படகை தீ வைத்து எரிக்கப்போவதாக இலங்கை அகதிகள் அச்சுறுத்தல்
இந்தோனேஷியாவில் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை படகு மக்கள் தாங்கள் கிறிஸ்மஸ் தீவுக்குச் செல்ல அனுமதிக்கப்படாத பட்சத்தில் தங்கள் படகை தீ வைத்து கொளுத்தப் போவதாக எச்சரித்துள்ளனர் என இந்தேõனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல அனுமதி கிட்டுமா? கிட்டாதா என்ற காரணத்தினால் ஆத்திரமடைந்துள்ள இவர்கள் தற்பொழுது தங்களுக்கு அனுமதி கிடைக்காது போனால் படகை கொளுத்துவதைத் தவிர வேறு வழி இல்லையென கூறியுள்ளதாக மனித உரிமை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிலிருந்தும், கிறிஸ்மஸ் தீவை நோக்கி 30 அடி நீளமான மரக் கப்பலொன்றில் இம்மாத ஆரம்பத்தில் சுமார் 260 அகதிகள் சென்று கொண்டிருந்த நிலையில் இந்தோனேஷிய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் அவர்களின் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், மெராக் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இவர்களுக்குத் தேவையான உணவுகள், மருந்து வகைகள் என்பன சர்வதேச அமைப்பொன்றினால் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, குறித்த படகு மக்கள் படகை கைவிட்டு தற்காலிக குடியிருப்புகளுக்கு வருவதற்கு சம்மதிப்பார்களேயாயின் அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுமென சட்ட மற்றும் மனித உரிமைகள் திணைக்களத்தின் அதிகாரி பொப்பி புடியஸ்வத்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, படகிலுள்ள பெரும்பாலானவர்கள் சுவாசித்தல் மற்றும் தோல் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் படகுக்குள் சனநெரிசல் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அகதிகள் இந்தோனேஷியா கடற்கரைப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் குறித்து இந்தோனேஷியாவே கவலை கொள்ள வேண்டுமென அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Response to "படகை தீ வைத்து எரிக்கப்போவதாக இலங்கை அகதிகள் அச்சுறுத்தல்"
แสดงความคิดเห็น