இலங்கை படகு அகதிகளை ஏற்க அவுஸ்திரேலியா மறுப்பு இந்தோனேஷிய முகாமில் தடுத்துவைக்க முயற்சி
அவுஸ்திரேலிய சுங்கப் பிரிவினரால் காப்பாற்றப்பட்ட 78 அரசியல் புகலிடம் கோருவோரும் எக்காரணம்கொண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்துவரப்பட மாட்டார்கள் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
மேற்படி அரசியல் தஞ்சம் கோருவோர் அவுஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் இந்தோனேஷியா அவர்களை பொறுப்பேற்க மறுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் உள்ளது. அதற்கமைய கடற்பகுதியில் காப்பாற்றப்படும் மக்கள் இந்தோனேஷியாவுக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள். அதுவே தொடரும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் படகில் இருக்கும் இலங்கையர்கள் எந்த நாட்டுக்கு செல்வது என அவர்கள் விண்ணப்பிக்க முடியாது. எனினும் அவர்களுக்கு அந்த விண்ணப்பத்தை விடுக்க முற்றுமுழுதான உரிமை இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆழ்கடலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் என்பதால் அது அவர்களின் தெரிவாக முடியாது. கடந்த 10 தினங்களுககு முன்னர் மேற்படி 78 பேரும் இந்தோனேஷிய கடற்பகுதியில் வைத்து அவுஸ்திரேலியாவின் ஓசியானிக் விக்கிங் என்ற சுங்கப் பிரிவு கப்பலினால் மீட்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் இந்தோனேஷியாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அந்நாட்டு மாகாண ஆளுநர் இந்தோனேஷியா அகதிகளை குவிக்கும் நாடல்ல என தெரிவித்து அதற்கு மறுத்துள்ளார். இது தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவுஸ்திரேலியா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தோனேஷியாவில் உள்ள டஞ்சாங் பினாங் குடிவரவு தடுப்பு முகாமில் மேற்படி அகதிகளை தங்கவைக்கும் வகையில் அவுஸ்திரேலிய கப்பல் அங்குள்ள கடற்படை தளத்துக்கு செல்லக்கூடுமென இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குள் அகதிகள் வருவதை தடுக்கும் முகமாகவே இவ்வாறான கடும் போக்கை அந்நாடு கடைபிடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "இலங்கை படகு அகதிகளை ஏற்க அவுஸ்திரேலியா மறுப்பு இந்தோனேஷிய முகாமில் தடுத்துவைக்க முயற்சி"
แสดงความคิดเห็น