இணக்க அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் : டக்ளஸ்
"கல்வித்துறை மட்டுமல்லாமல், பொதுமக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் இருப்பது எமக்குத் தெரியும். இந்தப் பிரச்சினைகளுக்கு இணக்க அரசியல் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்" எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கான கற்றல் மேம்பாட்டுக்கான உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் தலைமையில் வவுனியா தெற்குக் கல்வி வலய அலுவலகத் தொகுதியில் இந்த வைபவம் நடைபெற்றது.
வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 15 பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டார்கள். சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சினால் 9 லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் தேவைக்குரிய புத்தகங்கள், கணனிகள், வெள்ளைப் பலகைகள் உட்பட 9 லட்சம் ரூபா பெறுமதியான முக்கிய உபகரணங்களை இந்த வைபவத்தின்போது அமைச்சர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வைபவத்தில் அமைச்சருடன், ஈபிடிபி கட்சியின் முக்கியஸ்தர் எம்.சந்திரகுமார், வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் ரகு சிவன் சிவகுமார் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். வவுனியா தெற்கு கல்வி வலயப் பொறியியலாளர் எஸ்.சிறிதரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நா.மாணிக்கவாசகம், பண்டாரிகுளம் விபுலானந்தா மகாவித்தியாலய அதிபர் எஸ்.ஜெயதரன் ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்ததாவது:
"அஹிம்ஸை அரசியலும் சரி, வன்முறை அரசியலும் சரி எமது மக்களுக்குப் பெரும் துன்பங்களை ஏற்படுத்தினவே தவிர, எமது அரசியல் அபிலாஷைகளுக்குத் தீர்வு தேடித் தரவில்லை. எனவே கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, இணக்க அரசியலுக்கான எமது கரங்களைப் பலப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.
இணக்க அரசியலின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பது எமது நம்பிக்கை. ஜனாதிபதி ஒருவர் ஆட்சிக்கு வந்ததும் இத்தகைய நீண்டகால பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.
அதற்குப் பல தடைகள் இருந்தன. முக்கியமாக விடுதலைப்புலிகள் ஓர் அரசியல் தீர்வுக்குத் தடையாக இருந்தார்கள். பேச்சுவார்த்தைகளில் அவர்கள் பங்கு பற்றியபோதிலும் அரசியல் தீர்வுக்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. இப்போது அந்தத் தடை நீங்கி விட்டது.
பதின்மூன்றாவது அரசியல் திருத்தச் சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு பிரச்சிகைக்குப் படிப்படியாகத் தீர்வு காணமுடியும். இந்த அரசியல் திருத்தத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டிருக்கின்றார். இந்தியா உட்பட சர்வதேச நாடுகளும் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
எனவே, இதனை ஆரம்பமாகக் கொண்டு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு எமது கரங்களை அரசியல் ரீதியாகப் பலப்படுத்த வேண்டும்.
கல்வி அபிவிருத்தியைப் பொருத்தமட்டில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தில் பலகாலமாகத் தீர்க்கப்படாமலிருந்த தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
அங்கு 532 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியாவில் 64 தொண்டர் ஆசிரியர்களும், மன்னாரில் 33 தொண்டர் ஆசிரியர்களும் இருக்கின்றார்கள். இவர்களில் சிலருக்கே நியமனங்கள் வந்துள்ளன. இந்த நியமனங்கள் வழங்குவது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
0 Response to "இணக்க அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் : டக்ளஸ்"
แสดงความคิดเห็น