செய்தியரங்கம்
பிரம்மாண்ட உருவம் கொண்டவை சொரோபொட்ஸ் டைனோசர்கள் |
தமிழ்நாட்டில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு
தமிழ்நாட்டில் அரியலூர் அருகே உள்ள கிராமத்தில் கல்லாகிய நூற்றுக்கணக்கான டைனோசோர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆற்றுப் படுகை அருகே நிலவியல் விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தபோது, குவியல் குவியலான கல்லாகிய முட்டைகள் மண்ணாலான கூடுகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கல்லாகிய முட்டைகள் பார்ப்பதற்கு டினோசோர் முட்டைகள் போல இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவை ஆறு கோடியே ஐம்பது லட்சம் ஆண்டுகள் பழமையானவையாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொன்றும் ஒரு கால்பந்து அளவில் இருக்கின்ற இந்த முட்டைகள் சொரோபோட்ஸ் எனப்படும் கழுத்து நீண்ட தாவர உண்ணி டைனோசோர் வகையை சேர்ந்தவை என்று ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
டைனொசோர் இனம் ஏன் அழிந்தது என்பது பற்றி கூடுதல் விபரம் அறிய இக்கண்டுபிடிப்பு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
வவுனியா மருத்துவர் மீது புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
இலங்கையின் வடக்கே வவுனியா அரச பொது மருத்துவமனையில் பதில் வைத்திய நிபுணராகக் கடமையாற்றிவந்த டாக்டர் உமாகாந்த் என்பவர் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் கைது செய்யப்பட்டதை அரச வைத்தியர்கள் சங்கத்தின் வவுனியா கிளையினரும் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் இவர் என்ன காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.
வைத்திய நிபுணராகிய இவரை அவரது பதவி நிலைக்கு ஏற்ற வகையில் நடத்த வேண்டும் என்றும், அவர் அண்மையில் வெளிநாட்டுக்குத் தொழில் பயிற்சிக்காகச் செல்லவிருப்பதனால், அவரது தொழில் முன்னேற்றத்திற்குப் பாதகம் ஏற்படாத வகையில் அவர் மீதான விசாரணை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அரச வைத்தியர்கள் சங்கத்தின் வவுனியா கிளை கோரியிருக்கின்றது.
அவர் மீது குற்றம் இல்லாதிருப்பின் தாமதமின்றி அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ள அரச வைத்தியர்கள் சங்கத்தின் வவுனியா கிளையினர், இவரது கைது தொடர்பாக தமது தாய்ச் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கம்யூனிஸ ஆட்சியின் மணி விழா கொண்டாட்டங்கள்
தலைநகர் பீஜிங்கில் நடந்த பேரணியில், நீண்ட வரிசையில் யுத்த தாங்கிகளும், ஏவுகணைகளும் சிப்பாய்களும் அணிவகுத்துச் சென்றனர்.
பின்னதாக தியானமன் சதுக்கத்தில் கண்கவர் வாண வேடிக்கை மற்றும் தேசபக்த பாடல்கள், நடனங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அதேவேளை, திபத்தில் சீன ஆட்சிக்கு எதிராக இந்த தினத்தை முன்னிட்டு எதிர்ப்புக் காட்டிய 70 நாடுகடந்த திபெத்தியர்களை நேபாளத்தில் பொலிஸார் கைது செய்தனர்.
சீனாவில் கம்யூனிஸ ஆட்சியின் மணிவிழா கொண்டாட்டங்கள் குறித்து சீன சர்வதேச வானொலியின் தமிழ்ப் பிரிவைச் சேர்ந்த கலையரசி தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
பிரிட்டனில் உச்சநீதிமன்றம் நடைமுறைக்கு வருகிறது
பிரிட்டன் உச்சநீதிமன்ற சின்னம் |
நாட்டில் புதிதாக அமைக்கப்படுகின்ற உச்சநீதிமன்றத்துக்கான உறுப்பினர்கள் லண்டனில் இன்று பதவிப் பிரமானம் செய்துகொண்டுள்ளனர்.
கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகளாக பிரிட்டனின் உச்சநீதிமன்றமாக பரிணமித்துவந்த பிரபுக்கள் சபையின் நீதித்துறை செயற்பாடுகளும் அதிகாரங்களும் இனி முற்றுப் பெறும்.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் நீதிமன்ற நடைமுறைகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் நீதிமன்றம் இந்த புதிய உச்சநீதிமன்றமாகத்தான் இருக்கும்.
நீதித்துறையானது அரசாங்கத்தின் ஏனைய பிரிவுகளைச் சார்ந்தில்லாது சுயாதீனமாக விளங்க வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் சிவில் வழக்குகளைப் பொறுத்தவரை உச்சபட்ச மேன்முறையீட்டு நீதிமன்றமாக இனி இந்த புதிய உச்சநிதிமன்றம் திகழும். ஆனால் கிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை ஸ்காட்லாந்தில் வேறொரு மேன்முறையீட்டு கட்டமைப்பு செயல்படும்.
பிரிட்டனிலே பிரபுக்கள் சபை 1399ஆம் ஆண்டிலிருந்து ஏதோ ஒரு வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றமாக செயல்பட்டு வந்துள்ளது.
0 Response to "செய்தியரங்கம்"
แสดงความคิดเห็น