்கன் சமோவ் தீவுக்கு விமானப்படை சரக்கு விமானத்தில் 20 தொன் நிவாரண பொருட்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது.
மீண்டும் பூமி அதிர்ச்சி
இந்த நிலையில் சமோவ் மற்றும் தோங்கா தீவுகள் அருகே நேற்று மீண்டும் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. நடுக்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சி ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. என்றாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
இந்த பூகம்பத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக உடனடித் தகவல் எதுவும் இல்லை.
0 Response to "இந்தோனேசிய பூகம்பம் :"
แสดงความคิดเห็น