jkr

விதி


கவிஞர் கி.பாரதிதாசன்

துன்பம் உற்றோர் துவண்டு உரைப்பர்
நன்றே விதியால் நலிந்தோம் என்றே!
இன்பம் உற்றோர் ஏனோ விதியை
எண்ணிப் பார்த்தே ஏத்துதல் இல்லை!
மதியைக் கொண்டு வறுமை போக்கி
சதியை வெல்லல் விதியின் செயலே!
முன்னைப் பிறப்பில் முடித்த வினைகள்
மண்ணில் ஆன்மா மீண்டும் மலர்ந்தால்
ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்!

பாடி இனிமைப் படைக்கும் ஐயா
நல்லார் புரிந்த நன்னெறி வினைகள்!
பொல்லார் புரிந்த புன்மைச் செயலால்
வாடிக் கிடப்பர் வாழ்வை இழந்தே!
தேடிப் பணத்தைச் சேர்த்து மகிழச்
சிரித்துச் சிரித்துக் கொடுமை செய்தால்
அழுது அழுது அதனைக் கழிப்பர்!

போற்றும் வாழ்வைப் புவியில் பெறுதல்
ஆற்றும் தொண்டால் அமையும் என்பேன்!
காற்றும் கடலும் கதிரும் நிலவும்
ஊட்டும் நம்முள் ஒளிரும் பொதுமையை!
ஏனோ மாந்தர் இதனை எண்ணா
வானை வளைத்து வாழ நினைப்பர்!
தன்னலம் மறந்தால் மண்ணலம் ஓங்கும்!
பொன்னென உலகு பூத்துப் பொலியும்!

கடமை முடியக் கையூட்(டு) அளித்தல்
மடமை நாடி மயங்கிக் கிடத்தல்
நாளைய உலகை நாசம் செய்யும்
வேலை இவைகள்! விளையை ஏற்றிக்
கொள்ளைப் பயனைக் குவிக்கும் கூட்டம்?
எல்லை இல்லா தொல்லை கொடுத்தே
அரசியல் பெயரில் ஆடும் ஆட்டம்
நரகாய் நாட்டை நாட்டிச் சிரிக்கும்!
உண்மை நெறியை உலகில் கொன்று
நன்மை தேடும் நரிகள் அழிந்தால்
இன்பம் தழைக்கும்! இன்னல் தீரும்!
பொன்னும் பொருளும் மண்ணில் நிலையோ?
அப்பன் செய்த அழிவுகள் எல்லாம்
தப்பாது இங்கே தாக்கும் பிள்ளையை!
மலைபோல் சொத்து மண்டிக் கிடந்தும்
அலைபோல் நெஞ்சம் அலைதல் ஏனோ?
சொத்து! சொத்து!! என்றே நாட்டை
முற்றும் சுரண்டி மூட்டை கட்டிச்
சுற்றும் மனிதா! சுழலும் விதியால்
அற்றுப் போகும் அமைத்த வாழ்வே!
கண்ணில் பட்ட காட்சிகள் தம்மை
எண்ணிப் பார்த்தே எழுதினேன் கவியே!
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "விதி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates