செய்தியறிக்கை
சுனாமியின் அழிவுகள் |
"சமோவா சுனாமி - நிலமை மோசம்"
பசுபிக் தீவான சமோவாவில் சுனாமியால் தாக்கப்பட்ட பகுதிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அங்குள்ள செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
அங்கு மீண்டும் சுனாமி அலைத் தாக்குதல்களை ஏற்படுத்தக் கூடிய பூகம்பத்தின் பின்பான பல அதிர்வுகள் உணரப்படுவதாகவும் அது கூறுகின்றது.
குறைந்தது 100 பேர் அங்கு பலியாகியிருக்கிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் பலர் காயமடைந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை இழந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்களுக்காக செஞ்சிலுவைச் சங்கம் மூன்று முகாம்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இருந்து எவரும் தப்பியிருக்க முடியாது என்று தான் அஞ்சியதாக, குறைந்தது முப்பது பேர் பலியான அமெரிக்க சமோவாவின் ஆளுனர் தெரிவித்துள்ளார்.
இந்தோனீசிய நிலநடுக்கத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன
தொடரும் மீட்புப் பணிகள் |
படாங் நகரில் மருத்துவமனையொன்று அடங்கலாக பல கட்டடங்கள் அழிவடைந்துள்ள நிலையில் அவற்றில் சிக்கி 21 பேர்வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.
படாங் விமான நிலையத்தின் கூரைப்பகுதியொன்று இடிந்துவிழுந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளிலிருந்து நூற்றுக் கணக்கான கிலோமீற்றர்கள் தொலைவில் ஏற்பட்டுள்ள இந்த நில நடுக்கம் 7.6 ரிச்டர் அளவாக பதிவாகியுள்ளது.
பாலியல் வல்லுறவை போர் ஆயுதமாக வகைப்படுத்தி ஐ.நா தீர்மானம்
அகதிகள் கூடாரம் ஒன்று |
பாலியல் வன்முறையை போர் ஆயுதமாக வகைப்படுத்தும் ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
போர்க்காலங்களில் அவமானப்படுத்தவும், அச்சுறுத்தவும் மற்றும் பொதுமக்களை இடம்பெயர நிர்ப்பந்திக்கவும் பாலியல் வன்செயல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அங்கீகரிக்கும் தீர்மானம் ஒன்று கடந்த வருடம் கொண்டுவரப்பட்டதை அடுத்து தற்போது, இந்தத் தீர்மானம் வந்துள்ளது.
ஏனைய பல கோரிக்கைகளுடன், இந்த தீர்மானம், உலக நாடுகளை இவை குறித்த சர்வதேச சட்டங்களுக்கு ஒத்த வகையில் தமது சட்டங்களை உருவாக்கவும், பாலியல் வன்செயல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை புலன்விசாரணை செய்வதற்கான திறமைகளை பெறுவதற்கு ஏற்றவாறு சிப்பாய்களை ஆட்சேர்ப்புச் செய்து, பயிற்றுவிக்க வேண்டும் என்று கோருகிறது.
வர்த்தகத் துறையில் ஆன்லைன் விளம்பரங்களின் புதிய பரிணாமம்
இணையதள பயனாளிகள் |
விளம்பரத்துறை சார்ந்த நிறுவனமான த இண்டர்நெட் அட்வர்டைஸ்ட்டிங் பீரோ என்ற இணைய தள விளம்பர முகவர் அமைப்பே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
முன்னைய வருடங்களில் இதே காலப்பகுதியில் தொலைக்காட்சி ஊடகத்திலான விளம்பரங்களுக்காக செய்யப்பட்ட செலவீனத்தை விட முதற்தடவையாக இணையவழி விளம்பர துறையில் செய்யப்பட்ட செலவினம் அதிகரித்துள்ளமையை அந்த முகவர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இணையதளம் சார்ந்த வர்த்தகத் துறை அபிவிருத்தியில் எட்டப்பட்டுள்ள முக்கிய மைல்கல்லென இது கருதப்படுகின்றது.
செல்வந்த நாடுகளில் அதிகமான மக்கள் தகவல் பெற்றுக் கொளவதற்காகவும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் தொலைக்காட்சிகளை பார்ப்பதை விட இணையதளங்களிலேயே அதிகளவு நேரத்தை கழிக்கின்றனர் என்ற விடயத்துடன் இன்றைய இந்த விளம்பரத்துறை கொண்டுள்ள நெருங்கிய தொடர்பையே இது காட்டுகின்றது.
பிரிட்டனில் கடந்த ஆறுவருட காலத்தில் உற்பத்திப் பொருட்களை விளம்பரம் செய்வதில் மிக குறைந்தளவு பலனுள்ள ஊடகம் என்ற நிலையிலிருந்து மிக தாக்கமான செல்வாக்குள்ள விளம்பர ஊடகமாக இணையதளம் வளர்ச்சியடைந்துள்ளதாக இணைய தள விளம்பர முகவர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น