வட.கிழ.பல்கலைக்கழகங்கள் விரைவில் அபிவிருத்தி : பல்கலை.மானிய ஆணைக்குழுத் தலைவர்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழக வளாகங்களும் முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக வவுனியாவில் உரையாற்றிய பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் எஸ்.வி.டி.ஜி.சமரநாயக்க தெரிவித்தார்.
வவுனியா றோயல் காடன் மண்டபத்தில் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டுக்கான யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் வருடாந்த ஆய்வு அமர்வின் ஆரம்ப வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
வவுனியா வளாக முதல்வர் ஆர்.நந்தகுமாரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் ஹேலிஸ் அக்ரோ நிறுவனம், பொஸ்டோ என்ற தொண்டர் நிறுவனம் வவுனியா வர்த்தகர் சங்கம் ஆகியன நிதி அனுசரணை வழங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
"பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நிதியை அரசாங்கம் ஒப்பீட்டளவில் முழுமையாகத் தந்து உதவுகின்றது. ஆனால் அவற்றுக்குத் தேவையான முதலீட்டு நிதியினைப் பெறுவதில் கால தாமதமும் சிக்கல்களும் ஏற்படுகின்றன.
இதற்கு நாட்டின் பொதுவான நிதி நிலைமையே காரணமாகும்.
இருப்பினும் சிரமங்களுக்கு மத்தியிலும் பல்கலைக்கழகங்களின் மேம்பாட்டுக்கான நிதியை எம்மால் இயன்ற வகையில் நாங்கள் வழங்கி வருகின்றோம்.
பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான அனைத்து முதலீட்டு நிதியையும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் இருந்து எதிர்பார்க்கக்கூடாது. முழு அளவிலான நிதியை இவ்வாறு வழங்கும் நிலையில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இல்லை.
அனைத்துப் பல்கலைக் கழகங்களும் சமமே
எம்மைப்பொறுத்த வரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களையும், வளாகங்களையும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளவற்றைப் போன்றே நாங்கள் கருதுகின்றோம்.
ஏனைய பல்கலைக்கழகங்கள், வளாகங்களைப் போல இவையும் முன்னேற வேண்டும் அபிவிருத்தியடைய வேண்டும் என்பதில் நாங்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றோம்.
அடுத்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கான திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது, இந்த நிதியுதவியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல்கலைக்கழகங்கள், வளாகங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதென அனைத்துத் தரப்பினராலும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
சற்ஸ்கோர் புள்ளி அடிப்படையிலேயே மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுகின்றார்கள். இந்தத் தெரிவில் மாணவர்களின் தனிப்பட்ட நிலைமைகள் கருத்திற் கொள்ளப்படுவதில்லை.
ஆகவே பல்கலைக்கழக மாணவர்களைத் தரமுள்ளவர்களாக தகுதியானவர்களாக சமூகத்திற்கு வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவே பல்கலைக்கழகங்கள் செயற்பட்டு வருகின்றன. எனவே, நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், வளாகங்களையும் சமமான முறையில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்" என்றார்.
இந்த வைபவத்தில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கம், வவுனியா வளாக முன்னாள் முதல்வர் பேராசிரியர் என்.பாலகிருஷ்ணன் உட்பட பல அறிஞர்கள், துறைசார்ந்த கல்வியியலாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
'நிலையான அபிவிருத்திக்கான வள முகாமைத்துவ மூலோபாயங்கள்' என்ற தொனியிலான இந்த ஆய்வரங்கிற்கு சமர்ப்பிக்கப்பட்ட 58 ஆய்வுக் கட்டுரைகள் வெவ்வேறு அமர்வுகளில் ஆய்வு செய்யப்பட்டன.
கடந்த 2008 ஆம் ஆண்டுக்கான வவுனியா வளாக ஆய்வு அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் சிறந்தவை என அறிஞர்களினால் தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள் அடங்கிய வெளியீடு ஒன்றும் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.
அதே போன்று இந்த வருடம் இந்த ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகள் சார்ந்த கட்டுரைகளில் சிறந்தவையென தெரிவு செய்யப்படும் கட்டுரைகள் அடங்கிய வெளியீடு அடுத்த வருடத்திற்கான ஆய்வரங்க அமர்வில் வெளியிடப்படும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.







0 Response to "வட.கிழ.பல்கலைக்கழகங்கள் விரைவில் அபிவிருத்தி : பல்கலை.மானிய ஆணைக்குழுத் தலைவர்"
แสดงความคิดเห็น