மீள்குடியேற்றம் தொடர்பில் ஐ.நா. செயலாளருக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்-அமைச்சர் சமரசிங்க
வவுனியா நலன்புரி முகாமில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்துக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள நலன்புரி முகாம்களில் இடம்பெறும் பாதுகாப்புடன் தொடர்புடைய அசம்பாவிதங்கள் தொடர்பில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலயம் கவலை வெளியிட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ. மூன் தெரிவித்துள்ளமை குறித்தும் அமைச்சர் சமரசிங்க கருத்து வெளியிட்டார். இவ்விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது
வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள நலன்புரி முகாம்களில் அண்மையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிகின்றது. இது தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை அரசாங்கம் நடத்திவருகின்றது. இந்த விடயம் குறித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலயம் கவலை வெளியிட்டுள்ளது. எனவே விசாரணை நடத்தப்படும் என்பதனை தெரிவிக்கின்றேன். இதேவேளை இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களை மீள்குடியேற்றும் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகள் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் கருத்து வெளியிட்டுள்ளார்.
பான் கீ. மூனுக்கு வழங்கியுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றோம். அதற்காக அர்ப்பணிப்புடன் வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றோம். ஆனால் இது உணர்வு பூர்வமான விவகாரம் என்பதனை ஐக்கிய நாடுகள் சபை புரிந்துகொள்ளவேண்டும். இதில் குறுக்கு வழிகள் இருக்க முடியாது. அனைத்து விடயங்களும் திட்டமிடப்பட்ட முறையில் இடம்பெறவேண்டும். எனவே எங்களுக்கு பல்வேறு யதார்த்த ரீதியான சிக்கல்கள் வரலாம். அவற்றைக் கடந்து இந்த மக்களை சகல வசதிகளுடனும் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
0 Response to "மீள்குடியேற்றம் தொடர்பில் ஐ.நா. செயலாளருக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்-அமைச்சர் சமரசிங்க"
แสดงความคิดเห็น