jkr

சுவிஸில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பொதுமக்களுடனான சந்திப்பு- (விரிவான செய்தி.. புகைப்படங்களுடன்)

சுவிஸில் இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (22.11.2009) சூரிச் மாநகரில் புளொட் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுடனான பொதுக் கூட்டமொன்றினை நடத்தியிருந்தார். இதில் பெருந்தொகையான மக்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் பல புலி ஆதரவாளர்களும் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதன்போது இலங்கையில் தற்போது இருக்கின்ற அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் பற்றியும், மீள்குடியேற்றங்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் புளொட் தலைவர் கூட்டத்தில் பங்கு கொண்டிருந்தவர்களுக்கு ஒரு விளக்கவுரையை வழங்கினார். அத்துடன் சுவிஸில் இடம்பெற்ற அனைத்துத் தமிழ் கட்சிகள் மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள், காணப்பட்ட உடன்பாடுகள் தொடர்பிலும் இதன்போது எடுத்து விளக்கினார்… இக்கூட்டத்தின்போது, புலி ஆதரவாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த புளொட் தலைவர் சித்தார்த்தன், நாமும் தமிழீழக் கொள்கைக்காகவே எங்களுடைய போராட்டத்தை ஆரம்பித்தோம். 1970களில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் புதிய புலிகள் 1976இலே தமிழீழ விடுதலைப் புலிகளாக பெயர்மாற்றம் செய்யப்பட்டு உமாமகேஸ்வரன் அவர்கள் அதன் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். 1980ம் ஆண்டு உமாமகேஸ்வரனுக்கும் பிரபாகரனுக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரைக் கைவிட்டு இருவருமே புதிய பெயர்களில் இயக்கங்களை ஆரம்பிப்பதாக தெரிவித்து உமாமகேஸ்வரன் புளொட் இயக்கத்தை ஆரம்பித்தார். பிரபாகரன் சிறிதுகாலம் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருடன் இருந்துவிட்டு மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரிலேயே இயங்கினார்…. எங்களைப் பொறுத்தமட்டில் 87ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்பு எந்தக் காலத்திலும் இங்கு ஒரு தனிநாடு வருவதை ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா மிகவும் உறுதியாக இருக்கின்றதென்பதை அறிந்திருந்தோம். உலக நாடுகளுமே இங்கு தனிநாடொன்று வருவதற்கு இந்தியாவை மீறி எந்தவிதத்திலும் உதவாதென்பதையும் நாம் தௌ;ளத் தெளிவாக உணர்ந்திருந்தோம். ஆகவேதான் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்;வைக் காணலாம், காணவேண்டுமென்ற நோக்கத்திற்காக எங்களுடைய நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டோம். இதற்காக ஜனநாயக ரீதியிலாக தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்து வருவதன்மூலம் ஒரு தீர்வைக் காணலாம். அதேநேரம் மக்களுடைய அபிலாசைகளுக்கு சரியான தீர்வொன்று உடனடியாக காணமுடியவில்லை என்ற காரணத்திற்காக தொடர்ந்தும் தமிழ்மக்களை ஒரு அழிவுப்பாதையில் இட்டுச்செல்ல முனையவும் கூடாது. இன்று எங்களுக்கு இருக்கின்ற முதலாவது கடமை அனைத்தையும் இழந்து வந்திருக்கின்ற அந்த இலட்சக்கணக்கான மக்களுடைய மறுவாழ்வு. அதிலேதான் எங்களுடைய முழுமையான கவனமும் இன்று இருக்கின்றது. அதேநேரத்தில் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களையும் கொடுத்து தமிழ் மக்களுக்கு ஒரு சரியான அதிகாரப்பரவலாக்கலை பெற்றுக்கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளிலும் அதிகூடுதல் கவனம் செலுத்துவோம். இந்த வகையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் அல்லது ஒரு கருத்தொருமித்த கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் நாம் பல விடயங்களை சாதிக்க முடியுமென்று நம்புகிறோம். அதனடிப்படையாகவே தமிழ்க்கட்சிகள் மத்தியில் ஒரு ஒற்றுமையைக் கொண்டுவர வேண்டுமென்று இங்கு சுவிஸில் நடைபெறுகின்ற மகாநாட்டில் மாத்திரமல்ல அதற்கு முன்பதாகவும் இலங்கையிலும் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவைகள்மூலம் வரவிருக்கின்ற அரசாங்கம் எதுவாக இருந்தாலும் அழுத்தங்களைக் கொடுத்து அரசியல் ரீதியிலான தீர்;வுக்கும் தமிழ் மக்களின் மறுவாழ்வு போன்ற விடயங்களுக்கும் நடவடிக்கைகளை எடுப்போமென நம்புகிறோம். அதேவேளை நாட்டின் எந்த ஒரு தலைவரும் தமிழ் மக்களுடைய அபிலாசைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனாலும் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையான செயற்பாடுகளின் ஊடான முயற்சிகளின்மூலம் அரசுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலமும், சர்வதச ரீதியான அழுத்தங்களின் மூலமும் அவர்களை ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. எதிர்வரும் தேர்தலின்போது வெல்லப் போகின்றவர்கள் யாராவது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களா என கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த சித்தார்த்தன் அவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அல்ல வேறு எந்த ஒரு சிங்களத் தலைவர்களோ அது ரணில் விக்கிரமசிங்கவாக இருக்கலாம் அல்லது வேறு எவராகவோ இருந்தாலும்; தமிழ் மக்களுடைய அபிலாசைகளைத் தீர்க்கக்கூடிய வகையிலே ஒரு தீர்வை முன்வைப்பார்கள் என்பதை நான் நம்பவில்லை. கடந்தகால அனுபவங்கள் இவற்றை எங்களுக்கு மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. இருந்தாலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் ஒரு தீர்வைக்காண முடியும். அடைய முடியாத இலக்கிற்காக எங்களுடைய மக்களைப் பலிகொடுக்க முடியாது. மக்களை அழிவுப்பாதையில் இட்டுச் செல்லக்கூடாது என்ற காரணத்திற்காகவேதான் 87களில் தொடக்கம் நாங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்;வை வலியுறத்தி வருகின்றோம். இன்றைய நிலையானது எங்களுக்கு அன்றே தெரிந்த விடயமாகும். இந்தியா விரும்பாத பட்சத்திலும் உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்திலும் தொடர்ந்தும் தமிழீழத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்தால் நிச்சயமாக ஒரு அழிவை நோக்கியே செல்லுமென்று நாங்கள் அன்றே உணர்ந்திருந்தோம். இதை நாங்கள் அந்தக் காலகட்டத்தில் பலதடவைகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறோம். இருந்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புலிகள் தொடர்ந்து முன்னெடுத்தபோது அந்தப் போராட்டத்திற்கு நாம் எதிரானவர்களாக இருக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் தாங்களே ஏகப்பிரதிநிதிகள் என்பதற்காக மற்றைய இயக்கங்களை அழிக்க முற்பட்டபோது அதை நாம் நிச்சயமாக எதிர்த்தோம் என்று கூறினார். நாடு கடந்த தமிழீழத்தை ஆதரிக்கலாமா? என்ற இன்னுமொரு கேள்விக்கு பதிலளித்த புளொட் தலைவர், நாடுகடந்த தமிழீழம் என்பதன் சரியான அர்த்தம் உண்மையிலேயே தெரியவில்லை. இதிலே எந்தவொரு அர்த்தமும் இருப்பதாக புரியவில்லை. புலிகள் பலமாக இருந்த காலத்தில் நாட்டுக்கு வெளியிலே ஒருஅரசை அமைத்து அதை சர்வதேச அங்கீகாரம் பெற்று நடத்துவதாக இருந்திருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கக்கூடும். இன்று இதிலே எந்தவிதமான ஒரு அர்த்தமும் இல்லாமல் இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களை இன்னமும் ஆபத்தை நோக்கி இட்டுச்செல்கின்ற ஒரு முயற்சியாகவே கருதுகிறேன். அதை எந்த சந்தாப்பத்திலும் நாம் ஆதரிக்க முடியாது என்று கூறினார். புலி ஆதரவாளர்களைப் பார்த்து கருத்துரைத்த சித்தார்த்தன் அவர்கள், இங்கு நீங்கள் வந்திருப்பது ஒரு நல்ல விடயமென்பதுடன், நீங்கள் இங்கு வந்திருப்பது ஒரு ஆரோக்கியமான விடயமுமாகும். கட்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஒருவருக்கொருவர் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து விவாதிக்கக் கூடிய ஒரு சூழ்நிலை தற்போது உருவாகியிருப்பதை அரசியலில் மிகவும் முக்கியமான நல்ல விடயமாக நான் கருதுகிறேன். அனைவரும் தங்களுடைய கருத்துக்களைக் கூறக்கூடிய சுதந்திரம் உருவாகியிருப்பது ஒரு நல்ல ஆரோக்கிய விடயமுமாகும் என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்த மக்களின் இன்றைய நிலைமைகளையும், சிறிது சிறிதாக தற்போது அம்மக்கள் மீளக்குடியேற்றப்பட்டிருப்பதையும், இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை தான் சென்று பார்வையிட்டதையும், அங்கிருக்கின்ற மக்களுடைய குறைநிறைகளைப் பற்றியும் புளொட் தலைவர் இக்கூட்டத்தின்போது எடுத்துக் கூறினார். அத்துடன், இடம்பெயர்ந்த மற்றும் மீள்குடியமர்த்தப்பட்ட இந்த மக்களுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கான உதவிகளை வெளிநாடுகளில் உள்ளவர்களாகிய நீங்களே நேரடியாகச் செய்யலாம். பத்துப்பேர் இணைந்து ஒரு கிராமத்தைப் பொறுப்பெடுத்து அபிவிருத்தி செய்யலாம். அதற்காக அநியாயமாக அதாவது பணம் அந்த மக்களைச் சென்றடையாத வழியில் பணத்தைக் கொடுக்காதீர்க்கள். அதாவது அங்குள்ள மக்களுக்கு உதவுவதாகத் தெரிவித்து உங்களை ஏமாற்றக் கூடியவர்களிடம் மீண்டும் மீண்டும் ஏமாந்து பணத்தைக் வழங்காதீர்கள். அதற்காக எங்களிடம் நிதியைத் தரும்படி நாங்கள் கேட்கவில்லை. இன்னும் சிறிதுகாலம் பொறுத்துக் கொள்ளுங்கள் அங்கு ஓரளவு சுதந்திரமான நடமாட்டங்கள் எல்லாம் ஆரம்பித்தபின் நீங்களாகவே இந்த வேலைத்திட்டங்களை எல்லாம் செய்யக்கூடிய நிலைமைகள் வரும். நீங்கள் உங்களுக்குத் தெரிந்த கிராமம், உங்களுக்குத் தெரிந்த மக்கள் மத்தியில் அவர்களுடைய துயர்களைத் துடைக்கும் வகையில் நேரடியாக உதவும் வகையிலான ஒரு காலகட்டம் வரும்போது அதைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். என்று தெரிவித்து புளொட் தலைவர் தனது கூட்டத்தினை நிறைவு செய்துள்ளார். Thanks… S.R-




































  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சுவிஸில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பொதுமக்களுடனான சந்திப்பு- (விரிவான செய்தி.. புகைப்படங்களுடன்)"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates