எங்கள் பிள்ளைகளின் காயங்களை ஆற்றுவோம்
கொழும்பில் இருந்து 50மைல் தூரத்தில் கேகாலை அருகே அம்பேபுச என்ற சிறு நகரம். சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மலைக்குன்றுகளுக்கும்; காடுகளுக்கும் நடுவேதான் அமைக்கப பட்டிருக்கிறது. இங்கு தான் விடுதலைப்புலிகளில் இணைந்த பதினெட்டு வயதிற்குக் குறைந்தவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களைப் பார்ப்பதற்கு நானும் சிவநாதனும் மற்றும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் லண்டன் ரைம்;சின் ஆசிரியர் இராசநாயகமும் கொழும்பில் இருந்து அதிகாலைநேரத்தில் புறப்பட்டோம். இந்தப் பயணத்தின்போது அழகான கண்டி வீதியோரங்களோ மலைகளை செதுக்கி அமைத்த வயல் வெளிகளோ பாதையோரத்து பசுமையோ தூரத்து மலைமடிப்புகளோ என்னை ஈர்க்கவில்லை. புறச்சூழலை கண்கள் ஆங்காங்கு தேடினாலும் மனம் பலவருடங்களை தாண்டி 90ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலத்தை இரை மீட்கத்தொடங்கியது. சொந்த அனுபவங்கள் உறவுகளை பிரிந்து வெளிநாட்டுக்கு வந்த பின்பும் நம்மைவிட்டு விலகுவதில்லை.
எங்கள் குடும்பத்தில் நாலு ஆண்களுடன் ஒரு தங்கை. ஆண்கள் நால்வரும் வெளிநாட்டுக்கு வௌ;வேறு திசையில் சென்று விட்டோம். தங்கையின் கணவனும் மூன்று குழந்தைகளையும் மனைவியையும் விட்டு விட்டு கனடா சென்றுவிட்டார். தங்கை பிள்ளைகளுடன் கொக்குவிலில் அப்புவோடு இருந்தாள்.
இது யாழ்ப்பாணத்தவர்களின் கதைதானே? இதில் என்ன புதுக்கதை இருக்கிறது என நீங்கள் முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது. இனித்தான் கதை தொடங்குகிறது. தங்கையின் மூத்தவனுக்கு ஒன்பது வயதும் சில மாதங்களும். மற்ற இரண்டு பிள்ளைகளும் ஏழு- ஐந்து வயது சிறுவர்கள். இந்தக்காலத்தில் தங்கையின் கணவனுக்கு கனடாவில் வசிக்க அனுமதி கிடைத்தபடியால் மனைவியையும் குழந்தைகளையும் கனடாவுக்கு வரும்படி அழைப்பதற்கான பத்திரங்களும் வந்தது.
இப்பொழுது தங்கையும் குடும்பமும் கொழும்பு செல்லவேண்டும். அதற்கான அனுமதியை விடுதலைப்புலிகளிடம் இருந்து பெறவேண்டும். இதற்கான அனுமதியை அவள் அவர்களது அலுவலகத்தில் சென்று பெறவேண்டும். இது அக்காலத்தின் நிதர்சனமாகும். அவர்களது அலுவலகத்திற்கு சென்றவள் சூது வாது தெரியாமல் பிள்ளைகளின் வயதை புலி உத்தியோகத்தினர் கேட்டபோது, 'மூத்தவனுக்கு பத்து ஆகப்போகிறது மற்றவன்களுக்கு ஏழும் ஐந்தும் ஆகிறது' என்றாள்.
புலி உத்தியோகத்தர் ' மூத்தவனை இங்கே விட்டு விட்டு மற்ற இருவரையும் கூட்டிக்கொண்டு கனடா போகவும்” என உத்தரவிட்டார்;
அழுதபடியே வீட்டுக்கு வந்து அப்புவிடம் இதைச் சொல்லிவிட்டு ‘நான் கனடா போகப் போவதில்லை’ என இருந்து விட்டாள். அவளது மனநிலையை இங்கே நான் விவரிக்காமல் வாசகர்களுக்கு விட்டுவிடுகிறேன்.
இதை நான் அறிந்ததும் எதுவும் செய்யவில்லை. காரணம் எனது சகோதரி யாழ்ப்பாணத்தில் இருந்த நிலையில் மெல்பேண் புலிப்பிரமுகர்கள் உடனடியாக மற்றைய இரு குழந்தைகளைக் கூட விட வேண்டாம் என மண்ணுக்கு அறிவித்து விடுவார்கள்.
எனது மற்றைய சகோதரர்களும் அப்பும் சேர்ந்து நயினாதீவைச்சேர்ந்த ஒரு புலிப்பிரமுகர் மூலமாக ஐந்தாயிரத்தில் இருந்து பத்தாயிரம் கனடிய டொலர்களுக்கு பேரம் பேசினார்கள். எனது பத்து வயதே நிரம்பாத மருமகன் ஏலம் விடப்படுகிறான். இந்த ஏலம் கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாக நடந்து கொண்டிருந்தபோது அவனது நல்லகாலத்துக்கு அவனது ஒரு கண்ணில் நோய் தாக்கியது. யாழ்ப்பாண வைத்தியசாலை வைத்தியர்கள் கையை விரித்து விட்டு இதை நீங்கள் கொழும்பில்தான் குணப்படுத்தலாம் என்றார்கள். இதனையிட்டு வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் கருணை மனு அளிக்கப்படடதும் தங்கையின் வீட்டு பத்திரத்தை வாங்கிக்கொண்டு அவளது குடும்பத்தை கொழும்புக்கு செல்ல அனுமதிக்கிறார்கள்.
தமிழ் சினிமா படத்தை பார்க்கும் பார்வையாளர் போன்று இருந்த எனக்கு இந்த விடயம் சுபமாக முடிந்த போது நிம்மதியாக இருந்தது.
இதன்பிறகு இருவருடத்தின் பின்னர் கனடா சென்று புலிகளால் மாவீரனாக விதைக்கப்பட இருந்த எனது மருமகனை பார்த்தபோது இந்த நெத்தலிப்பயில்வானுக்கா பத்தாயிரம் கனடியன் டொலர் என நினைத்தேன்.
விடுதலைப்புலிகளின் சிறுவர் போராளிகளைப்பற்றி பெரிதாக பேசப்பட்டது 2000 ஆண்டுகளின் பிறகுதான். ஏன்னைப்பொறுத்தவரை இந்தியன் ஆமி போனவுடன் புலிகள் சிறுவர்களில் கண்வைத்து விட்டார்கள் என்றுதான் சொல்வேன்.
இரண்டு காரணங்கள்
- 1990 ல் இந்தியா வெளியேறும் போது புலிகள் இயக்கத்திடம் கிட்டத்தட்ட 300 பயிற்றப்பட்ட போராளிகளே இருந்தார்கள்
- ரெலோவை அழித்தவுடன் யாழ்ப்பாண மக்கள் விழித்துக்கொண்டார்கள். அதுவரையும் போராட்டத்தை தங்களது சொந்தப் போராட்டமாக பார்த்தவர்கள் பின்பு மற்றவர்களுடையதாக பார்க்க தொடங்கினார்கள். இதே வேளையில் பிரிக்கப்பட்டிருந்த மேற்;கு பேர்லினில் பதினேழு வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் வந்து அகதி எனக்கூறினால் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என சட்டம் இருந்தது. இந்தச் சட்டத்தை பாவித்து பதினேழு வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஏரொபுளட்டில் ஏற்றி கிழக்கு பேர்லினில் இறக்கினார்கள்.
- இந்த சிறுவர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு சென்றதும் புதிதாக வயது வந்த இளைஞர்கள் புலிகளில் சேர யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. இந்த இளைஞர்களைத் தொடர்ந்து இவர்களின் சகோதரர்கள் பெண்கள் தாய் தந்தையர் என பெரும்பான்மையான யாழப்பாண வெள்ளாளர் சமூகமே யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியது. வெளிநாடுகளுக்கு உடனடியாக போகமுடியாதவர்கள் கொழும்பில் குடி புகுந்தார்கள்.
புலிகளின் சகோதர கொலைச்செயலால் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய யாழ்ப்பாணத்தவர்கள் இன்று வெளிநாடுகளிலும் கொழும்பிலும் புலி ஆதரவாளர்கள் ஆக இருப்பது எப்படி?
எனது இரு தம்பிகளும் மற்றும் அப்புவும் கூட சாகும் வரை புலி ஆதரவாளராகத்தான் இருந்தார்கள்?
முரண்பாடுகளின் முழு வடிவம்தான் யாழ்ப்பாணத்தின் மைந்தர்கள்
அம்பேபுச சிறுவர் நிலையத்திற்கு சென்றதும் மழை தூறத்தொடங்கியது. மலைப்பிரதேசத்தில் பெய்யும் மழையை பலகாலங்களாக தவறவிட்டிருக்கிறேன். அந்த இயற்கை வாசனையை நெஞ்சு நிறைய நிரப்பிக்கொண்டேன்.
சுற்றுப்புறமெங்கும் அடர்ந்த மரங்களைக் கொண்ட காட்டை இயற்கை அரண்களாக கொண்டது இந்த சீர்திருத்தப்பள்ளி. இந்த முகாமில் இருந்து பயிற்றப்பட்ட கிழக்கு மாகாணத்தவர்கள் ஐம்பது பேருக்கு மேல் தொழில் பயிற்சி பெற்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். தற்பொழுது 51 சிறுமிகளும் 60 சிறுவர்களும் இங்குள்ளார்கள். இங்கு கொடுக்கப்படும் உணவு இராணுவத்தினருக்கு கொடுப்பது போல ஊட்டசத்துகளை கொண்டது என அறிந்தோம்.
இந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ கப்ரன் Chanaka Weerasinghe எங்களை வரவேற்று ஐம்பதுக்கு மேற்பட்ட ஆண் சிறுவர்களை அந்த மண்டபத்திற்கு அழைத்தார். அதுவரையில் வெளியே நின்றபோது ஒரு பதினைந்து வயதுடைய சிறுவன் வந்தபோது எங்களோடு வந்த நண்பர் சிவநாதன் பேசிக்கெண்டிருந்துவிட்டு 'தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவார் என வெளி நாட்டு தமிழர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே” என்று சொன்னபோது, அந்தச்சிறுவன் சிறிதும் தயக்கமில்லாமல் ‘அவர் புத்துக்குள் இருந்து தான் வருவார்’ எனச்சொல்லி சிரித்தான். அந்தச் சிறுவனை தோளில் கை வைத்து கட்டி அணைப்பதைத் தவிர என்னால் எந்த வார்த்தையும் பேச முடியவில்லை. மண்டபத்தில் சிறுவர்கள் கூடியதும் கப்டன் எங்களை விட்டுவிட்டு சென்றுவிட்hர் அங்கிருந்தவர்களில மூவர்; மட்டும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் மற்றவர்கள் .
வன்னி பிரதேசத்தை சேர்ந்தவர்கள். பாடசாலைகளில் படித்துக் கொண்டிருந்தவர்களை விடுதலைபுலிகள் கட்;டாயமாக ஒரு கிழமை அல்லது பத்து நாட்கள் பயிற்சி கொடுத்து விட்டிருக்கிறார்கள். இவர்கள் கம்பியூட்டர் மற்றும் அலுமினியம் உருக்குதல் பற்றிய தொழில்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலர் மீண்டும் படிப்பதில் விருப்பம் காட்டினார்கள் இவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது மிகவும் வாட்டசாட்டமான ஒரு இளைஞன் வந்தான். அப்போது அருகில் வந்த கப்டன் எங்களிடம் “இவர்தான் மேஜர் ராஜ்” என அறிமுகப்படுத்தினார்.
இவரிடம் நான் பேசிய போது விடுதலைபபுலிகள் தலைவர் பிரபாகரனைச் சுற்றி இருந்த நான்கு சுற்று பாதுகாப்பில் இரண்டாவது சுற்றில் பொறுப்பாக இருந்தவர் என்பது தெரிந்தது. தனது சொந்த இடம் வாழைச்சேனை என்றார். இவர் ஒரு சங்கோசமான பேர்வழி. அந்தக்கால சினிமாவில் காட்டப்படும் பெண்கள் போல் நிலத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டு பதில் தந்தார்.
பெண்கள் பகுதிக்கு போவதற்கு முன்பு இராணுவ கப்டனிடம் கேட்டேன், ' எப்படி புலி மேஜரை இங்கே வைத்திருக்கிறீர்கள்? அவரைப்பார்த்தால் இருபத்ததைந்து வயதுக்கு கிட்ட இருக்கும் இல்லையா?
‘அவர் உத்தியோகம் எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு போக இருக்கிறார் சிலமாதங்கள் முன்பு ஒரு 60 வயது விடுதலைப்புலியும் இங்கு தங்கி இருந்தார் என்றார் கப்டன்.
‘அது எப்படி?’
கிழக்கு மாகாணத்தில் ஒரு கிராமத்தில் அந்த மனிதன் கசிப்பு குடித்து விட்டு மனிசிக்காரியை தினமும் உதைத்திருக்கிறார். மனிசி உதை தாங்க முடியாமல் புலிகளிடம் சொல்ல புலிகள் அவரை உதைத்து விட்டு தங்களுக்கு சமைப்பதற்கு வைத்திருந்தார்கள். கிழக்கு மாகாணத்தை இராணுவம் கைப்பற்றிய போது அவர் சரணடைந்தார் இந்த இடத்தில் தான் பலகாலம் இருந்து விட்டு சில மாதங்களுக்கு முன்புதான் ஊர்போனார்.”- என்றார் கப்டன்.
இந்த சீர்திருத்த பள்ளியை நிர்வகிக்கும் அந்த கப்டன் தமிழில் தான் எங்களிடமும் சிறுவர்களிடமும் பேசினார். சிறுவர்களில் சிலர் “ இவர் எங்கள் அப்பாவைப்போன்றவர்” என்றார்கள்.
இதை பலர் நம்ப மறுக்கலாம். நான் உண்மையில் நம்பினேன். மனிதர்கள் பலரால் இன மத ஜாதி நிற உணர்வுகளுக்கு அப்;பால் செயல் படமுடியும் என்பதை இந்த கப்டன் Chanaka Weerasinghe உணர்த்தினார்.
பெண்கள் பகுதிக்குச் சென்ற போது ‘இதோ இவன் சிங்களப் பையன் சுனில் ரெக்ஸ் ஆனால் புலிப்படையில் இருந்தான் ‘ என ஒரு சிறுவனை கப்டன் கூப்பிட்டார்
நான் விசாரித்தேன்.
‘நீர்கொழும்பில் இருந்து சுனாமிகாலத்தில் தமிழ் உறவினரை பார்க்க மாமாவுடன் வந்தபோது புலிகள் என்னை பிடித்து படையில் சேர்த்து விட்டார்கள் ‘என அழகிய தமிழில் பதில் தந்தான்.
பெண்கள் பகுதியில் இருந்தவர்கள் மன்னார் முல்லைத்தீவு வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பாடசாலை மாணவிகள் . மூளாயைச்சேர்ந்த ஒரு பெண் உயரமாக இருந்தாள். “யாழ்ப்பாணத்தில் இருந்து எப்படி வன்னியில் வந்து சேர்ந்தாய்? என்று கேட்டபோது “பரப்புரை” எனச்சொல்லி சிரித்தாள்.
புலிகள் பிரசாரத்துக்கு கொடுத்த தமிழ் வார்த்தை இந்தப்பெண்மட்டும்தான் விருப்பத்தில் சேர்ந்திருக்கிறாள்.
பல சிறுமிகள் ஐந்து நாள் பயிற்சியின் பின் ஆயுதம் கொடுத்து போர்முனைக்குவிட்டபோது தாங்கள் சட்டையில் சிறுநீர் கழித்ததை சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.
எங்களுக்கு அருகில் இப்போது சிறுவர்களும் வந்துவிட்டார்கள். இப்போது ஒரு இயற்கையான ஒரு சூழ்நிலை உருவாகி எல்லா சிறுவர் சிறுமியர் கண்கள் அகலவிரிந்தது. அப்பொழுது மேஜர் ராஜைப் பார்த்தேன். அந்த மூளாய் பெண்ணைப் பார்த்;து அவனது கண்கள் பூப்பூத்தது.
வடமாகாணமும் கிழக்கு மாகாணத்தை இப்படி இணைத்தல்தான் இனிமேல் சாத்தியப்படும். இளம் உள்ளங்களின் எத்தனை கனவுகள் பிரபாகரன் கூட்டத்தால் கொள்ளையடிக்கப்பட்டது?.
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அந்தப்பெண்பிள்ளைகளுடன் பேசிக்கொண்டிருக்கும் போது நானும் சிவநாதனும் சிறிய தாழ்வாரம் போன்ற பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தோம்;. அப்பொழுது சிவநாதன் தனது பெயரைச் சொன்னதும், அந்த சிறுவர்கள் எனது பெயரைக்கேட்டார்கள். ‘நடேசன’; என்றதும் எங்களை சுற்றி நின்ற அச்சிறுவர்கள் இரண்டு அடி பின்வாங்கினர். அவர்களது முகம் பேயறைந்தது போல் ஆகிவிட்டது.
எனக்குப் புரிந்து விட்டது.
‘எனது பெயர் நொயல் நடேசன் நான் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த மிருகவைத்தியர் என கூறியதுமட்டுமல்லாமல் எனது அறிமுக அட்டையையும் காட்டினேன். இந்தச் சிறுவர்கள்; அரசியல் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசனால் பிடிக்கப்பட்டவர்கள். புலிகள் அழிந்தாலும் இவர்கள் ஏற்படுத்திய மனக்காயங்கள் ஆறுவதற்கு எவ்வளவு காலம் செல்லும் என்பதே எனது கேள்வியாகும்.
இந்த சீர்திருத்தப்பள்ளியில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு ஆரம்பத்தில் உடுதுணிகளும் அனுப்பியிருந்தேன். நேரில் பார்க்கச்சென்றபோது சுகாதார பொருட்களையும் கொடுத்தோம்.
இந்தச் சிறுவர் சிறுமிகளுக்கு உதவ விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கத்தில தொடர்பு கொள்ளலாம்.
- உதயம்நெற்
0 Response to "எங்கள் பிள்ளைகளின் காயங்களை ஆற்றுவோம்"
แสดงความคิดเห็น