தனக்குத் தானே விருது அளித்துக் கொள்ளும் கருணாநிதி - ஜெ.
யாருமே கேட்டிராத, ஓசையற்ற “உளியின் ஓசை” படத்திற்கு உரையாடல் எழுதியதற்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருதை வழங்கும் இடத்தில் இருக்கும் ஒரு மாநில முதல்வரே, தனது தலைமையிலான அரசு வழங்கும் விருதை பெற்றுக் கொள்வது மரபு மீறிய செயல் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிறரை வற்புறுத்தி தனக்கு பாராட்டு விழா எடுக்கச் சொல்வது; துதிபாடிகள் மத்தியில் உலா வருவது தன்னையும், தன் குடும்ப உறுப்பினர்களையும் புகழ் பாடுபவர்களை வைத்து பட்டிமன்றம் நடத்தச் சொல்லி புளகாங்கிதம் அடைவது; தனக்குத் தானே விருதுகளை அளித்துக் கொள்வது ஆகியவற்றை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர் திமுக அரசின் முதல்வர் கருணாநிதி. இதை தன்னுடைய பல நடவடிக்கைகளின் மூலம் நிரூபித்து இருக்கிறார்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, அண்ணாவின் உருவம் பொறித்த ஐந்து ரூபாய் நாணயம் வெளியிடப்பட்ட போது கூட, அண்ணாவின் படத்தை விட கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரின் பதாகைகள் தான் வழிநெடுகிலும் காணப்பட்டன.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி நடைபெற்ற பட்டிமன்றத்திலும் சரி, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவிலும் சரி, அண்ணாவின் கொள்கைகளையும், பெருமைகளையும், புகழையும் போற்றுவதற்கு பதிலாக, கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் மனம் குளிர வைக்கும் பேச்சுக்கள் தான் ஓங்கி ஒலித்தன.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவா? அல்லது கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் குளிர வைக்கும் விழாவா? என்று மக்கள் சந்தேகிக்கும் அளவுக்கு நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.
இது போதாது என்று திமுக சார்பில் வழங்கப்படும் 2009ம் ஆண்டுக்கான அண்ணா விருதையும் தனக்குத் தானே கருணாநிதி பெற்றுக் கொண்டார். ஏற்கனவே 2008ம் ஆண்டுக்கான பெரியார் விருதை கருணாநிதி பெற்றுக் கொண்டதும் தன் பெயரிலான விருதை தனது மகனுக்கு கொடுத்து மகிழ்ந்ததையும் அனைவரும் நன்கு அறிவர். கருணாநிதி குடும்பம் தான் திமுக என்று ஆகிவிட்ட நிலையில் விருதுகள் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அளிக்கப்படுவதில் வியப்பு ஏதுமில்லை!.
கட்சி சார்பில் வழங்கப்பட்ட விருதுகள் போதாது என்று தமிழக அரசின் விருதையும் தனக்குத் தானே பெற்றுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி!.
அதாவது தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் திரைப்பட விருதும் இந்த ஆண்டு முதல்வர் கருணாநிதிக்கே வழங்கப்பட்டிருக்கிறது.
யாருமே கேட்டிராத, ஓசையற்ற “உளியின் ஓசை” படத்திற்கு உரையாடல் எழுதியதற்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
விருதை வழங்கும் இடத்தில் இருக்கும் ஒரு மாநில முதலமைச்சரே தனது தலைமையிலான மாநில அரசு வழங்கும் விருதைப் பெற்றுக் கொள்வது மரபு மீறிய செயல்!. உலகத்திலேயே இதுவரை யாரும் கடைபிடித்திராத நடைமுறை!. முறையற்ற செயல்!. இதைவிட வெட்கக்கேடான செயல் எதுவும் இருக்க முடியாது.
இந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதை தனக்கு பெற்றுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி! அடுத்த ஆண்டு தன்னுடைய ஆட்சியின் கடைசி ஆண்டு என்பதால் தனது மகன், மகள், பேரன், பேத்திகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் திரைப் படங்களில் ஏதாவது ஒரு துறையில் நுழைத்து, அவர்கள் பெரிய சாதனை புரிந்ததாக விளம்பரப்படுத்தி, அவர்களுக்கும் விருதுகளை பெற்றுக்கொடுத்து விடுவார்!.
அடுத்த ஆண்டு பாதி விருதுகள் கருணாநிதி குடும்பத்திற்குத் தான்!. விருதுகள் வழங்குவதில் கூட அரசியல் தலையீடு இருக்கிறது என்பதை கருணாநிதி தன்னுடைய நடவடிக்கையின் மூலம் நிரூபித்து இருக்கிறார்.
கடுமையான மின் வெட்டு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, தினம் கொலை, கொள்ளை, மணல் கொள்ளை, அரிசி கடத்தல் ஆகியவற்றை நிகழ்த்திக் கொண்டிருப்பதற்காக கருணாநிதிக்கு உலகச் சாதனையாளர் விருது வேறு!.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை விட ஒரு நடுநிலையான அமைப்பு இந்தியாவில் எதுவும் கிடையாது.
அப்படிப்பட்ட நீதிமன்றங்களிடம் இருந்தே பல ‘சான்றிதழ்களை’ பெற்றவர் கருணாநிதி! உள்ளாட்சித் தேர்தலை நடத்தி சாதனை புரிந்ததற்கு ‘சான்றிதழ்’, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை வேடிக்கைப் பார்த்து சாதனை புரிந்ததற்கு ‘சான்றிதழ்’, நீதிமன்றத்திற்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், பொது மக்களையும் தாக்கியதற்கு ‘சான்றிதழ்’, பந்த் நடத்தியதற்காக ‘சான்றிதழ்’ என பல ‘சான்றிதழ்களை’ அடுக்கிக் கொண்டே போகலாம்.
எல்லாவற்றிலும் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பங்கு வேண்டும் என்ற சுயநலப் போக்கை கடை பிடிக்காமல், நதி நீர்ப் பிரச்சனைகள், விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, கடுமையான மின்சார வெட்டு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தினசரி தாக்குதல் ஆகியவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தி, தமிழர்களின் துயர்களை துடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மைனாரிட்டி திமுக அரசின் முதல்வர் கருணாநிதி யை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
0 Response to "தனக்குத் தானே விருது அளித்துக் கொள்ளும் கருணாநிதி - ஜெ."
แสดงความคิดเห็น