செய்தியறிக்கை
தடம் புரண்ட ரயில் |
ரஷ்யாவில் ரயில் தடம்புரண்டமைக்கு குண்டுவெடிப்பே காரணம் - ரஷ்ய உளவுத்துறை
ரஷ்யாவில் வெள்ளிக்கிழமை பின்னேரம் விரைவு ரயில் ஒன்று தடம் புரளக் காரணம் குண்டுவெடிப்புதான் என்று அந்நாட்டின் உள்நாட்டு உளவுத்துறையான எஃப்.எஸ்.பி. கூறுகிறது.
மாஸ்கோவுக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கும் இடையில் சென்றுகொண்டிருந்த ரயில் தடம்புரண்ட சம்பவத்தில், குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டும் நூறு பேர் வரையிலானோர் காயமடைந்தும் உள்ளனர்.
ரயிலுக்கு அடியில் வெடிப்பொன்று நிகழ்ந்ததாக ரயிலின் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். தண்டவாளத்துக்கு அருகில் பள்ளமும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
7 கிலோ டி.என்.டி. குண்டுக்கு ஒப்பான நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ரஷ்ய உள்நாட்டு உளவு நிறுவனத் தலைவர் அலெக்ஸாந்தர் போர்ட்னிகோவ் கூறியுள்ளார்.
ஆப்கான் அதிபருக்கு பிரிட்டன் பிரதமர் அறிவுரை
ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் |
பிரித்தானிய பிரதமர் கார்டன் பிரவுன், ஆப்கானிஸ்தானில் ஊழல்களை எதிர்கொள்வது மற்றும் ஆப்கான் படைகளுக்கான பயிற்சிகளை துரிதப் படுத்துவது போன்ற விடயங்களை கையாள்வதற்கான விதிமுறைகள் குறித்து அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்சாய்க்கு பணித்துள்ளார்.
அதிபர் கர்சாய் இவற்றை நிறைவேற்றுவதற்கு சில தராதரங்களை கைக்கொள்ளவேண்டும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டாக வேண்டுமெனவும் கார்டன் பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரியில் லண்டனில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் ஆப்கன் அதிபர் சில வாக்குறுதிகளை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆப்கன் படைகளுக்கு பயிற்சியளிப்பதிலும் அதன் தொடர்ச்சியாக சர்வதேச படைகளை மீளப்பெற்றுக் கொள்வதிலும் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்தும் பிரவுன் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் அதிபருக்கு ஊழல் வழக்கு சிக்கல்
ஆசிப் அலி சர்தாரி |
பாகிஸ்தானில் ஊழல் வழக்குகள் தொடர்பில் வழங்கப்பட்டு வந்த பொது மன்னிப்பு காலம் நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவருடைய முக்கிய சகாக்கள் மீது வழக்குகள் தொடரப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அதிபர் என்ற முறையில் சில காலமாக ஊழல் தண்டனைகளில் இருந்து தப்பி வந்தார். ஆனால் தற்போது அவருக்கு பிரச்சனை ஏற்படலாம் என்று ஒரு சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பாகிஸ்தானில் நிலவி வரும் தலிபான்களின் கிளர்ச்சி மற்றும் அரசியல் சீர்திருத்தம் இல்லாத நிலையால், ஆசிப் அலி சர்தாரியின் மக்கள் செல்வாக்கு மந்தமாகவே இருக்கிறது.
பங்களாதேஷ் படகு விபத்தில் பலர் பலி
வங்கதேச படகு விபத்து |
பங்களாதேஷில் இஸ்லாமிய ஹஜ்ஜூப் பெருநாள் பண்டிகைக்காக தமது கிராமத்துக்கு சென்று கொண்டிருந்த பயணிகளை ஏற்றிய படகு ஒன்று அவர்களை இறக்கிக் கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்துள்ளது.
சுமார் ஆயிரத்து ஐநூறு பேரை ஏற்றிய இந்த படகிலிருந்து விபத்து நேர முன்னரே பலர் இறங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகு பகுதியளவில் மூழ்கிக் கொண்டிருந்தபோதே அதிலிருந்து பாய்ந்து தப்ப முயன்ற பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நீருக்கடியில் மூழ்கியுள்ள படகின் சரக்கு ஏற்றும் பகுதிக்குள் சிக்கியிருப்போரை கண்டுபிடிக்கும் பணிகளில் மீட்புப் பணியாளர்களுடன் உள்ளூர் மக்களும் ஈடுபட்டு்ள்ளனர்.
பொன்சேகா |
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு
இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா முதன்முறையாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி சார்புடைய தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் வெள்ளிகிழமை இரவு நடைபெற்ற கூட்டமொன்றில் விசேட அதிதியாக கலந்து கொண்ட ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் சட்டத்தரணி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
சட்டத்தரணிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஜெனரல் சரத் பொன்சேகா, தாம் பதவியேற்றதன் பின்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதாக அளித்துள்ள வாக்குறுதி்யை ஒருபோதும் மீறமாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கியதேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
துபாய் நெருக்கடியால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை - இந்திய நிதியமைச்சர்
துபாய் |
ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் ஒன்றான துபாயின் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியானதன் எதிரொலியாக மேற்குலக சந்தைகள் சரிவைக் கண்டிருந்தன.
துபாய் அரசாங்கத்துக்குச் சொந்தமான துபாய் வோர்ல்ட் என்ற முதலீட்டு நிறுவனம், தாங்கள் கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளதாக அறிவித்ததுடன், தாங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகளை தாங்கள் ஆறு மாதங்கள் கழித்துதான் செலுத்த முடியும் வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்தச் செய்தி வெளியானதை அடுத்து அமெரிக்காவின் பொருளாதாரச் சந்தை சரிவைக் கண்டிருந்தது. வேறு பல உலக சந்தைகளும் இந்தச் செய்தியின் எதிரொலியாக தடுமாற்றம் கண்டிருந்தன.
இந்நிலையில், துபாய் நிதி நெருக்கடியால் இந்தியப் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படாது என்று இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி வழங்கியுள்ளார்.
துபாயில் இந்தியா அதிகம் முதலீடுகளைச் செய்திருக்கவில்லை என்பதாலும் துபாய் நிதிக் கட்டமைப்புகளோடு இந்திய வங்கிகள் அதிகம் தொடர்புகொண்டிருக்கவில்லை என்பதாலும் பாதிப்பு ஏற்படும் என்று இந்தியா அஞ்ச வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்த பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
உலக பருவநிலை மாற்றம் தொடர்பில் கோபன்ஹேகன் மாநாட்டில் ஒப்பந்தம் ஏற்படும் என்று நம்பிக்கை - ஐ.நா நிபுணர்
தொழிற்சாலைகள் கரியமில வாயுவை வெளியிடுகின்றன |
உலக பருவநிலை மாற்றம் தொடர்பான எதிர்வரும் கோபன்ஹேகன் மாநாட்டில் கியோட்டோ ஒப்பந்தத்துக்கு அடுத்தபடியாக செயல்பாட்டுக்கு வரக்கூடிய ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்று தான் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக பருவ நிலை தொடர்பான ஐ.நா.நிபுணர் குழு தலைவரான ராஜேந்திர பச்சோரி கூறியுள்ளார்.
தாம் வெளியேற்றும் கரியமில வாயுவின் அளவில் குறைப்புகளைச் செய்யவது தொடர்பில் அமெரிக்காவும் சீனாவும் இந்த வாரம் திட்டங்களை அறிவிக்கவுள்ளன என்பது, ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளது என பிபிசியிடம் பேசிய பச்சோரி தெரிவித்தார்.
கோபன்ஹேகனில் ஒரு புதிய ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான இறுதி ஊக்கத்தை டிரினிடாடில் கூடியுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் வழங்க வேண்டும் என ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் முன்னதாகக் கூறியிருந்தார்.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น