
சுவிஸ்லாந்தின் ப்ரீபேர்க் என்னுமிடத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான மண்டபத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (27.11.2009) அன்று புலிகள் இயக்கத்தின் “புதிய” சுவிஸ் கிளையினரால் நடத்தப்பட்ட மாவீரர்தின நிகழ்வுகளில் பாம்பு குறூப் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் தெருச்சண்டியர் குழுவிற்கும், இளைஞர் குழுவொன்றுக்குமிடையில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு கண்ணீர்ப்புகை ஒன்று பிரயோகம் செய்யப்பட்டதுடன், இதன்காரணமாக அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலையும் ஏற்பட்டிருந்தது. இதன்போது ஏற்பட்ட கைகலப்பு மற்றும் மோதல்களின் போது புலிகளினாலும், மற்றும் பெருமளவு பொதுமக்களினாலும், பாம்புகுறூப் என்னும் தெருச்சண்டியர்களான “சி”, “க” போன்ற ரவுடிகளாலும் (தற்போது சுவிஸ் பொலிசாரின் விசாரணையில் உள்ளதால் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது) குறித்த இளைஞர்மீது பலத்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதுடன், போத்தல்கள், கத்தி, கற்கள் மற்றும் இரும்பு கதிரை போன்றவற்றினாலும் அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது அவ்விளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனையடுத்து இன்று விசாரணைகளை மேற்கொண்ட சுவீஸ் பொலீசார் குறித்த நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கமெராவின் பதிவுகளைக் கொண்டு நடந்த சம்பவத்தை அவதானித்ததன் ஊடாக தாக்குதல் நடத்தியவர்களில் பெரும்பாலானோரை இனங்கண்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள சுவிஸ் பொலீசார், இனிவரும் காலங்களில் இதுபோன்ற மாவீரர்தினம் போன்ற நிகழ்வுகளைத் தடை செய்வதற்கு ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதேநேரம் மேற்படி சம்பவம் குறித்து தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவ்விளைஞரிடம் “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த பிரிவினர் நடத்திய மாவீரர்தின நிகழ்வின் போது இடம்பெற்ற கண்ணீர்ப் புகைப்பிரயோக சம்பவத்திற்கும் தனக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென்றும், தனக்கும் தனது நண்பர்களுக்கும், பாம்புகுறுப் என்கிற தெருச்சண்டியர் குழுவுக்குமிடையில் இருந்த முன்விரோதம் காரணமாகவே தன்மீதான இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப் பட்டிருப்பதாகவும், இது குறித்து பொலீசாரிடம் முறையிட்டுள்ள நிலையில் பொலீசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும், மிகவிரைவில் அவர்கள் நல்லதொரு சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
0 Response to "புலிகளின் “புதிய” சுவிஸ் கிளையினரால் நடத்தப்பட்ட மாவீரர்தின நிகழ்வில் கண்ணீர்புகை பிரயோகம், இளைஞர்மீது கண்மூடித்தனமான தாக்குதல்.."
แสดงความคิดเห็น