jkr

அமெரிக்காவின் அறிக்கையை ஆராய்வதற்கு ஜனாதிபதி ஒரு வாரத்திற்குள் குழு நியமிப்பார் -அமைச்சர் சமரசிங்க


அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் யுத்தக் குற்றம் தொடர்பில் எவ்விடத்திலேனும் குறிப்பிடப்படவில்லை என்பதுடன், அவ்வறிக்கை குறித்து ஆராய்ந்து அரசின் நிலைப்பாட்டை முன்வைப்பதற்காக ஜனாதிபதி ஒரு வாரத்திற்குள் குழுவொன்றை நியமிப்பார் என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இதேவேளை,

நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளையினால் முரணாக வெளியிடப்படும் அறிக்கையை தடுப்பதற்காக பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் இணைந்து விரைவில் நடவடிக்கையொன்று எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

இலங்கை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் காங்கிரஸுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் எவ்விடத்திலேனும் யுத்த குற்றம் தொடர்பில் குறிப்பிடவில்லை. அது ஜனவரி முதல் மே மாதம் வரையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பிலான அறிக்கையாகும் அவ்வறிக்கையின் மூலமாக சட்டரீதியிலான நடவடிக்கைகளுக்கு செல்லவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களில் உண்மைதன்மை தொடர்பில் நிரூபிப்பதற்கு எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை மனித உரிமைகள் ஆணையகம், பத்திரிகைகள், ஊடகங்களின் மூலமாக தூதுவராலயங்களினால் திரட்டப்பட்ட தகவல்களை மையமாக கொண்டே இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையை ஒவ்வொருவர் பல்வேறு வகையில் அர்த்தப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். யுத்த நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் கூறியுள்ளனர். அந்த அறிக்கையை அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் அறிக்கையல்ல என்பதுடன் அதில் இலங்கை மட்டுமல்லாது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,ஜோர்டன்ஸ், பேர்மா, மெக்ஸிகோ, வெஸ்பேன் உள்ளிட்ட பல நாடுகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் ஊடாக நிதியை ஒதுக்கிகொள்வதற்கே அறிக்கை கோரப்பட்டிருந்தது அந்த அறிக்கையை வேறு நிகழ்ச்சி நிரலுக்கு பயன்படுத்துவதற்கு பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனித உரிமை பேரவையில் காசா தொடர்பில் அறிக்கையிடுமாறு கோரப்பட்ட போது ஜெனிவா யோசனையை முன்வைத்தது. அந்த யோசனையை நியூயோர்க் ஊடாக பாதுகாப்பு சபைக்கு அனுப்பி யுத்த நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட அன்றை வாக்கெடுப்பில் யோசனைக்கு ஆதரவாக 26 வாக்குகளும் 11 நாடுகள் வாக்களிக்காத நிலையில் ஆறு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை மேலும் இரண்டொரு நாடுகள் வருகைதரவேயில்லை.

இவ்விடயத்தில் எவ்விதமான சட்ட ரீதியிலான முறைமைகளும் கையளப்படவில்லை உறுப்படுத்தக்கூடிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுடன் மனித உரிமை பேரவையின் உயுர்ஸ்தானிகர் நவனீதம் பிள்ளை முரணான வகையில் அறிக்கையிடுவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் நினைத்தப்படியெல்லாம் அறிக்கையிடுவதனை தடுக்கும் வகையில் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் .

பேரவையில் வேலைத்திட்டங்களை மீறி கூட்டங்களை நடத்தமுடியாது. அவ்வாறு நடத்தப்படும் விசேட கூட்டங்களை மனித உரிமை பேரவையில் உயர்ஸ்தானிகர் பாராட்டுவாராயின் அந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட அறிக்கையையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு ஒருவாரத்தில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் குழுவானது அவ்வறிக்கையை ஆராய்ந்து வழங்குகின்ற தகவல்களை கொண்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவிப்பார்.

இலங்கை மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் 99.9 வீதமான சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே பதிலளிக்கப்பட்டுவிட்டது வன்னியில் அன்று சுயாதீனமாக இயங்கமுடியாத நிலையில் வைத்தியர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் பொய்யென நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கையில்;

கே; அமைக்கப்படுகின்ற குழு அரசியல் குழுவா? சுயாதீனமான குழுவா? அதிகாரிகள் கொண்ட குழுவா?

ப; சுதந்திரமாக இயங்ககூடிய குழுவொன்றை ஜனாதிபதி நியமிப்பார் அதில் யார்? யார்? அங்கம் வகிப்பார்கள் என்பது தொடர்பில் எனக்கு தெரியாது.

கே; குற்றச்சாட்டுகளில் 99.9 வீதத்திற்கு பதிலளித்து விட்டார் குழு எதற்கு?

ப; ஜனநாயக நாட்டில் படைகளை யாராவது குற்றஞ்சாட்டுவார்களாயின் அவற்றுக்கு பதிலளிக்கவேண்டும் அதற்கான பொறுப்பு எம்மிடம் இருக்கின்றது அமெரிக்க அறிக்கையிடுகின்ற போது உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் என்பதனால் தான் அறிக்கையை ஆராய்வதற்கும் பதிலளிப்பதற்கு இவ்வாறான குழுவொன்று நியமிக்கப்படவிருக்கின்றது.

கே; நவனீதம்பிள்ளையின் அறிக்கையை தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள்?

ப; மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கின்ற நாடுகளுடன் கலந்தாலோசித்து விரைவில் முடிவொன்று எட்டப்படும் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அமெரிக்காவின் அறிக்கையை ஆராய்வதற்கு ஜனாதிபதி ஒரு வாரத்திற்குள் குழு நியமிப்பார் -அமைச்சர் சமரசிங்க"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates