பிரபாகரன் இறப்பு சான்றிதழ் தாக்கலாகவில்லை - ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஒத்திவைப்பு
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரின் இறப்புச் சான்றிதழ்களை சிபிஐ தாக்கல் செய்யாததால், ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்குப் பலியானார். இந்த வழக்கில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதேபோல பொட்டு அம்மான், நளினி, முருகன், அகிலா உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் வழக்கிலிருந்து பிரிக்கப்பட்டு தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தனி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 17 வருடங்களாக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. முதலாவது கோர்ட் நீதிபதி ராமலிங்கம் விடுமுறையில் இருப்பதால், 6வது கோர்ட் நீதிபதி ஆனந்தகுமாரின் அறையில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது சிபிஐ சார்பில் ஒரு கவர் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை பிப்ரவரி 3ம் வாரத்திற்குத் தள்ளி வைத்தார் நீதிபதி ஆனந்தகுமார்.
கடந்த மே மாதம் முடிந்த ஈழப் போரின் போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதையடுத்து வழக்கை முடிக்க இறப்புச் சான்றிதழ் தருமாறு இலங்கை அரசுக்கு இந்தியா கோரிக்கை வைத்தது. ஆனால் இதுகுறித்து இலங்கை அரசிடமிருந்து பதில் ஏதும் இல்லை.
மேலும், பொட்டு அம்மானும் நிச்சயம் இறந்து விட்டார், ஆனால் உடல் மட்டும் கிடைக்கவில்லை என்றும் இலங்கை அரசு கூறி வருகிறது. இந்த இருவரும் இறந்து விட்டதாக இலங்கை அரசு கூறி வருகின்ற போதிலும், இறப்புச் சான்றிதழ்களைத் தராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to "பிரபாகரன் இறப்பு சான்றிதழ் தாக்கலாகவில்லை - ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஒத்திவைப்பு"
แสดงความคิดเห็น