jkr

வவுனியாவில் கிராமப்புறப் பாடசாலை மாணவர்களும் முன்னணியில் திகழ்வது மகிழ்ச்சியளிக்கின்றது


வவுனியாவில் வசதிகள் கூடிய நகரப்பாடசாலைகளைப் போலவே, கிராமப்புறப் பாடசாலைகளும் கல்வியில் அக்கறையோடு செயற்பட்டு வருகின்றன. அண்மையில் வெளியாகிய பரீட்சை பெறுபேறுகள் இதனை வெளிப்படுத்தியிருக்கின்றன என்று வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி நா.மாணிக்கவாசகம் தெரிவித்துள்ளார்.

ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழிப்பிரிவில் இரண்டாமிடத்தைத் தட்டிக்கொண்டுள்ள வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் சச்சிதானந்தன் கெளரீசன் உட்பட மாவட்டத்தில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ள மாணவர்களைக் கெளரவித்து பணப்பரிசு வழங்கும் வைபவத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வர்த்தகர் சங்கத் தலைவர் பி.எஸ்.அப்துல்லா தலைமையில் வைபவம் நடைபெற்றது. அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

தேசிய ரீதியில் நடத்தப்படுகின்ற ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மிகவும் முக்கியமானது. இதனுடைய முக்கியத்துவம் கருதியே, இந்த பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்படுகின்றார்கள். இவ்வாறு அதிக புள்ளிகளைப் பெற்று இந்தப் பரீட்சையில் சித்தியடைகின்ற மாணவர்கள் சிறந்த பாடசாலைகளில் இணைந்து கல்விகற்பதற்கான வாய்ப்புக்களையும், வங்கிகள் உட்பட்ட ஏனைய பெரிய நிறுவனங்களின் அனுகூலங்களையும் அவர்கள் பெறக் கூடியதாக உள்ளது.

இந்தப் பரீட்சையில் திறமையோடு சித்தியடைந்ததுடன் கல்விக்கான முயற்சிகள் முடிவடைந்துவிடுவதில்லை. க.பொ.த சாதரரண தரப் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை என அடுத்தடுத்து முக்கியமான பரீட்சைகள் இருக்கின்றன. இவற்றிலும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுவதன் மூலம் மட்டுமே உயர்கல்வி கற்கும் வாய்ப்பிற்குத் தகுதி பெறுகின்றார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே ஆரம்ப கல்வியில் மட்டுமல்லாமல் தொடர்ந்தும் மாணவர்கள் தமது கல்வியில் முயற்சியுடன் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறுவதுடன், தமது பிரதேசத்திற்கும் பெருமையைப் பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் கலந்து கொண்ட ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் சி.கணேசபாதம் பேசுகையில், வவுனியா மாவட்ட மாணவன் ஒருவர் தேசிய மட்டத்தில் கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ள அதேவேளை, இந்த மாவட்டத்தி்ல் 31 பாடசாலைகளைச் சேர்ந்த 298 மாணவர்கள் 140க்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

அத்துடன் இந்த 31 பாடசாலைகளில் கப்பாச்சி அன்புபுரம், இலுப்பைக்குளம், சின்னச்சிப்பிகுளம், ஆண்டியாபுளியங்குளம், வீரபுரம், இயங்கராவூர், தாலிக்குளம், சிதம்பரபுரம், தாண்டிக்குளம், அண்ணாநகர் கந்தபுரம் போன்ற கிராமப்புறப் பாடசாலைகளில் இருந்தும் இம்முறை மாணவர்கள் ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருப்பது இந்த மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள முக்கியமான முன்னேற்றமாகும் என தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் முதல் மாணவனாகவும், தேசிய மட்டத்தில் தமிழ் மொழிப் பிரிவில் இரண்டாம் நிலையிலுமாக 191 புள்ளிகளைப் பெற்ற வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் சச்சிதானந்தம் கெளரீசனுக்கு வவுனியா வர்த்தகர் சங்கம் இந்த வைபவத்தில் 15 ஆயிரம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கி கெளரவித்துள்ளது.

187 புள்ளிக’ளுடன், மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி சிறிஸ்கந்தராசா அபிரரமி என்ற மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாவும், 181 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ள நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவன் சத்தியநாதன் புகழோனுக்கு 7500 ரூபாவும், 176 புள்ளிகளுடன் நான்காம் இடத்தைப் பெற்றுள்ள இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி தவராசா தனுசியாவுக்கு ஐயாயிரம் ரூபாவும், 175 சும் பாஸ்கரன் துஷாரகன், சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி் மாணவி வனராஜா மயூராங்கி, இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகளான கோடீஸ்வரன் கேசாம்பவி, சுரேஷ் டிலக்சியா ஆகிய நான்கு மாணவிகளுக்கும் தலா 2500 ரூபாவும் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்கள்.

மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ள பாடசாலைகளைக் கெளரவிக்கும் வகையில் வவுனியா வர்த்தக சங்கம் வெற்றிக்கிண்ணங்களை வழங்கியுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வவுனியாவில் கிராமப்புறப் பாடசாலை மாணவர்களும் முன்னணியில் திகழ்வது மகிழ்ச்சியளிக்கின்றது"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates