சாம்பலுக்குள் கனன்று கொண்டிருக்கும் சண்டை.. அதுதான், கிழக்கிலே அமைச்சர் கருணா- முதலமைச்சர் பிள்ளையான் சண்டை.. (செய்திக் கட்டுரை)

இலங்கைத் தீவிலே மூன்று சகாப்தகாலமாக முழுக்கொடூரம் நடத்தி வந்த புலிகள் இயக்கத்தின் போராட்டம் முடிவுக்கு வருவதற்கு முழுக்காரணமாக அமைந்தது, அரசின் திறமையோ, கோத்தாபயவின் கோட்பாடோ, பொன்சேகாவின் பொன் திட்டமோ, படையினரின் பலமோ, திரிபு இராணுவத்தின் தியாகமோ என்று எதுவுமே கிடையாது. இந்த போரின் போது இராணுவத்தினர் வெற்றி பெற்றார்கள் என்பதிலும் பார்க்க, புலிகள் இயக்கத்தினர் தோற்றுப் போனார்கள் என்பதே ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையாகும். இலங்கை இராணுவத்தினரின் சமாகால பலம் அதிகரிக்கப்பட்டிருந்ததாக சகலரும் கூறிக் கொண்டிருந்தாலும் கூட, உண்மையில் இலங்கை இராணுவத்தினரின் தற்கால பலம் கருணா புலிகள் இயக்கத்தில் இருந்த போது இருந்த பலமாகவே இருந்திருந்தாலும் கூட இலங்கை இராணுவத்தினர் புலிகள் இயக்கத்தினை வீழ்த்தியே இருப்பார்கள் என்பதே உண்மை. ஏனெனில் புலிகள் இயக்கத்திலிருந்து, கருணா பிரிந்து சென்றது முதலே புலிகளியக்கத்தின் பலம் சரிபாதியாக சரிவுற்றிருந்தது. அதுமட்டுமன்றி, பிரிந்து சென்ற கருணா தலைமையிலான கிழக்குப் போராளிகள் (பிள்ளையான் உட்பட) தம்பாட்டில் இருக்கவில்லை.
மாறாக அவர்களும் “தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்” என்னும் அமைப்பை நிறுவி, செயற்படுத்தி, கிழக்குப் பிரதேசத்தையும் வசப்படுத்தி வைத்திருந்தமையால், பாதியாகவிருந்த புலிகளின் பலம் மேலும் சரிவுற்று கால்வாசியாகவே ஆகியிருந்தது என்றே கூறவேண்டும். இப்படி இப்படியாக அரைவாசியாகவும், கால்வாசியாகவும் சரிவடைந்த புலிகளின் தோல்வியில் வியப்பொன்றுமில்லை. இப்படியாக புலிகளின் போராட்டம் இன்றைய நிலைமையில் கைநழுவிப்போய் கால்வாரி விடப்பட்ட பங்கில் கருணாவைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பங்கு முக்கியமானதே என்றால் அது மிகையல்ல.
பிரபாகரன் பிரதேசவாதம் கொண்டவர் என்று கூறி பிரிந்து வந்து கருணாவினால் உருவாக்கப்பட்ட இந்த “தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்” அமைப்பே புலிகளுக்கெதிரான தற்காப்பு போராளிக் குழுவாக இருந்து பின்னர், கருணாவிற்கே ஆப்புக்கொடுத்து, பிள்ளையான் தலைமையில் “தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்” கட்சியானமையும் பிள்ளையான் முதலமைச்சரானமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே, தற்போது கருணாவினாலும், பாரதியினாலும் முதலமைச்சர் பிள்ளையானுக்கு எதிராக பிரதேசவாதம் பேசப்படுவதாகவும், பாகுபாடு பார்க்கப்படுவதாகவும் அறியக் கிடைத்துள்ளது. பத்திரிகைகளிலும், ஏனைய ஊடகங்களிலும் பேசுபொருளாக இருந்து வந்த இவர்கள் தற்போது கிழக்குப் பிரதேச மக்களிடத்தில் தினம் தினம் பேசுபொருளாக மாறியிருக்கின்ற நிலைமை தோன்றியிருக்கின்றது. இதற்கு காரணம் அவர்களது பதவிகளன்று மாறாக அவர்களது பிரதேசவாத மனப்பாங்கும், அவர்களுக்குள் மூழும் சண்டை சச்சரவுகளுமே ஆகும்.
கருணாவும், பிள்ளையானும், பாரதியும் அவர்கள் அவர்களாகவே இருந்தபோது இருந்த பிரச்சினையிலும் பார்க்க, கருணா அமைச்சராகி விநாயகமூர்த்தி முரளீதரனாக்கப்பட்ட போதும், பிள்ளையான் முதலமைச்சராகி சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆனபோதும், பாரதி ஜனாதிபதியின் இணைப்பாளராகி இனியபாரதி புஸ்பகுமார் ஆனபோதும் எழுந்துள்ள பிரச்சினைகள் எதிர்கால பதவி மோகங்கள் குறித்தனவாகவே தெரிகின்றன.
அந்த வகையிலேயே, தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் இடையில் பிணக்குகள் தோன்றி வருகின்றன. இதற்கு இணைப்பாளரே இறுமாப்பாக பொறுப்பேற்றுமிருக்கிறார் எனவும் தெரிய வருகின்றது. தமிழரெனப் பார்க்காமல் பிரதேசம் பார்த்தார் என்று கூறிப் பிரிந்து வந்தவர்களுக்குள்ளும் பிரதேசவாதம் வளர்ந்துள்ளது வியப்பைத் தருவதாக இருக்கின்றது.
கொஞ்சக்காலம் மேலோங்கியிருந்த கருணா- பிள்ளையான் பிரச்சினை, சிறிது காலம் சாம்பலுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பாகவிருந்தது. அதுவே தற்போது மீண்டும் பிராணவாயு பெற்று, மீண்டும் விரைவாக எரியக்கூடிய நிலைமையினை எட்டிக் கொண்டிருப்பதாக தெரிய வருகின்றது. இதனால், கிழக்கின் அம்பாறைப் பிரதேச மக்களிடத்தே ஒருவித அச்சஉணர்வு தோன்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த ஆரம்ப காலம் முதலே கிழக்குப் பிராந்தியத்தினை மையப்படுத்தி தனது ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதற்கு எண்ணியிருந்த கருணாவிற்கு, கிழக்கு மாகாண சபையினைக் கைப்பற்றியதன் மூலம் கிழக்கின் முதலமைச்சராகி, கிழக்கு மாகாணம் முழுவதுமே அதிகார ஆதிக்கத்துடன் வலம்வரும் பிள்ளையானின் பரிணாமம் உறுத்துவதாக இருக்கின்றது போலும். இருந்த போதும் இவர்கள் நேரடியாக தமது மோதல்களை மேற்கொள்ளாது. தங்கள் ஆதரவாளர்கள் சகிதமே மோதிக்கொள்வதாக அறியக் கிடைத்துள்ளது. இந்தப் பின்னணியில் இவர்கள் ஆதரவாளர்கள் தரப்பில் முறுகல் நிலை ஏற்பட்டு சட்டத்தின் முன்னிலையில் நீதிமன்றம் வரை ஆஜராகவேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
இவர்களது இப்பிரச்சினைகளுக்கு மீளுயிர் அளித்த சம்பவமாக சில வாரங்களுக்கு முன் நடந்த தாக்குதல் சம்பவம் அமைந்திருக்கின்றது. அதுவாவது, பாரதியின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற திருக்கோவில் பிரதேசத்திலுள்ள சகலகலா அம்மன் ஆலய வளாகத்தில் வைத்து, மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசசபை ரி.எம்.வீ.பி. உறுப்பினரான யோகேஸ்வரன் யோகநாதனும், அவரது சாரதியும் சடசடவென்ற தாக்குதல்களுக்கு உள்ளானதும், அவர்களது வாகனம் அடித்து நொறுக்கப்பட்டதும், யோகநாதனின் வசமிருந்த ஒரு இலட்சம் ரூபா கொள்ளையடிக்கப்பட்டதையும் குறிப்பிட முடிகிறது.
அதன் பின்னரே அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு திறக்கப்படவிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் அலுவலகம் முன்பாக, கருணாவின் ஆதரவாளர்களான இளைஞர்கள் சிலர் பெரும் ஆர்ப்பாட்டம் செய்தமையும், கலாட்டா புரிந்தமையும் அமைந்தது. (இதற்கு பாரதியே மறைமுகமான பொறுப்பாக இருந்ததாக தெரிய வருகிறது.) இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர் தங்களது முரளீதரன் அமைச்சரின் ஆதரவின் வெளிப்பாடாக, முதலமைச்சரின் அலுவலகத்தை திறக்கக் கூடாது என்பதற்காக தீக்குளிக்க மண்ணெண்ணெயை தமது உடல்களில் ஊற்றிக் கொண்டு எரியவைக்க முற்பட்ட ஆதரவுப் பரவசத்தையும் அறியமுடிந்தது.
இப்படி ஆரம்பித்த பிரச்சினைகள் இன்னும் முடியவில்லை. இவர்களின் நோக்கங்கள் என்னவென்று பார்க்குமிடத்து, கிழக்கில் அம்பாறைப் பிரதேசத்தின் கரையோரப் பிரதேசங்களில், குறிப்பாக குறிப்பிடுவதாயின் அக்கரைப்பற்று, தம்பிலுவில் பிரதேசம், திருக்கோயில் பிரதேசம், பொத்துவில் பிரதேசம் என்று பல பிரதேசங்களில் அமைச்சருக்கும்- முதலமைச்சருக்கும் ஆதிக்கப் போட்டி நிலவி வருகின்றது. இதனால் இப்பிரதேச மக்கள் யாருக்கு ஆதரவளிப்பது யாரிடம் அடிவாங்குவது என்று தெரியாது திணறிக் கொண்டிருக்கின்றார்கள். மக்களினது இந்தத் திணறுதல்களை நிறுத்துவதற்காக, கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் இந்நிகழ்வுகளை ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த வன்முறைகளின் பின்னணியில் இருப்பவரே அம்பாறை மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளர் பாரதி ஆகையினால், இந்த ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டு வரும் விடயம் எந்தளவிற்கு முன்னேற்றம் தருமோ என்ற ஐயங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கும் பாரதிக்கு எதிரான நீதிமன்ற உத்தரவுகள் உதாசீனப் படுத்தப்படுவதன் மூலமாக அறிய வந்திருக்கின்றது.
இதனை மையப்படுத்தியே, முதலமைச்சரின் அந்தரங்கச் செயலாளராகிய வீ.சத்தியசீலன் தெரிவித்துள்ள கருத்தையும் நோக்க வேண்டியதிருக்கின்றது. அதாவது, ~~தமிழ் மக்கள் விடுதலை முன்னணி கட்சியினராகிய நாங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்ட போதிலும், எங்கள் மீது இழைக்கப்படுகின்ற அநீதிகளை தட்டிக்கேட்பதற்கு, இவ்விலங்கைத் தீவில் யாருமில்லை போன்றே தெரிகின்றது. அமைச்சர் அதாவுல்லா முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்கி கொடுத்த 12 தொழிலாளர் நியமனங்களை நாங்கள் வறுமைக்கோட்டின் கீழே வாழுகின்ற தகுதியானவர்களுக்கு வழங்கியிருந்தோம். எனினும் ஜனாதிபதியின் இணைப்பாளராகிய பாரதி இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். இருந்த போதிலும் நாங்கள் அம்மக்களுக்கு அதனை வழங்கினோம். அதற்காக ஒருவர் சுடப்பட்டார். இவர்களைத் தொழிலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு பாரதி எச்சரிக்கையும் நிர்ப்பந்தமும் செய்கிறார். எதுவித நியாயங்களுக்கும் கட்டுப்படாது எங்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளையும், தாக்குதல்களையும் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டியது ஊடகங்களின் கடமையாகும். ஆனாலும், இவற்றை எந்தவொரு ஊடகங்களும் கருத்திற் கொள்வதாக இல்லை” என்று அவர் வேதனைப் பட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு தொழில் நியமனம் பெற்றுக்கொண்ட ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கும் இலக்காகினார். இவரைச் சூடுவதற்காக மூன்று பேர் வந்திருந்தனர். ஆனால், அவர்களில் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். மற்றய இருவரும் வெளியில் சுதந்திரமாக நடமாடித்திரிகின்றனர். இவர்கள் எந்நேரம் எவர்களைச் சுடுவார்கள் என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது” என்று அவர் மனம் நொந்து தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறு சுடுவதற்கு வந்த மூவருமே பாரதியின் கையாட்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து சகலகலா அம்மன் ஆலயத்தின் செயலாளராகவிருக்கின்ற ஏ.நேசதாசன் குறிப்பிடுகையில், “ஜனாதிபதியின் இணைப்பாளர் என்ற போர்வையில் முழுப்பிரதேசத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு பாரதி முயற்சித்து வருகின்றார். இவர்களைத் தவிர அம்பாறைப் பிரதேசத்தில் வேறெந்த கட்சியோ, தனிநபரோ தலைகாட்டக் கூடாது என்பதுவே கருணாவினதும், பாரதியினதும் நிலைப்பாடாக இருக்கின்றது. அதனாலேயே அம்பாறைப் பிரதேசங்களுக்கு செய்யப்படுகின்ற சேவைகளைக் கூட தடுக்கப் பார்க்கின்றனர்”. சுகலகலா அம்மன் ஆலய புணர் நிர்மாணத்திற்கென்று கொண்டு வரப்பட்ட பணமே ஏற்கனவே இவர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக இப்பிரதேசங்களில் ஜனநாயகம் மலர்ந்துள்ளதாக வெளிப்படையாக கூறப்படுகின்ற போதிலும், பல்வேறு சங்கதிகள் உள்ளுக்குள் மறைந்து வெளிவராது கிடப்பது வேதனைக்குரியதாகின்றது. அந்த வகையில் பல தடவைகள், பல்வேறு குற்றச்சாட்டுகளின் நிமித்தம் கருணாவின் கையாளும், ஜனாதிபதியின் இணைப்பாளருமாகிய இனியபாரதிக்கு கல்முனை நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டதையும், அதை அவர் உதாசீனம் செய்ததினால் பிடியாணை பிறப்பிக்கப் பட்டதையும் குறிப்பிட முடியும். ஆனால், அந்த பிடியாணை கூட அமுல்படுத்தப் படாது அமுங்கிக் கிடப்பதாகவே தெரிகின்றது. இந்நிலையிலேயே எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதியும் அவரைப் பிடித்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கின்றது. அதுவும் நிறைவேற்றப்படுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்பிரச்சினையின் மற்றைய பூதாகரங்களும் விரைவில் தொடர் பாகமாக அதிர்ந்து வந்து கொண்டிருக்கும் பார்த்திருங்கள் அதற்காக காத்திருங்கள்…
ஜனநாயகம் காப்போம்.. ஜனரஞ்சகம் பெறுவோம்..
திரு.செல்வபாரதி –மட்டுநகர்







0 Response to "சாம்பலுக்குள் கனன்று கொண்டிருக்கும் சண்டை.. அதுதான், கிழக்கிலே அமைச்சர் கருணா- முதலமைச்சர் பிள்ளையான் சண்டை.. (செய்திக் கட்டுரை)"
แสดงความคิดเห็น